குமிழ் குமிழாய் உடைந்து நுரைத்தபடி அலைகள் வெளியேற்றுகிற கிளிஞ்சல்கள் போல சப்தங்களில்லாமல் கனவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளிப் பிள்ளைகள். கொரோனா காலமென்றில்லாமல் காலங்கால மாய் கனவுகளுக்கும் அன்றாட வாழ்க்கைப்பாட்டிற்கும் இடையில் வயிற்றை நிரப்பிக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கும் கால்களுக்கு எல்லாக் காலமும் ஒன்று தானே. கண்களுக்குப் புலப்படாத கிருமிக்கும், பள்ளியிலிருந்து பரிதாபமாக விடுபடு கிற பிள்ளைகளுக்கும், பசியாறப் பிழைக்கிற கூட்டத்திற்கும் இடையில் எட்டப்படாத கனவு போல் கலையவிருந்த ஒரு மாணவக் குடும்பத்தைக் கரைசேர்த்த உண்மைக் கதையிது.
எல்லாத் தேர்வுகளிலும் உச்சத்தில் தேர்ச்சி பெறுகிற மாணவன் கடலரித்து தேய்ந்த பாறையைப் போல சமீப காலமாய் படிப்பில் நாட்டமில்லாமல் நலிந்து கொண்டே போவதைக் கண்ணுக் கருத்துமாய் கண்டுபிடித்த ஆசிரியர் மோசஸ் அவர்களிடமிருந்து துவங்குகிறது இக்கதை. சிப்பாய்கள் போல நிறைந்த மாணவக் கூட்டத்திலிருந்து வலி பொருக்க மாட்டாமல் ஆண் பிள்ளை அழுகிற குரல் கேட்டு அதட்டியபடியே சித்வின்குமாரை மெல்ல அணுகியவர் விக்கித்துப் போய் அவனது கைகளை இப்படியும் அப்படியு மாகப் புரட்டிப் பார்த்து முகத்தில் சோகக் கலை ததும்ப வாதையின் கதையைக் கேட்கிறார். அவனது கையில் தீக்காயம் பட்டு நெடுநாட்களாய் ஆற்றப்படாத காரணத் தால் சீழ்கட்டி நீர் வடிந்த வடுவானது கோட்டோவியமாக புறங்கையில் படிந்திருந்தது. பள்ளியின் வெள்ளைச்சீரு டையில் பிசுபிசுப்போடு ஒட்டிக் கொண்ட நைலான் துணுக்கு கள் அவனது சிறு அசைவின் போதெல்லாம் உரசி உரசி பற்றிக் கொள்ளுகிற தீயைப் போல காயத்தின் வேதனை யைத் தூண்டவே அப்போதுதான் பொருக்கமாட்டாமல் அலறித் துடித்த குரலில் ஆசிரியர் அவனது காயங்களைப் பற்றிக் கேட்டதும் பார்த்ததும் எல்லாம்.
முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தாவரவியல் வகுப்பாசிரிய ரான மோசஸ் அவருடைய பழைய மாணவன், மருத்துவன் என்கின்ற முறையில் என்னிடம் அந்தப் பையனையும் அவனது நண்பனையும் ஒருசேர பள்ளிச் சீருடையிலேயே அனுப்பி வைத்துவிட்டு எனக்கு அழைத்து அவனைப் பற்றிய விவரங்களை மேலோட்டமாய் சொல்லிய போது தினசரி நோயாளிகளின் பதிவேட்டில் நட்சத்திர அந்தஸ்தோடு சித்வின்குமாரைக் குறித்து வைத்துக் கொண்டேன். பெரும் காயமாய் இருக்குமென்று தட்டித் தட்டி மூளையில் குறிப்பெ டுத்து அவனுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்த களிம்புக ளை அவனிடம் கொடுப்பதற்காக காத்திருந்த போது அவனைப் பார்த்த தருவாயில் சிராய்ப்பைப் போல மேலோட்ட மான தழும்பாகவே இருக்க, அவனுக்கு ஆறுதல் கூறி களிம்புகளைத் தடவி ஆற்றுப்படுத்தி அனுப்பி வைத்தேன். ஆனாலும் தழும்பிற்குப் பின்னே உள்ள வலியின் காரணத்தை அறிய வேண்டி அவனிடம் வினவிய போது பால்யத்திலேயே இருதய விரைப்பிற்கு தந்தையை பலிகொடுத்துவிட்டு கூடுதலாக பார்வையிழந்த தாயின் உதவிக்காக சமைக்கப் போய் தனக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதென வெகு இயல்பாய் அவன் சொல்லித் தலை தாழ்த்திக் கொண்ட போது என் உடம்பு ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது.
