tamilnadu

img

அன்னை பூமியின் அடி வயிறு அறுக்கப்படுகிறது

உலகிலுள்ள ஒருசில தீபகற்பங்களின் முனைகளில் கன்னியாகுமரி அற்புதமான அழகான கற்பமுனை. 

முப்பரிமாண நிலப்பரப்பை சுற்றி அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் என்று விரவி கிடக்கிற அழகின் அதிசயம். இதன் முதுகுப்பகுதியில் உடும்பின் மேல் ஓடு போன்று, ஒட்டகத்தின் பிடரி போன்று, மிளாவின் திமில் போன்று அமைந்து இருப்பதுதான் மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசிப்பகுதி. அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அதன் தென்முனை மருத்துவாழ் (மருந்துவாழ்) மலையுடன் முடிவடையும்.அதற்குப்பிறகு கன்னியாகுமரி நோக்கி சிறு சிறு குன்றுகள் மட்டுமே உள்ளன. 

ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் பிற்காலத்தில் போதை அருந்தி நிறைந்து கிடந்த பித்தர்கள் கொண்ட மலை முனை ஆகி விட்டது. பல்லாயிரக்கணக்கான வயதுடைய இந்த மலை மருந்து, மூலிகை மணத்துடன் அதன் தென்முனை பகுதி அமைந்துள்ளது. உல கின் இயற்கை சமநிலைக்கு முக்கிய மலை களில் ஒன்று. இதனால் தான் குமரி மாவட்டத் திற்கு வருடத்தில் இரண்டு பருவ மழைகளும் பெய்யும். தென் மேற்கு பருவ மழையும் வட கிழக்குப் பருவ மழையும் பொழியும். வருடம் முழுக்க மழை பெய்யும்.  இந்த மலை குறித்து புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஏராளமான புனைவுகள் உண்டு. அடிவாரங்கள் மடிப்புகளோடு இருக் கும். நீர்கள், காடுகள், விலங்குகள், பறவை கள், மலைவாழ் பழங்குடியின மக்கள், வகை வகையான தேன்கள், தினை வகைகள், பல வகையான மரங்கள், அருவிகள், அணைகள், தடுப்பணைகள் என எண்ணிலடங்கா செல்வக் குவியல்கள் பரவிக் கிடக்கிற தென்னிந்திய வால் மலை என்றால் மிகையல்ல. பாலை நிலத்தை தவிர  உள்ள மற்ற நிலங்களை கொண்டுள்ள பள்ளத்தாக்கு. 200 கோடி ஆண்டுகள் பழமையானது.

நீதிமன்ற தீர்ப்பு

இரண்டாயிரத்து இருபது நவம்பர் இரு பத்தி ஒன்று ஆங்கில இந்து பத்திரிகையில் ஞாயிறு மலரில் பியூலா ரோஸ் எழுதிய களப் பதிவில் ‘பல ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து  கேரளாவிற்கு ஆரல்வாய்மொழி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அன்று தேசிய நெடுஞ்சாலை 7 என்ற பெயரில் திரு வனந்தபுரம் நெடுமங்காடு வரை இருபுறமும் வளர்ந்த ஆலமரங்களின் நிழல்களும் குளம் குட்டைகளும், அதில் ஆம்பல் பூக்களும், வயல் வெளிகளும் இருந்தது.  இன்று சிறிது சிறிதாக அதை காங்கிரீட் கட்டடங்கள் நிரப்பி உள்ளதாகவும், தற்போது அந்த சாலை இரண்டு தேசிய நெடுஞ்சாலையாக எண்.44, 66 ஆக உள்ளதாகவும், ஆலமரங்கள் முற்றி லும் காணாமல் போய்விட்டதாகவும், கொஞ் சம் இருக்கிற வயல்  வெளிகள், மலைகுன்று கள் காயமுற்று கோரமான வடுக்களை தாங்கி யுள்ளதாகவும், பாறைகள் வெட்டப்பட்டு கற்கள் எடுப்பதால் சிதைக்கப்பட்ட முகமாக மாறியுள்ளதாகவும் அவ்வாறு எடுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் வரிசை யாக காட்சியளிப்பதாகவும்’ குறிப்பிடுகிறார். அவர் மேலும் ‘சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த கல் உடைப்பிற்கு எதிராக பிறப்பிக் கப்பட்ட உத்தரவையும் மீறி இது நடக்கிறது.’ என்கிறார். என்ன நீதிமன்ற உத்தரவு அமலாக் கம் எல்லாம்?

