ஆன்லைன் மூலம் புலிக்குட்டிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியவகை விலங்குகளை வேட்டையாடவும் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூரைச் சேர்ந்த இளைஞர்கள் அறிய வகை உயிரினங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என விளம்பரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது குறித்து விளம்பரம் செய்வதாக தகவல் வெளியானது. அதன் படி தங்களிடம் புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாகவும் 25 லட்சம் ரூபாய்க்கு அது கிடைக்கும் எனவும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிட்டு தங்களது அலைபேசி எண்ணையும் அதனோடு இணைத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வனத்துறையினர் ,அதில் கூறப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்து விசாரித்ததில் விளம்பரம் செய்தது திருவண்ணாமலை ஆரணியை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பதும் அவர் வேலூரில் வசித்து வந்ததையும் கண்டுபிடித்தனர். அவர் தங்கி இருந்த இடத்திற்கு சென்று வனத்துறையினர் சோதனை செய்ததில் புலிக்குட்டிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் சென்னை அம்பத்தூர் பகுதியில் இருந்தவருடன் இணைந்து செல்லப்பிராணிகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இந்நிலையில் புலிகள் விற்பனை செய்வது தொடர்பான விளம்பரம் உண்மையா அல்லது பணம் பறிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்த மோசடி விளம்பரமாக என வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.