tamilnadu

img

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறைந்த தலைவர்களின் படத்திறப்பு; புகழஞ்சலி

திருச்சி, அக்.17- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மறைந்த நிறுவனத் தலைவர்களான முன்னாள் மாநிலத் தலைவர் கே.ஏ.தேவராஜன், முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன், முன்னாள் மாநிலப் பொருளாளர் நா.நாகப்பன் ஆகியோரது உருவப் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம் அக்டோபர் 16 ஞாயிறன்று திருச்சியில் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ச.மயில் வரவேற்புரையாற்றினார்.  

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் மாநிலத் தலைவர் கே.ஏ.தேவராஜன் படத்தை முன்னாள் மாநிலத் தலைவர் மா.ச.முனுசாமியும், முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் படத்தை முன்னாள் மாநிலத் தலைவர் சா.தோ.அந்தோணிசாமியும், முன்னாள் மாநிலப் பொருளாளர் நா.நாகப்பன் படத்தை முன்னாள் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜனும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர்களான கோ.முரளீதரன், தி.கண்ணன், ச.மோசஸ், முன்னாள் மாநிலப் பொருளாளர்களான ச.ஜீவானந்தம், க.ஜோதிபாபு மற்றும் முன்னாள் மாநில நிர்வாகிகளான தா.ஆதித்தன், குருசாமி, கே.எஸ்.பிச்சுமணி, ஜோசப்ரோஸ், தியாகராஜன், ஜேம்ஸ்ராஜ், தமிழ்ச்செல்வி, கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர். இறுதியாக மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாநிலம் முழுதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியர் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான எல்.ஜி. என அழைக்கப்படும் தோழர் எல்.கோபாலகிருஷ்ணனை, மறைந்த தோழர் கே.ஏ.தேவராஜனின் மகள் பாரதி, இந்நிகழ்ச்சியில் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார். தோழர் எல்.ஜி. அவர்கள் எதிர்வரும் டிசம்பர் 15 அன்று தமது நூறாவது வயதை எட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;