சென்னை, ஜூலை 4- காவிரிப் படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஜுலை 9ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. காவிரிப் படுகை கூட்டியக்கத்தின் சார்பில் ஜுலை 2ந் தேதி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து இப்பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் தி.மு.க உறுப்பினர்களால் இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. ஜுலை 3ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் இப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை தமிழக சட்ட அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் எங்கேயும், எப்போதும் ஆய்வுக்கு உட்பட தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளதை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்கும் வகையில் 9ந் தேதி அறிவித்திருந்த பேரணி ஒத்தி வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 1.காவிரி படுகையை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவித்து தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2. அமைச்சர் அறிவித்த அடிப்ப டையில், உடனடியாக அரசாணை வெளியிடப்பட வேண்டும். 3.இத்திட்டங்களை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள், விவசாயிகள், அமைப்பினுடைய நிர்வாகிகள் என பல ஆயிரக்கணக்கானோர் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். 4.ஆய்வுக்கு உட்பட அரசு அனு மதிக்காது என அறிவித்திருப்பதால் மேற்படி திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் அனைத்து இயந்தி ரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் காவிரி டெல்டா பாதுகாக்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழக அரசு மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் கூடி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைக்கு திட்டமிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.