சென்னையில் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவரது பெற்றோர்கள் அது குறித்து சென்னை, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் முறையாக புகாரும் அளித்திருக்கிறார்கள். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், குற்றாவாளியை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு பதிலாக, அம்மாணவியின் பெற்றோரை காவல் நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியும், குற்றவாளி பெயரை ஏன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என மிரட்டியும், இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து தாக்கியும் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படி சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளரின் நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறைக்கும், அரசுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளரின் இத்தகைய சட்டவிரோத, மனித உரிமைகள் மீறிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தனது மகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டதை அறிந்த ஏழை கட்டிடத் தொழிலாளியான அவரது தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு அச்சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். உடனடியாக அன்றே அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமலும், குற்றவாளியை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுக்காமலும் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் அச்சிறுமியின் பெற்றோரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் உட்கார வைத்து சிறுமியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அலைக்கழித்ததோடு, புகாரில் ஏன் சதீஷ் என்பவரின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள் எனவும் மிரட்டி அடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
பொதுவாக, இத்தகைய புகார் வரும் போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டிய நடைமுறைக்கு மாறாக, பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவரது பெற்றோர்களையும் மிரட்டியதோடு மூன்று நாட்கள் வரை வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தியிருக்கிறது காவல்துறை. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது, போக்சோ சட்டம் தொடர்பாக தகவல் சொல்ல முடியாது எனவும் மறுத்திருக்கிறார்.
எனவே, சட்டத்தை மீறி தன்னிச்சையாக நடந்து கொண்ட அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, கடமையை நிறைவேற்ற மறுத்தது, புகார் கொடுத்தவர்களை தாக்கியது, பாலியல் புகாருக்கு உள்ளான குற்றவாளியை பாதுகாத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை பிரச்னையில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சையும், மனநல ஆலோசனையும் உடனடியாக வழங்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென காவல்துறை உயர் அதிகாரிகளையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.