கேணிப் பறியும்
காலணியும் தைத்து
காலம் கடத்துகிறான் கந்தன்.
அன்றைக்கெல்லாம்
தோல் செருப்பு அணிவோர் அதிகம்
பசியாற வருமானம் வந்தது.
இன்றைக்கு
வறுமைப் பாம்பை
வருமானத்தடியால்
அடிக்க முடியவில்லை..
கார்ப்பரேட் கம்பெனிகளின்
காலணி விளம்பரம்
காட்சி ஊடகத்தில்
குறைந்த விலை
நெகிழி பாதணி வாங்க
கூடி விட்டார் மக்கள்..
வெயில் வந்தால் அவனுக்கு வசந்தம்
மழைக்காலம் வந்தால்
வரும் படி இல்லாத வெறும் மடி .
படிக்கின்ற தன் பிள்ளைகளால் தான்
இடிக்கின்ற இன்னல் போகுமென்ற
எதிர்கால கனவில் கந்தன் i
பாதணி அறாதென்று
பாதசாரிகளின் பாதத்தை நடக்க விடும்
அவனுக்கு
நம்பிக்கை கூற ஆளில்லை.
பரம்பரையாய்
பாதணி தொழிலில்
பாதம் பதித்த இவன் வாழ்வு
பழுதுபட்ட பாதணி போல்
விளிம்பு சனம் இவர்களுக்கு
விமோச்சனம் என்றோ?
மல்லை.மு.இராமநாதன்