tamilnadu

இந்நாள் இதற்கு முன்னால்

1783  - காண்டினெண்டல் ஆர்மி என்றழைக் கப்படும், (உண்மையில் அமெரிக்காவின் முதல் ராணுவமான) அமெரிக்க விடுதலைப்படை கலைக்கப்பட்டது. அமெரிக்காவில் குடியேற்றங்களை இங்கிலாந்து ஏற்படுத்தியபோது அங்கு ராணுவமெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான செவ் விந்தியர்களுடனான மோதல்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடியேற்றமும் தங்களுக்கென்று குடிப்படைகளை உருவாக்கிக்கொண்டன. நிரந்தர வீரர்களற்ற இவற்றில், தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்,போர்க்காலங்களில்மட்டும் வீரர்களாகப் பணியாற்றுவார்கள். பிற ஐரோப்பியக் குடியேற்றங்களுடன் மோதல்கள் ஏற்பட்டு, 1754-63இல் நடைபெற்ற பிரெஞ்சுக்காரர்களும், செவ்விந்தியர்களும் இணைந்து மோதியபோரைத் தொடர்ந்து, கொஞ்சம் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்காவில் நிறுத்தப்பட்டன. குடியேற்றங்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள படைக்கு, குடியேற்றங்களிடம் வசூலித்து ஊதியமளிப்பதற்காகவே 1765இன் முத்திரைச்சட்டம் இயற்றப்பட்டது. தங்களைப் பற்றிய முடிவுகளில் தலையிட தங்களுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பங்களிக்காத நிலையில், வரி கேட்பது நியாயமில்லை என்ற முரண்பாடே அமெரிக்க விடுதலைவரை இட்டுச்சென்றது. முரண்பாட்டின்தொடக்கமே ராணுவத்திற்கு ஊதியம் அளிப்பதில்தான் என்பதால், இங்கிலாந்து ராணுவம் குடியேற்றங்களுக்கு எதிராகவே இருந்த நிலையில், அதனுடனேயே போரிடவேண்டியதாக அமைந்த விடுதலைப் போருக்கு, அனைத்துக் குடியேற்றங்களும் படைதிரட்டிஅனுப்பவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட (முறையான ராணுவமல்லாத!) குடிப்படையே, அமெரிக்க விடுதலைப்படையாக, ஒரு கட்டத்தில் சுமார் 80 ஆயிரம் வீரர்களைக்கொண்டு போரிட்டு, வெற்றியும்பெற்றது. படையினருக்கு போரின்போது வழங்கப்பட்ட ஊதியத்தில் பாதியை, போருக்குப்பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்குவதாக1780இல் கூட்டணி நாடாளுமன்றம் உறுதியளித்திருந் தது. 1783 செப்டம்பர் 3இல் ஏற்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின்படிதான் போர் முறைப்படி முடிவுக்குவந்தாலும், 1781அக்டோபரில் யார்க்டவுன் முற்றுகையில் தோல்வியடைந்ததுமே, இங்கிலாந்து பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்துவிட்டதால், போரின் தீவிரம் குறைந்துவிட்டது. இதனாலும், கடுமையான நிதிநெருக்கடியினாலும் வீரர்களுக்குப் பல மாதங்கள் ஊதியமளிக்கப்படாததுடன், ஓய்வூதியமும் குறைக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணி நாடாளுமன்றத்தைக் கவிழ்க்க படை யினர் முயற்சித்த நியூபர்க் சதி 1783 மார்ச்சில் வெளியானது. இவற்றால், அமெரிக்காவுக்கு ராணுவமே வேண்டாம் என்று கூட்டணி நாடாளுமன்றம் முடிவெடுக்க, போரில்லாத காலத்திலும் ராணுவம் தேவை என்று வாதிட்ட வாஷிங்டன், கடைசியாக வைத்த 900 வீரர்களாவது இருக்கட்டும் என்ற கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வெறும் 30 பேரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள படைகளுக்கு விடைகொடுக்கும் செய்தியை நவம்பர் 2இல் செய்தித்தாள்களுக்கு வாஷிங்டன் அளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3இல் படைகள் கலைக்கப்பட்டன.

===- அறிவுக்கடல்===