சென்னை
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெற வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.24) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோட்டார் வாகன சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை பெற்ற ஓட்டுநர் உரிமங்களை செல்லாததாக மாற்றுகிறது. வாகனங்கள் பதிவு, புதுப்பித்தல், தகுதிச்சான்று, காப்பீடு கட்டணங்கள் 10 மடங்கிற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு குற்றங்களையும் கிரிமினல் குற்றமாக கருதி தண்டனை வழங்கவும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் அச்சட்டம் வழிவகை செய்கிறது.எனவே, மோட்டார் வாகக சட்டத் திருத்தத்தைதிரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு சாலைபோக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் இருச்சக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கங்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மு.சண்முகம் எம்.பி.,
தொமுச தலைவர் சண்முகம் எம்.பி., “கட்டணம், அபராதத்தை அதிகரிப்பதால், ஆர்டிஓ பணிகளை தனியாரிடம் கொடுத்தால்விபத்து குறையுமா? என்பன உள்ளிட்ட 10கேள்விகளை அரசிடம் எழுப்பினோம். அதற்கு முறையான பதில் இல்லை. நாடாளுமன்றத்தில் போதிய அளவு விவாதிக்காமல், தனக்குள்ள பெரும்பான்மையை வைத்து மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தை செய்துள்ளது. இதனை தொழிலாளர்கள் ஏற்கவில்லை” என்றார்.
கே.ஆறுமுகநயினார்
தமிழ்நாடு சாலைபோக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கே.ஆறுமுகநயினார், “மோட்டார் வாகனத்துறையை முற்றிலும் கார்ப்பரேட்மயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது. ஆர்டிஓ அலுவலகம் முற்றிலும் தனியார்மயமாகும். வாகன பதிவு, புதுப்பித்தல், ஓட்டுநர்உரிமம், இதர உரிமங்கள் அனைத்தும் தனியாரிடம்தான் எடுக்க முடியும். எனவே,மோட்டார் வாகன துறையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இணைந்து போராடுகிறோம்” என்றார்.
இந்தப்போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி. குமார், துணைத் தலைவர் எம். சந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம். சிவாஜி, பொருளாளர் ஏ.எல். மனோகரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.தயானந்தம் மற்றும் சுப்புராமன், நடராஜன் (எல்பிஎப்), மு.சம்பத், க.சுந்தரம் (ஏஐடியுசி), சேவியர் (ஐஎன்டியுசி), ஆசாத் (எஸ்டிடியு), எம்.முரளி(ஓட்டுநர் பயிற்சி பள்ளி கூட்டமைப்பு), ஜானகிராமன் (இருச்சக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.