tamilnadu

img

மதுரை சாலைகளும்... மக்களின் மனக்குமுறல்களும்...

மதுரை:
மதுரை நகரின் சாலைகள் படுமோசமாக உள்ளன. கட்டப்பட்ட பாலம்பயன்பாடின்றி உள்ளது. மதுரை காளவாசல் பகுதியில் பாலம் கட்டியும்போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இப்பணிகளில் தலையிட்டு விரைவுபடுத்தி வருகிறார். ஆனால், ஏற்கெனவே மதுரையில் உள்ள பல்வேறு சாலைகள் போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லாத நிலை இருந்து வருகிறது.சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழையால் ஏராளமான சாலைகள் பெயர்ந்தும், கூடுதல் பள்ளங்களோடும் காட்சியளிக்கிறது.மழை பெய்து தண்ணீர் தேங்கினால் எது சாலை, எது பள்ளம் என்றுதெரியாமல் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் அவல நிலை உள்ளது. ஒருசிலர் இறந்துள்ளனர். 

பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பைப் பதிக்கும் பணிகளுக்காக  தோண்டும் பள்ளங்களையும் தொலைபேசி துறை தோண்டும் பள்ளங்களையும், பணி முடிந்தவுடன் இறுகப்பற்றும் வகையில் மண்ணைப் போடாமல் பெயரளவிற்கே மூடிவிட்டு செல்கின்றனர். இது பல்வேறு இடங்களில் பள்ளங்களாக உருவாகி நாளடைவில் ஆழமான குழிகளை ஏற்படுத்தி விடுகிறது. இப்பணிகளை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் சரியாக கவனிப்பது இல்லை. வார்டுகளின் பொறியாளர்கள் இதைக் கண்டுகொள்ளாத நிலையும் நீடித்து வருகிறது.மதுரை மாநகராட்சிகளில் ஓய்வுபெறுபவர்களுக்கு பதிலாக புதிய ஆட்கள் குறிப்பாக சாலைப் பணியாளர்கள் எடுக்காத காரணத்தால் அவ்வப்போது மேடு, பள்ளங்களை சரி செய்யாத நிலை நீடிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, மதுரை நகரின் முக்கியச் சாலைகளான குறிப்பாக ரீகல் தியேட்டர் எதிர்புறத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையசிக்னல் வரையும், பெரியார் பேருந்துநிலையத்தின் நான்கு பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகள் படுமோசமாக உள்ளது. இதேபோன்று, ஒர்க்க்ஷாப் ரோடு, சின்னக்கடை தெரு , நான்கு மாசி வீதிகளுக்கு உட்பட்ட உள்தெருக்கள், அருள்தாஸ்புரம், களத்துப்பொட்டல் சாலைகள், பாக்கியநாதபுரம், பாண்டிய வேளாளர் தெரு, பேச்சியம்மன் படித்துறை சாலை, பூந்தோட்டம், மறவர் சாவடி, அரசரடி, ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம், தெற்குவாசல், முனிச்சாலை, புதூர்-அண்ணாநகர் பகுதியில் மீனாம்பாள்புரம், செல்லூர் ஆகிய பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. சிறப்பு நிதி பெற்று சரி செய்ய வேண்டும்.

பயன்படாத பாலங்கள்
பழங்காநத்தம் ரயில்வே கிராசிங்சிரமத்தை தவிர்க்க மேல்பாலம்போடப்பட்டு எவ்வித பயன்பாடுமின்றி உள்ளது. இப்பாலத்தின் மேல்விளக்குகள் எதுவுமின்றி இருள் சூழ்ந்துள்ளது. சமீபத்தில் கட்டிமுடித்து திறக்கப்பட்ட பைபாஸ்பாலம் ஒருபக்கமே போடப்பட்டதால்,கீழ்ப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி பழைய நிலையிலேயே தொடந்து இருந்து வருகிறது. எந்தப்பயன்பாட்டிற்காக பாலம் அமைக்கப்பட்டதோ அது நிறைவேறவில்லை. தேனி மெயின் சாலை, முடக்குச்சாலையிலிருந்து அரசரடி வரை பாலத்தின் இன்னொரு பகுதியிலும் இணைப்புப் பாலம் அமைப்பது குறித்து அரசு அவசர கதியில் கவனம் செலுத்தி போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டும்.பாலங்கள் உள்ளிட்ட முக்கியமான பணிகள் செய்வதற்கு  முன்பாகஅரசு நிர்வாகமும், மாநகராட்சியும் பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகளிடம் அல்லது ஏற்கெனவே மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்களிடமோ எவ்வித கருத்தையும் கேட்காமல் பணிகளைச் செய்வது மதுரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வி
களை உருவாக்கியுள்ளது.

குடிநீர், பாதாளச் சாக்கடை
மதுரை நகரில் பல்வேறு வார்டுகளில் குடிநீரில் கழிவு நீர் வருவதாக புகார்கள் ஏராளம் உள்ளது. மக்கள் வார்டு அலுவலகங்களுக்கு சென்று குறைகளைத் தெரிவிக்கும்போது அதை விரைவாக கவனிக்காத நிலையும் தொடர்கிறது.  பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடையின் உள்ளிருக்கும் மண் சரியாக அள்ளப்படாமல் கழிவு நீர் தேங்கி மூடியின் மேல்புறம் கசிகிறது. மலக் கழிவுகள்சாலைகள் முழுவதும் பரவி தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கான வாய்ப்புக்களை உருவாக்குகிறது.கிருதுமால் நதிக் கழிவுகளை அவசரப் பணியாக கருதி அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், வட்டங்களில் உள்ள பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் தெருக்களை சுற்றிப்பார்த்து தேவையான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும்.

                                   *****************

ஆணையாளர்  உத்தரவாதம்

மதுரை நகர் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், ம.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்துப்பேசினர்.அப்போது ஆணையர், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு சாலைகளை மழைக்குப்பின் மேம்படுத்தி வருகிறோம். அதில் சில சாலைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாக உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து  கோரிக்கை வைத்து வருகிறோம். சாலைகளில் மழை நீர் தேங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில் சாலைகளை சீரமைத்து வருகிறோம். தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள சாலைகள், தெருக்களை சீரமைப்பதாக உறுதியளித்தார்.

;