ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 13-வது ஓவரின் போது சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் 'மன்கெட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்தது தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. கிரீஸை விட்டு பட்லர் வெளியே வந்தவுடன், தனது பந்துவீச்சு ஆக்ஷனை நிறைவு செய்யாமல் அஸ்வின் மன்கெட் அவுட் செய்தார்.
ஐசிசி விதிப்படி இது சரியானது என்கிற போதிலும் கிரிக்கெட் ஸ்பிரிட்படி, முதலில் எச்சரிக்கையும் அதன்பின் பட்லர் தொடர்ந்தால் மன்கட் அவுட் செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு, சர்வதேசப் போட்டி ஒன்றில் அஸ்வின் மன்கெட் முறையில் வீரர் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இது தொடர்பாக நெட்டிசன்கள் அப்போது அஸ்வினை விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு அஸ்வின் அளித்து விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அதில், மன்கெட் அவுட் குறித்த நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு அஸ்வின் பதில்: ''நான் மட்டும் ஒவ்வொரு நாளும் பந்து வீச்சாளராக விதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்(கீரீஸை தாண்டாமல் பந்துவீச வேண்டும்) . ஆனால் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஏன் ரன்கள் அடிக்க வேண்டும்'' என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர், அஸ்வினிடம் நீங்கள் மன்கெட் முறையில் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன்னர், அவரை எச்சரித்திருக்கலாமே என்று கேட்பார்?
அதற்கு அஸ்வின் , ''பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிப்பதற்கு முன்னர் பந்துவீச்சாளர்களிடம், நான் சிக்ஸர் அடிக்கப் போகிறேன் என்று எச்சரிக்கிறார்களா?'' என்று கேட்டார்.
இந்த விளக்கம்தான் இப்போது வைரலாகி வருகிறது. ஐசிசி விதிமுறைப்படி அஸ்வின் நேற்றைய ஆட்டத்தில் ஜாஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்ததில் தவறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.