tamilnadu

img

மகாபாரதப் போரை தாண்டிய விவசாயிகளின் போர்.... கள்ளக்குறிச்சியில் பெ.சண்முகம் பேச்சு....

கள்ளக்குறிச்சி:
மகாபாரதப் போர் 18 நாள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால்அதையும் தாண்டி 18 நாட்களுக்குமேலாக இந்திய விவசாயிகளின் வேளாண்மை பாதுகாப்பு பாரதப்போர் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

காவல்துறையினர் அராஜகம்
போராட்டத்தை நடத்தவிடாமல் காவல்துறையினர் தொடர்ந்து அலைக்கழித்து வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களிடத் தொடங்கிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கைது செய்ய முயன்றதால் அங்குதள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் போராட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், மகாபாரதப் போரை தாண்டி 18நாட்களை கடந்து விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மத்திய அரசுக்குமான போராட்டம் நடைபெற்று வருகிறது. 8டிகிரி, 9 டிகிரி என எலும்பை உருக்கும் குளிரில் விவசாயிகள் உயிரை பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இதுவரை 16 விவசாயிகள் வீரத் தியாகம் செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் 2020 மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளோடு இந்த மசோதாவை ஆதரித்த தமிழ்நாடு அரசை நடத்தும் எடப்பாடி பழனிசாமி இந்திய விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இச்சட்டங்களை ஆதரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.தமிழக காவல்துறை இயக்குநர் எங்கேயும் யாரையும் கைது செய்ய மாட்டோம் என கூறியிருக்கும்போது விழுப்புரத்தில் உள்ள ஐ.ஜி மட்டும் தனிப் பாதையில் செல்வது ஏன்?. அமைதியாக நடைபெறும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் திசை திருப்ப நினைப்பது யாருடைய நலனுக்காக? இவர்இந்திய விவசாயிகளுக்காக இருக்கிறாரா என கேட்கிறோம். முறைப்படி அனுமதி பெற்று இடம் ஒதுக்கி பல்வேறு இடங்களில் அமைதியாக போராட்டம் நடைபெறும்போது கள்ளக்குறிச்சியில் மட்டும் இடம் ஒதுக்காமல் விவசாயிகளை அலைக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தான்தோன்றித்தனமாக...
ஒரு மசோதாவை சட்டமாக்கமுனையும்போது நாடாளு மன்றத்தில் விவாதத்துக்கு விடுவது மரபு. ஆனால் தான்தோன்றித்தனமாக நிறைவேற்றிய மத்திய அரசை கண்டிக்காமல் அரசு விழாக்களை பயன்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது ஜனநாயக விரோதமாகும். மத்திய அரசின் ஆளும் கூட்டணியில் உள்ளகட்சிகளின் மந்திரிகளே இச்சட்டத்தை எதிர்த்து ராஜினாமா செய்கின்றனர். வெளிநாடுகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் எடப்பாடி விவசாயிகள் விரோத சட்டங்களை ஆதரித்துப் பேசுவது யாருடைய நலனுக்காக? அதிமுக எம்பிக்கள் ஆதரிக்காமல் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் இச்சட்டமே நிறைவேறி இருக்காது.

உணவுப்பஞ்சம் ஏற்படும்
ஒரு சென்ட் நிலத்தைக்கூட புதிதாக யாராவது உருவாக்க முடியுமா? இருப்பதுதான் நிலம். இதனை முறையாக பயன்படுத்தாமல் கார்ப்பரேட்டுகளிடம் இந்திய விவசாயத்தை ஒப்படைக்கின்றனர். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும்.அரசு உணவு தானிய கொள்முதலை கைவிடுகிறது. இந்தியாவில் 75 கோடி மக்கள் ரேசன் கடையை நம்பியுள்ளனர். இந்த உணவு உரிமை மீது மோடி அரசும், அதனை ஆதரிக்கும் எடப்பாடி அரசும் கை வைக்கின்றன. இதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இச்சட்டத்தில் பதுக்கல் என்றவார்த்தையே எடுக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்களை குவித்துவைத்து செயற்கை பற்றாக்குறை யை ஏற்படுத்துவதற்கு இவர்கள் வைக்கும் பெயர் சேமிப்பாம்.

விவசாயிகளுக்கு அழைப்பு
இன்றைய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும். இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் முழு பொறுப்பு. இப்படி தொடரும் போராட்டத்திற்கு இதுவரை பங்கேற்காத விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பங்கேற்கவேண்டும் என பெ.சண்முகம் கேட்டுக்கொண்டார்.இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்ஏ.வி.ஸ்டாலின்மணி, செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், டி.எம்.ஜெய்சங்கர், எம்.ஆறுமுகம்,  ஆர்.சீனுவாசன், எம்.செந்தில், டி.எஸ்.மோகன், மாவட்டத்தலைவர் வி.ரகுராமன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அப்பாவு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

;