tamilnadu

img

தமிழக அரசுக்கு நிதி வளங்களை திரட்டுவது எப்படி? சி.ரங்கராஜன் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை

சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மாநில அரசுக்கு வருவாய் ஆதாரங்கள் குறைந்துள்ள நிலையில், மக்களின் நலன்களை பாதுகாத்துக் கொண்டே பல்வேறு வழிகளில் நிதி வளங்களைத் திரட்ட முடியும் என்று தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை கூறியுள்ளது. 

கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு  செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழக அரசு அமைத்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி விரிவான ஆலோசனைகளை அளித்துள்ளது. அதில் மாநில அரசுக்கான வளங்களைத் திரட்டல் என்ற பொருளில் கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:

மாநில அரசிற்கு வளங்களை திரட்டல்:
பல ஆண்டுகளாக மாநிலங்களின் நிதிசார் ஆதாரங்கள் மத்திய அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மத்திய, மாநில நிதி உறவுகளில் அதிகாரங்களை பரவலாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம். இப்பிரச்சனையில் உடன்படும் மாநிலங்களுடன் இணைந்து தமிழக அரசு இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி மற்றும் நிதி நிலுவையினை விரைவில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி அமைப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். மாநிலங்களுக்குச் சாதகமாக மாற்றப்படவேண்டும்.

தமிழகத்தில் கிரானைட், கார்பைட், சுண்ணாம்புக்கல், மணல், தாது மணல், மைக்கா உள்ளிட்ட பல கனிம வளங்கள் உள்ளன. சமீப காலமாக மாநிலம் முழுவதும் சுரங்கத் தொழில் முடங்கிப் போயுள்ளது. தாது மணல் எடுப்பதும் நின்றுள்ளது. டாமின் நிறுவனம் செயல்படாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில்உள்ளது. கனிம வளங்களை முறைப்படுத்தி ஊழல் - முறைகேடுகள் இல்லாமல் அரசு நிர்வகிப்பதன் மூலம் பல லட்சம் கோடி அரசுக்கு வருமானம் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக,  திரு. உ. சகாயம் ஐ.ஏ.எஸ்.  தலைமையிலான குழு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில்  மதுரை மாவட்டத்தில் மட்டும்  கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்யும் உரிமத்தை தனியாருக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ. 1.10லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில், தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் இது ஒரு பெரும் தொகையாக இருக்கும். எனவே,

அ).    சகாயம் குழு அறிக்கையின் ஆலோசனைகளை பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். 

ஆ)கனிம வளங்கள் மீது விதிக்கப்படும் அரசின் உரிம கட்டணத்தை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும்.

இ) Major Minerals-களுக்கு தீர்மானிக்கப்படும் ராயல்டி தொகையினை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும்.

ஈ)தாது மணல் எடுப்பதை மணவாளக்குறிச்சியில் உள்ள இந்தியன் ரேரஸ்ட் லிமிட்டெட் நிறுவனமும், டாமின் நிறுவனமும் இணைந்து  செயல்படுத்த வேண்டும்.

உ) தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் அளவு கடந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. சட்டவிரோதமாக செயல்படுத்தப் படும் மணல் குவாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்  மணல் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.   அதே சமயம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், செகன்ட் சேல்ஸ் மற்றும் லோடிங் காண்ட்ராக்ட் மூலம் நடத்தும் முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, பொதுப்பணித்துறையே நுகர்வோருக்கு நேரடியாக மணல் விற்பனை செய்தால்  முறைகேடுகளை தடுக்க முடியும், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கச் செய்யவும் முடியும்.

கடன் மாற்று (Debt Swap) திட்டம்: நீண்ட கால பொது செலவு மேலாண்மையின் பகுதியாக, நிபுணர்களின் உதவியுடன் உயர் வட்டி விகிதத்தில் கடந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன்களை சமகாலத்தில் குறைந்துள்ள வட்டிவிகிதத்திலான கடன் களுக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வகுக்கலாம்.. இத்தகைய திட்டங்கள் மத்திய அரசால் 2002-2005 காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

சாராய விற்பனை வரியை அல்லது கலால்வரியை உயர்த்தலாம். இது குடிப்பழக்கத்தை குறைக்க உதவும். அரசுக்கும் அதிக வரி வருவாய் தரும்.

பல பத்தாண்டுகளாக உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசிடம் ஏராளமான சலுகைகளை பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் இந்நிறுவனங்களினால் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி போன்ற அம்சங்களில் எத்தகைய பலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சலுகைகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு என்ற வகையில் ஒரு வெள்ளை அறிக்கை (சமூக லாப நஷ்ட கணக்கு) அவசியம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டநிலத்தின் குத்தகை தொகை உயர்த்தப்பட வேண்டும், இதர சலுகைகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்    கீழ்க்கண்ட அம்சங்களை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்:

வெளி நாடுவாழ் இந்திய உழைப்பாளி மக்கள் நமது நாட்டுக்கு அனுப்புகிற கணிசமான அந்நியச் செலாவணியில் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள உழைப்பாளி களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு பட்டியலின் ஷரத்துக்கள் 28 மற்றும் 81-படி இந்தியா திரும்பும்  வெளிநாடு வாழ் இந்திய புலம்பெயர் தொழிலாளிகளின் நலன்காப்பது  - அவர்களது பயணச்செலவு, அவர்கள் தனிமைப்படுத்தப்படும் கால பராமரிப்பு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  ஆகியவை மத்திய அரசின் பொறுப்பு.ஒன்று, மத்திய அரசு இப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாநிலங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் செலவை ஏற்றுக்கொண்டு மாநிலங்களுக்கு போதுமான நிதி தரவேண்டும்.

மாநிலங்களின் ஃபிஸ்கல் பற்றாக்குறை வரம்புகள் உயர்த்தப்படவேண்டும். வரும் மூன்று ஆண்டுகளுக்கு FRBM வரம்புகள் அமலாக்கப்படக்கூடாது. குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு, மாநிலங்களுக்கு கடன் வழங்க வேண்டும். 

பெரும் தொற்று அனைத்து நிதி நிலைமை களையும் மாற்றியுள்ள பின்னணியில், 15 ஆவது நிதி ஆணையத்திற்கு ஏற்கனவே மாநிலஅரசுகள் சமர்ப்பித்திருந்ததை திரும்ப பெற்றுக்கொண்டு, உரிய திருத்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.