திருவனந்தபுரம்:
கேரளாவால் செயல்படுத்தப்பட்ட உயர் தொழில்நுட்ப பள்ளி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி ஆயோக்கின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் மனிதவளப் பிரிவில் சிறந்த மாதிரிகளின் சுருக்கமான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கேரள பொதுக் கல்வித்துறையின், ‘கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்ப ஆணையம் (KITE)’ இடம்பிடித்துள்ளது. உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பயிற்சி, உள்ளடக்க மேம்பாடு, இணைப்பு, மின் கற்றல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கல்வி, ஆதரவு-மேலாண்மை அமைப்புகள், மின்-ஆளுமை மற்றும் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்புகள் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்காக கைட் (KITE)நிதி ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியல், புதுமை, தொழில்நுட்பம், பாலின சமத்துவம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 23 திட்டங்களை நிதி ஆயோக் பட்டியலிடுகிறது. மேலும் அவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பின்பற்றப்படலாம். பள்ளி கட்டிடங்களை நவீனமயமாக்குதல் மற்றும் பள்ளிகள் முழுவதும் டிஜிட்டல் கற்றல் வசதிகளை வழங்குதல் போன்ற தலையீடுகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. கோவிட் காலத்தில் கல்வித்துறையில் கேரளம் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து மட்டுமே அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்டில், தி பீல் ஆஃப் பர்ஸ்ட் பெல் என்ற தலைப்பில் யுனிசெப்பும் ஒரு ஆய்வை வெளியிட்டது.
பள்ளி திறக்க முடியாவிட்டாலும், ஜூன் முதல் தேதியன்று விக்டர்ஸ் சேனலில் ‘முதல் பெல்’ டிஜிட்டல் வகுப்பை தொடங்கியது நிதி ஆணையத்தின் கவனத்தை ஈர்த்தது. பொது கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க இலவச மென்பொருளைப் பயன்படுத்தி மாநிலம் ரூ.3,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ட்வீட் செய்துள்ளார்.