அலுமினிய ஆறாவது விரல்களைத் தரையில் தட்டித் தட்டி பாதை தேடியபடி பார்வையற்ற ஒருவர் அவ்வப்போது மருத்துவமனை வந்து போகிற காட்சி கண்களுக்குள் நிறைய, காட்சியைக் கலைத்துவிட்டு எப்போதிருந்து அவருக்கு பார்வையில்லை என்று வினவிய போது இந்த கொரோனா காலத்தின் ஒன்னரை வருடமாகத்தான் என்று சொன்ன நிமிடத்தில் நெஞ்சுக்குழிக்குள் குளிர் தண்ணீர் வழிந்தோடி ததும்ப வந்து நிறைந்தார் போலிருந்தது. பதினைந்து வயது நிரம்பிய பையனுக்கு நாற்பது வயது தாயிருப்பாள் என்று வைத்துக் கொண்டாலும் சமீபத்தில் தான் பார்வை தொலைந்து போயிருக்கிறதென்றால் கட்டாயம் புரையோடிய கண்களாகத் தான் இருக்க முடியுமென்று விளக்கொன்று மின்னிட்டு ஒளிர்ந்தது மூளைக்குள். அப்படியொரு புரையே காரணமாயிருப்பின் அவரும் அவர் குடும்பமும் இன்னமும் மீட்டுவிடக் கூடிய தொலைவில் தான் இருக்கிறார்கள் என்பதை என்னால் இயல்பாகவே அனுமானிக்க முடிந்தது. அம்மாவை எங்கெல்லாம் அழைத்துப் போனீர்கள் என்ற போது, சென்ற இடமெல்லாம் வைத்தியத்திற்குச் செலவாகு மென்று கேட்கப்படுவதால் நாங்கள் எங்கும் போகவில்லை என்று குறிப்பாய் பேசி நிறுத்திய போது மனமோ இறுகிக் கல்லாய் பாதாளத்தில் உருண்டது. எத்தனையோ சிகிச்சை கள் அரசு மருத்துவமனைகளில் இயல்பாக இலவசமாய் அரங்கேற்றிக் கொண்டிருக்க இவர்களுக்கு நிஜத்தில் சிகிச்சைக்குப் பணமில்லை என்பது பிரச்சனையா, இலவசமாய் சிகிச்சை இருப்பதைப் பற்றிய அறியாமையா அல்லது சிகிச்சை பற்றிய அச்சமா என்கிற குழப்பத்தில் தலையைச் சுற்றி குருவிகளாய் பறந்தது.
எது எப்படியோ நேரில் பார்த்துக் கவனித்துக் கொண்டால் நிச்சயம் நோயைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்கிற நிதானம் பிறந்தது. ஒருவேளை புரையோடிய விழிகள்தா னென்றால் சில மணித்துளிகள் சிகிச்சையிலே நோயைப் புறந்தள்ளிவிட்டு ஒளியை கண்களுக்குள் பாய்ச்சி அவ ருக்கும், அவரது வாழ்க்கைக்கும் அகல் விளக்கேற்றி வைத்து விடலாம் என்ற யோசனைக்குள் மனமோ நெகிழ்ந்து கொண்டது. எனக்கு என்னவோ நோயைவிட சிகிச்சையின் மீதான அச்சம்தான் இவர்களை இப்படியே வாழப் பணித்திருக்கிறது என்று மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது. அந்தப் பையனிடம் நோயைப் பற்றியும் சிகிச்சை பற்றியும் விவரித்துக் கொண்டே நாளை அம்மாவுடன் வந்து பார்க்கும்படி சொல்லி வழியனுப்பி வைத்த பின்னும்கூட அந்தப் பையனும் அவனது அம்மாவும் கல்லில் உறைந்த காட்சி போல கண்ணைவிட்டு அகலாமல் இருந்தனர். மறுநாள் ஆசிரியரிடம் விசாரித்து அவர்கள் வரவேண்டிய அவசியத்தை கேட்கிற போதுதான் இங்கு பேசிய அவனது தாய் பற்றிய எந்த விவரங்களையும் அவருக்கு யாரும் தெரியப் படுத்தவில்லை என்பதும் அதன் காரணமாக பள்ளிக்கு வந்தால் தன் மகன் வழியே தன்னை சிகிச்சை செய்ய கட்டா யப்படுத்துவார்கள் என்று பிள்ளையை பள்ளிக்கு அனுப்பா ததும் இருவருக்குமே புரியத் துவங்கியது. பின்பு அவர்களது வீட்டிற்கு அலைபேசி வழியே பேசி பலமுறை முறையிட்ட போது அவரிடம் எல்லாவற்றையும் தவிர்க்க எத்தனையோ காலம் போன கதைகளை கைவசம் வைத்திருந்தார். கையில் பணமில்லை, சிகிச்சை செய்து ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது, அந்த சிகிச்சைக்குரிய காலத்தில் பிள்ளையை யார் கவனித்துக் கொள்வது போன்ற கேள்விகளையே சுமந்து திரிகிற அவருக்கு இந்த நோயின் தீவிரமும் அதை மிக எளிமையாக சரிசெய்துவிட முடிகிற விஞ்ஞானமும் புரியவே யில்லை.
