சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கிடைத்த புத்தகங்கள்- பள்ளி கள், கல்லூரிகள், நூலகங்களுக்கு வழங் கப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது பூங்கொத்து-சால்வை வழங்குவதை சம்பிரதாய நிகழ்வாக பின் பற்றி வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று வைத்த வேண்டுகோளை அடுத்து ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள் வழங்குகின்றனர்.கடந்த 5 ஆண்டில் மட்டும் அவருக்கு கிடைத்த சுமார் 1 லட்சம் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு வழங்கி வருகிறார். அவருக்கு தினமும் 50 முதல் 75 புத்தகங்கள் வரை வருவதால் அவற்றை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நூலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கிறார்கள். இதனால் அங்கு ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் சேர்ந்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் உள்பட பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்கள் தேவை என்று பலர் கோரிக்கை வைத்து அவருக்கு கடிதம் எழுதுகின்றனர். அதை ஏற்று உடனுக்குடன் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அண்மையில் கூட எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு 1000 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நூலக இணை இயக்குநர் கே.செல்வகுமார், துணை நூலகர் கணேஷ் ஆகியோர் அறிவாலயத்துக்கு வந்து 1000 புத்தகங்களை பெற்றுச் சென்றனர். பொக்ரைன் நாட்டு தமிழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 2000 புத்தகங்களை திருச்சி சிவா எம்.பி. மூலம் கொடுத்து அனுப்பினார். இதேபோல் ஒவ்வொரு கிராமப்புற நூலகங்களுக்கும் புத்தகங்களை வழங்கி வருகின்றார்.