திருவாங்கூர்  - திருக்கொச்சி
ஆரல்வாய்மொழி நெடுமங்காடு பாதை மன்னராட்சி காலத்தில் திருவாங்கூர் - திருக் கொச்சி நாட்டின் எல்கையான ஆரல்வாய் மொழிக்கு படைகளும், பரிவாரங்களும், சுங்கச்சாவடி வசூல்களை கொண்டு செல்ல வும் பயன்படுத்தப்பட்டது. பாண்டி என்ற ழைக்கப்பட்ட தமிழர் பகுதிக்கு வருவதற்கு மான சாலையாக இருந்துள்ளது. தற்போதைய நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலை பிற்காலத்தில் வந்தது. அதை அந்த காலத்தில் திருவனந்தபுரம் திவானாக இருந்த சர் சி.பி. ராம சாமி ஐயர், முதல் முதலாக சிமெண்ட் கலவை மூலமாக காங்கிரீட் சாலை போட்டார்.  அது அப்போதைய டிரெண்டிங் பேச்சாக இருந்தது. அதெல்லாம் இப்போது காணாமல் போய் விட்டது.

பள்ளத்தாக்கு

மேற்குத் தொடர்ச்சி மலை 1,60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.  1600 கி.மீ நீளமாக தமிழ்நாடு, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா உட்பட உள்ள மாநி லங்களில் விரிந்து பரவி காணப்படுகிறது. 2695 மீட்டர் உயரம் கொண்டது. ஐக்கிய நாட்டு சபையால் 2012 ஆம் ஆண்டு உலகின் பாரம் பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இமயமலை யை விட பழமையானது. பியூலா ரோசின் பதிவில், ‘வேர்கிளம்பி சந்திப்பை சார்ந்த 23 வயதான இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சோபித செர்சி காட்சே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து தடையுத்தரவு பெற்ற அவர், ‘இங்கு வெட்டப் படும் கற்கள் 20% மாவட்டத்திலும் மீதி அண்டை மாநிலமான கேரளாவிலும் விழிஞம் துறைமுக கட்டுமான பணிக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டதாக’ பதிவு செய்கிறார். 

வாலிபர் சங்கம்

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு சந்திப்பு தாண்டிய பிறகு வலது பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்த மலை பலவருடங்கள் கற்கள் உடைக்கப்பட்டதால் பட்டினியால் பலநாட்க ளாகவாடி ஒட்டிய வயிறு போல காட்சியளிக்கி றது. இதைப் பார்ப்பவர்களின் இதயத்தில் இரத்தம் வழிகிறது.        சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் போன்ற பகுதிகளில் பல வருடங்களாக பல்லாயிரக்க ணக்கான டன்கள் கற்கள் வெட்டி எடுக்கப்படு கின்றன. டாரஸ் லாரிகளில் லாரிக்கு 21 டன் வீதம் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் வெட்டி கடத்தப்படுவதாக இது குறித்த வழக் கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ஆன்றோ கிளீட்டஸ் சொன்னதாக குறிப்பிடுகிறார்.  வீரியம் கூடிய வெடி பொருட்களால் கற்கள் உடைக்கப்படும்போது, ஏற்படுகிற வெடிச் சத்தத்தில் மக்கள் பெரும் பீதியில் வாழ்கி றார்கள். வீட்டுக் கதவு, ஜன்னல்கள் அதிர்வில் உடைகின்றன. வீடுகளில் விரிசல்கள் ஏற் பட்டுள்ளன. அருகாமையிலுள்ள மரங்களின் இலைகள் கல்குவாரி துகள்களால் வெள்ளை நிறத்தால் மூடியுள்ளது. காற்று மாசுபடுகிறது. மக்களுக்கு காசநோய் போன்ற நோய்கள் அதிகமாக வருகின்றன. என 40 வயது சுஜித் மலரும் 49 வயதான அவரது கணவர் ஜாணும் தெரிவித்ததாக பியூலா ரோஸ் பதிவில் உள் ளது. அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும்பாலும் ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டுபவர்களாக வும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும்  இருப்பதால் அவர்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுக் காக பிரச்சாரம் செய்வதோடு மக்களை திரட்டி வருகிறார்கள். 

