tamilnadu

img

ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க டிச.18ல் அரசாணை பேச்சுவார்த்தையில் தகவல்....

சென்னை:
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்கான அரசாணை டிச.18 அன்று வெளியிடப்படும் என்று பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதிய பணப்பலன்களை வழங்காமல் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதனையொட்டி செவ்வாயன்று (டிச.15) தேனாம் பேட்டையில் தொழிலாளர் நல இணை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், சென்னை கிளைச் செயலாளர் வீரராகவன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2019 வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை  (பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், ஒப்படைப்பு தொகை) வழங்க டிச.18 அன்று அரசு ஆணை வெளியிடப்படும் என்ற மேலாண் இயக்குநர்கள் உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிச.21 அன்று நடைபெறுகிறது.