சட்டென்று முடிவெடுத்து நானும் ஆசிரியர் மோசஸ் அவர்களுமாக பையனின் வீட்டைக் கண்டுபிடித்து வாசல் வரை சென்ற போது அந்தப் பையனின் தாய் புவனேஸ்வரி அம்மாள் பொத்தாம் பொதுவாக தலைவாசல் பார்த்து தலையசைத்து வரவேற்கத் துவங்கியிருந்தார். அவரால் எங்கள் திசைபார்த்து பேச முடியாமல் காற்றில் வருகிற குரலை அனுமானித்து அதற்கேற்ப முகத்தை அசைத்து பதில ளித்துக் கொண்டிருந்தார். ஓடுகள் வேய்ந்த வாடகை வீட்டின் பத்தடி சுவற்றுக்குள்ளே சகல வாழ்க்கையும் சுருங்க வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய எவ்வித அச்சமும் இல்லையோ என்கிற பதபதைப்பு எங்களுக்கு. புகைமூட்டமான மங்கிய பார்வையில் பட்டா சுக்கான சுற்று வண்ணத் தாள்களை ஒட்டிச் சம்பாத்தியம் பண்ணு கிற அவரது கைவிரல்களையும் பார்வையற்ற அவரது விழிகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தவுடன் தெரிந்துவிட்டது கண்புரைதானென்று. டார்ச் விளக்கில் கண்களுக்கருகே வைத்து ஒளியைப் பாய்ச்சிய போதுகூட கண்களைக் கூசாமல் வெறித்த பார்வையை எதிரிலிருந்த சுவற்றில் அப்படியே நிலைத்தி ருக்க அவரது கண்களுக்குள் குழந்தையின் பால் பற்களைப் போல புரை உருண்டு திரண்டிருந்தது. உண்மை யில் வயதாக ஆக கண்களுக்குள் இருக்கிற கண்ணாடிக்கும் வயதேறி முற்றி தழும்பாகி புரை கொண்டுவிடுகிறது. இதைக் காலத்திலே கண்டு சிகிச்சை செய்யாவிட்டால் அவை ஊதிப் பெருத்து பாலாய்ப் பொங்கி உள்ளேயிருக்கிற கண்ணாடி மிதந்து கொண்டிருக்கிற திரவத்தினுள் கசிகிற போது அது பஞ்சும் நெருப்பும் போல பற்றிக் கொண்டு கண்களையே இரையாக்கிவிடும். அப்படி சரியான காலத்தில் சிகிச்சை செய் யப்படாமல் வருகிற நோயாளிகளின் கண்களே வெம்பிப் போய் சுருங்கி, கண்களிருந்த இடம் பல்லாங்குழிகளைப் போல பள்ளமாய்க் கிடப்பதை பார்த்து வெதும்பிய நாட்கள் எனக்கு கல்லூரி நாட்களில் நிறையவே இருந்திருக்கின்றன.
