tamilnadu

புதுச்சேரியில் இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி

புதுச்சேரி, டிச.11- புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,974 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் 11 பேர் என மொத்தம் 22  பேருக்கு (1.11 சதவீதம்) கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 202  ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 57 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை யில் 173 பேரும் என மொத்தமாக 230 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,877 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீத மாகவும் உள்ளது. புதிதாக 35 பேர் சிகிச்சை  முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 95 (98.37 சதவீதம்)  ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 551 பேருக்கு (முதல் தவணை - 7,93,532, இரண்டாவது தவணை- 5,07,019) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;