tamilnadu

img

பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பெஞ்சால் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழ்நாட்டுக்கு கேரளம் துணையாக நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பெஞ்சால் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு கேரளம் துணையாக நிற்கும். இந்த சவாலான நேரத்தில் எங்கள் அண்டை மாநிலத்திற்கு துணை நின்று, தேவையான உதவிகளை வழங்க கேரளம் தயாராக உள்ளது. நாம் ஒன்றிணைந்து இந்த பேரிடரை முறியடிப்போம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: "தமிழ்நாட்டு மக்கள் கேரளத்தின் ஆதரவையும், உதவி செய்ய முன்வந்ததையும் பெரிதும் மதிக்கிறார்கள். நாம் ஒன்றாக மீண்டும் கட்டியெழுப்புவோம், வலுவாக வெளிப்படுவோம்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.