ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அறிவித்தது.
இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதை தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம், 65 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில், திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.