tamilnadu

img

தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டத்தோடு ‘வீதி விருது விழா’ சென்னையில் துவங்கியது

சென்னை, ஜன. 11- சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும், சென்னை சுற்றுலாவும் இணைந்து மக்கள் ஒற்று மையை பறைசாற்றும் 7ஆம் ஆண்டு  வீதி விருது விழா லயோலா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (ஜன. 11) துவங்கியது. நாட்டுப்புற கலைகளோடும், கலை ஞர்களின் வாழ்வோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள காட்சித் தகவலியல் துறை, தமிழ்த்துறை, வரலாற்றுத் துறை மற்றும் கௌசால் கேந்திரா, மாணவர் அரவணைப்பு மையம் ஆகிய துறைகளின் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் பிரான்சிஸ் சேவியர், நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். “கீழடி நம் தாய் மடி” என்ற தலைப்பில் தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் ஐஏஎஸ் பேசினார்.

170 கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள்

‘சொல்ல மறந்த கலைகளின் சோலைவனத் தோரணம்’ என்ற தலைப்பில் சர்வதேச புகழ் குவைத் தனஸ்ரீயின் பலகரகம், ஜோலார்பேட்டை தேடல் கலைக்  குழுவின் சிங்கார ெஜண்டமேளம், உலக சாதனையாளர் கலை இளமணி  அனுஷ்யா ஸ்ரீயின் அடுக்கு கரகம், ஆசிய விளையாட்டு கலைப்புயல் சதீஷ்பாண்டியின் கிராமிய இசை, புதுக்கோட்டை மாவட்ட திருநங்கை வர்ஷாவின் கிராமிய கலைநிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட முருகன் குழு வினரின் ‘பூத கபால ஆட்டம்’, கோவிந்தராஜின் ‘மரக்கால் சாகசம்’, திருச்சி அவ்வை சண்முகியின் ‘ஆனந்த தாண்டவம்’, கலப்பை கலைக்குழுவின் மனநலம் குன்றிய குழந்தைகளின் குதூகலம், கண் பார்வையற்ற சிறுவர்களின் ‘சிலம் பாட்டம்’, திருப்பத்தூர் செ.ரஜினி குழு வின் ‘தப்பாட்டம்’ என 170 கலைக்  குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற் றன. “சாமன்ய கலைகளே சரித்திரத் தின் புரட்சி” என்ற தலைப்பில் மக்க ளவை உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் பேசினார்.

சமூக அக்கறை திரைப்படங்களுக்கு பாராட்டு

சாதியின் கோரமுகத்தைத் தோலு ரித்த வெற்றிமாறனின் அசுரன் குறித்து  ஜி.செல்வாவும், எளிய மக்கள் வழி அர சியலை பகடி செய்த ஆதியன் ஆதிரை யின் இரண்டாம் உலகப்போரின் இரண்டாம் குண்டு குறித்து வழக்கறி ஞர் ஜீவலட்சுமியும், தனி மனிதனின் உண்மையாய் பார்த்தீபனின் ஒத்த செருப்பு குறித்து திருநங்கை சுதா வும், ஒரு இசைக்குழுவின் வாழ்வைச்  சொன்ன மாரிமுத்துவின் தொரட்டி குறித்து இதழியல் nஜன்னி பாரதியும், கல்லூரிக் கல்வி மீது கவனம் வைத்த  அன்பழகனின் அடுத்த சாட்டை குறித்து புரட்சியாளர் சுந்தரவள்ளியும் பேசினர். இந்த திரைப்பட இயக்கு நர்களுக்கு சேரன் விருது வழங்கி கவுரவித்தார்.

இரணியன் கூத்து

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மு.ராசேந்திரன் கலாச்சாரம் காக்கும் கலைகள் குறித்து பேசினார். ரித்திஸ்னி கலைக்கூடத்தின்  “நம் பிக்கை மூடநம்பிக்கை” என்ற நாடக மும், ஈரோடு நாடகக்  கொட்டகையின் “சொல்ல முடியாத வலிகள்” வீதி நாட கமும், ஸ்ரீ அருள்ஜோதி நாடக சபா வின் கிராமிய ‘தெருக்கூத்து’, பிக்பாஸ்  புகழ் ராமகிருஷ்ணனின் ‘தெருக் கூத்து’, நல்லான்பிள்ளை கீதாஞ்சலி கலைக்குழுவினரின் ‘இரணியன் கூத்து’, செல்லம் கலாலயம் நாடகக்  குழுவின் ‘சிப்பாய்கள்’ நவீன நாடக மும், தூய நெஞ்சக கல்லூரியின் மாற்று  நாடக இயக்கத்தின் ‘சரண் தாஸ் திருடன்’ ஆகியவை நடைபெற்றன.  

இன்று கலைக்குழுக்கள் பேரணி

இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமை (ஜன. 12) காலை 8.30  மணிக்கு வள்ளுவர் கோட்டத்தி லிருந்து லயோலா கல்லூரி வரை  நடைபெறும் 37 மாவட்ட கலைக்குழுக்  களின் அலங்கார ஊர்வலத்தை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் துவக்கி வைக்கிறார். 

காளீஸ்வரன் பேட்டி

வீதி விருது விழாவின் நோக்கம் குறித்து பேராசிரியர்  காளீஸ்வரன் கூறு கையில் தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் சிறு சிறு குழுக்க ளாகப் பிரிந்து கிடக்கும் நாட்டுப்புற கலைஞர்களை ஒரு குடையின் கீழ்  ஒருங்கிணைப்பதும்,. நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாப்பதும், அவர்களின் திறமை களை வெளிக்கொண்டு வருவதும், நலிவடைந்து வரும் நாட்டுப்புற கலை ஞர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்கு வழிகாட்டுவது, உதவு வது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசிடமிருந்து வரவேண்டிய உதவி களையும் சலுகைகளையும் உரிமை களையும் பெற்றுத் தருவது. நாட்டுப்  புற கலைஞர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி கிடைக்க வழிவகை செய்  வதும் இந்த விழாவின் நோக்கமாகும் என்றார். நாட்டுப்புற கலைஞர்களின் கூட்டமைப்பு உருவாக வீதி விருது விழா துணைபுரிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சிலம்பாட்ட பயிற்சி அளித்திடுக

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  நாட்டுப்புறக் கலைக் குழுக்கள், கலை ஞர்களைப் பதிவு செய்ய வழி வகுக்க வேண்டும். கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.  ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் (பள்ளி, கல்லூரி) நாட்டுப்புறக் கலை கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நாட்டுப்புறக்கலைகளை ஆவணப்படுத்த வேண்டும். ஓய்வூ தியம் பெறும் வயதை ஆண்களுக்கு 50 ஆகவும் பெண்களுக்கு 40 ஆகவும்  குறைக்க வேண்டும். அரசு விளம்ப ரத்துறை நாட்டுப்புற கலைஞர்களின் திறமையைப் பயன்படுத்த வேண்டும்.  பள்ளி கல்லூரிகளில் சிலம்பாட்டப் பயிற்சி கற்றுக் கொடுக்க ஆசிரியர் களை நியமிக்க வேண்டும். மாநிலம் தழுவிய நாட்டுப்புறக் கலைகளின் ஆய்வு மையம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் காளீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
 

;