சென்னை:
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 25 ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சரும், துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வேண்டும் என்று திமுகதலைவர் ஸ்டாலின், சிபிஎம்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள்விடுத்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் போராட்டக் களம் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட் டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்க
ப்படும் என்றும் அந்தகாலியிடங்களுக்கு புதியமருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய மருத்துவர்களை நியமிக்கும் பணி உடனடியாக தொடங்கும் என்றும் மிரட்டல் விடுத்தார்.இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 50 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மறுபுறம், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பவர்கள், பணிக்கு வரமாட்டோம் என பிடிவாதமாக இருந்தால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது” என்றுஎச்சரித்துள்ளார். அங்கீகரிக்கப்படாத சங்கத்தைச் சேர்ந்தவர்களே போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.அரசின் மிரட்டல் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலை மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.100 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரை, வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு மருத்துவர்கள் அனைவரும்ராஜினாமா செய்வது குறித்துஆலோசித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தேனியில் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கற்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புநடந்த போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓய்வூதியர்கள் ஆதரவு
தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்தவே அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமும் சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் நடைபெற்று வருகின்றது. ஆனால், மாநில அரசு பாராமுகமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் ஏழை நோயாளிகளின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இதில் அரசு கவுரவம் பார்க்காமல் போராட்டம் நடத்தும் அமைப்பை அழைத்து பேச வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.