சென்னை,டிச.13- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜன.5 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயல கத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“ஆளுநர்உரையுடன் ஜனவரி 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்றார். ஆளுநர் உரையை தொடர்ந்து, பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின்னர், துறைவாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். நூறு விழுக்காடு தொடுதிரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லா சட்டப்பேரவையாகவே நடை பெறும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனி மனித இடைவெளியுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட் டதால், மீண்டும் தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். இதற்காக கடந்த ஒரு மாத காலமாக தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்ற வளாகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.