வனப்பகுதி பாதுகாப்பு மையம்

தமிழக அரசாங்க தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சரும் குமரிமாவட்ட மேற்குப்பகு தியைச் சேர்ந்தவருமான மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் கூறியதாக பியூலா ரோஸ், 1990 - இல் தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி வனவளாக பாதுகாப்பு அதாரிட்டி (HACA) அமைப்பின் வரம்பிற்குள் வருவதால் அது தான் இதை கண்காணிக்க வேண்டும். அக்குழு வில் இரண்டு சுற்றுச்சூழலியல் நிபுணர்கள், ஆர்வலர்கள் இருக்கவேண்டுமாம். ஆனால் அது ஒரு முறை கூட கூடியதில்லை, அது ஒரு செயல்படாத குழு என்பதுதான் செயல்பாட்டா ளர்களின் கருத்து எனவும் குறிப்பிடுகிறார். அமைச்சர் இது ஒன்றிய அரசுதான் கவனிக்க வேண்டும் என கூறியதாக பதிவுசெய்துள்ளார். 

கல்குவாரி அத்தியாவசிய துறையா?

வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான கிரனிவாச பிரசாத் ஏன் இவ்வளவு கல்குவாரி கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் எனவும் அத்தோடு அவர், நூறு கன அடி கிரானைட் கல்லுக்கு அரசாங்கத்திற்கு ரூ.135/= கொடுத்து விட்டு சந்தையில் ரூ.3500/= க்கு விற்கிறார்கள் என்கிறார். அது மட்டுமல்ல மிகவும் அவசிய மான துறைக்குமட்டும் 24 மணி நேர மின்சார சப்ளை கொடுக்கமுடியும். கல்குவாரி எப்படி மிகவும் அவசியமான ஒன்றாகும் என கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கிறார். இவைகள னைத்தும் பல  துறைகளின், காவல் துறை உள் ளிட்ட, ஊழல் ஊற்று காரணமாக தங்குதடை யின்றி மேற்கொள்ளப்படுகிறதாம். தூத்துக்குடி துறைமுக அதிகாரி ஒருவரி டம் கேட்ட தகவலின் படி ஒருநாள் விட்டு ஒரு நாள் மாலத்தீவு நாட்டிற்கு தென்தமிழகத்தில் குவாரிகளில் கற்கள் 1300 டன்கள் ஏற்றுமதி ஆகிறதாம். இந்த செயல்பாடுகளனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவையாகும். மக்களின் நன்மை கருதி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதை டி. லஜபதிராஜ் என்கிற மூத்த வழக்கறி ஞர், இதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் அவர்களின் போராட்டங் கள் தேவைப்படுவதாகக் கூறி முடிக்கிறார்.

தடுத்து நிறுத்துவோம்

ஆக மாவட்டம் முழுவதுமாக கட்டுமானத் திற்காக  கற்கள் உடைக்கப்பட்டு சிறு குன்றுகள் தரை மட்டமாகி தரைக்கு கீழும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், உண்மையிலேயே மலை மடுவாகிப்போய் அவைகளில் மழைக்காலங் களில் மழை நீர் தேங்கி நோய்களுக்கு தூபம் போடுகிறது.  ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவ தில்லை. இந்திய நாட்டின் தற்போதைய அமைப்பு முறையில் லஞ்சம், ஊழல், சுரண்டல் இவைகளில் இயற்கை, சுற்றுச்சூழல் பலி கடாவாக மாறியுள்ளது. குமரிமாவட்டம் அற்பு தமான அழகிய இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கிற ஒரு மாவட்டம். அது தன் பொலிவை இழந்து எதிர்காலத்தில் நம் சந்ததிகளுக்கு ஒரு பாலை நிலத்தை, அது இந்த மாவட்டத்தில் இல்லாத ஒரே நிலம், ஒப்படைக்க போகிறோமா என்பது தான் கேள்வி? அதை எப்பாடுபட்டா வது தடுக்க வேண்டும். அன்னை பூமியின் அடி வயிறு அறுபடக்கூடாது! அறுபடக்கூடாது!
 

;