சுகாதாரத் துறையில் 1,231 செவிலியர்கள் நியமனம்
சென்னை, செப்.22- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திங்களன்று (செப்.22) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 1,231 பேருக்கு கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 8,713 துணை சுகாதார நிலையங்கள், நகர்புறங்களில் 2368 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்ற வழக்கின் தடையாணை காரணமாக காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, 25.7.2023 முன்னர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,417 காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையில்... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கு நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான பொற்காலமாக கருதப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேம்பாடு காவல்துறை சார்பில், ரூ.97 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 6 காவல்துறைக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பாலவாக்கத்தில் ரூ.21 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சிக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ரூ. 1 கோடியே 4 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய மண்டல அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ. 2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.3 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சமூக நீதி பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும், ரூ. 61 கோடியே 44 லட்சம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ள 8 சமூக நீதி விடுதிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மேயர் ஆர். பிரியா, காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.