ஒருவேளை காலத்தே கண்டறியப்படாமல் சிகிச்சை மேற்கொள்ளாது இருந்தால் இந்தச் சின்னஞ்சிறு கண்ணாடி பருத்து இனிமேல் பார்வையை மீட்கவே முடியாத, வாழ்வு முழுமைக்கும் இருள் பள்ளத்திலேயே வாழப் பணிக்கப்பட்ட, சபிக்கப்பட்ட வாழ்வைப் போல வாழவிருக்க வேண்டும் என்ப தைப் பற்றியெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளாதது ஆச்சரி யமாகத் தான் இருந்தது. நோயைப் பற்றிய பயத்தை சிகிச்சைக் குரிய பயம் எப்படியோ வென்றுவிடுகிறது. இப்படிச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் பார்வையிழந்து வாழ்வு முழுமைக்கும் இவ்வாறு சிரமப்பட நேர்ந்தால் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிற உங்கள் பையனின் படிப்பு மட்டுமல்ல அவனது முழு வாழ்வுமே சூன்யமாகிவிடும், பார்வையின்றி உங்களையே நீங்கள் பார்த்துக் கொள்ள முடியாத போது உங்கள் பையனை எவ்வாறு நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியும், இனி நீங்களே ஒருவருக்கொருவர் சுமையாய்த் தான் மாறப் போகிறீர்கள் என்று பேசப் பேச அவர் ஒரு கோணத்தில் தலையசைத்து மறு கணத்தில் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். இவையெல்லாவற்றையும் பற்றி இங்கு நடந்தவற்றை யும் பற்றி கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனையி லிருக்கிற நண்பரும் மருத்துவருமான குமரவேல் மயக்க மருந்து நிபுணரிடம் பேசி இவர்களுக்கு இலவசமாக சிகிச்சை செய்ய வழிவகை செய்து தரும்படி கேட்ட போது மனநிறை வோடு ஒப்புக் கொண்டார். அவர்களை குறிப்பிட்ட நாளிலே வரச் சொல்லி சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனை களை உடனடியாக செய்து கொடுத்ததோடு தன் பங்காக அந்த பரிசோதனைக்கான செலவையும் ஏற்றுக் கொண்டார்.
கூடுதலாக புவனேஸ்வரி அம்மாவிற்கென்று விழிக ளுக்குள் வைக்க வேண்டிய லென்சுகளை தனியே முன்பதிவு செய்தே வாங்க வேண்டியிருந்ததால் மூன்று நாட்கள் காத்திருக்க அப்போதே அறிவுறுத்தியிருந்தார்கள். 20.11.2021 அன்று அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப் பட்டு, கண்புரைக்கான சிகிச்சை முடிந்த கையோடு எட்டாயிரம் மதிப்புள்ள இச்சிகிச்சைக்கான செலவீனத்தை மருத்துவமனை நிர்வாகமே குடும்பத்தின் சார்பாக ஏற்றுக் கொண்டது என்று சொல்லி அந்த அம்மாவின் கரங்களை மருத்துவர் பற்றிக் கொண்ட போது சிகிச்சையில் தைத்த கண்கள் அழுகையை கெட்டித்து தேக்கி வைத்துக் கொண்டன. இன்று அந்த அம்மாவுக்குப் பார்வை கிடைத்துவிட்டது. அவரது கண்களுக்குள் நிறைந்து விட்ட இந்த வெளிச்சத்தால் இனி அவரை அவரே பார்த்துக் கொள்வதுடன் அந்தப் பையனுக்கும் ஒரு சுதந்திரமான விடுபடல் கிடைத்து படிப்பிலே கவனத்தையும் ஊக்கமாக செலுத்த முடியும். அந்த தாயும்கூட கிடைத்த வேலைக்கு வெளியே சென்று பிள்ளையின் படிப்பிற்கேற்ப சம்பாதிக்கத் துவங்கிவிடுவார். இப்போது எனக்கு இறுதியாய் தோன்றுவதெல்லாம் ஒரு ஆசிரியரின் சிறு கண்காணிப்பின் வழியே அந்த மாணவன், அவனது தாய், அவர்களது குடும்பமென சேவை நோக்கம் கொண்ட மருத்துவக்குழுவினரால் காப்பாற்றப்பட்டிருக்கிற தென்றால் இன்னும் எத்தனை மாணவர்களும், குடும்பங்க ளும் கொரோனா காலத்துப் பிந்தைய சூழலில் இத்தகைய கவனத்தைக் கோரி நிற்கின்றன என்கிற பதபதைப்பு மட்டும்தான் என் கண்முன்னே வந்து நிற்கின்றது. நமது ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் வாழ்விற்கான தோல்வியின் கணங்களை நோக்கி நழுவிக் கொண்டிருக்கிற மாணவனை, குடும்பத்தை நோக்கி நகர வேண்டியிருப்பதை இந்நிகழ்வு மீண்டும் மீண்டும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.