சென்னை:
அதிமுகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து தமிழக பாஜகவில் குழப்பம் நீடிக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை தலைமை தான் முடிவு செய்யும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி தொடரவேண்டும் என்று ஒருதரப்பும், கூடாது என்று மற்றொரு தரப்பும் பாஜக தலைமையிடத்தை வலியுறுத்தி வருவதால் பாஜக தலைவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த இரண்டு தொகுதிகளிலும்,பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். புதுச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று ஆருடம் கூறினார்.இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜனதா ஆதரவு குறித்து வெளியிடவில்லை என்பது பெரிய விசயம் அல்ல. எல்லோரும் ஒரே கூட்டணியில்தான் உள்ளனர். இதில் எந்த பிரச்சனையும் கிடையாது. கட்சி தலைமை அறிவித்ததுபோல் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என்றார் அவர்.