tamilnadu

img

சங் பரிவாரத்தின் நோக்கத்தை உடைக்க... - என்.சிவகுரு

ஒரு சில புத்தகங்களின் தலைப்பை பார்த்து விட்டு அது ஏதோ நமக்கு தொடர்பில்லாத விசயம்… இதெல்லாம் நம்ம சப்ஜெக்ட் இல்லை, யாருக்காகவோ அச்சிட்டுள்ளார்கள் என தோன்றும். புனைவு, அரசியல் கட்சித் தலைவர்கள் எழுதியது, பரபரப்பான பேசு பொருள் கொண்டது என நமது தேடலில் இருக்கும். இந்தியாவில் 2014இல் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியா ஒரு வலதுசாரி திருப்பத்தை நோக்கி நகர்கிறது என எச்சரித்தது. பலர் அதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. சிலரோ ஏளனம் செய்தனர்.  ஒரு தீவிர வலதுசாரி இந்துத்துவா அமைப்பு எப்படியெல்லாம் தங்களின் நாசகர பிற்போக்குக் கொள்கைகளுக்கு மதத்தையும் அதன் நீட்சிகளாக இருக்கும் மத வழிபாட்டுத் தலங்களையும்  பயன்படுத்தும் என்பதை இன்று நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். எதை கையில் எடுத்தால் தங்களின் அரசியலை புகுத்த முடியும் என்பது இந்த பாசிச சக்திகளுக்கு தெரியும்.  அந்த அரசியலின் ஒரு பகுதியாகத் தான் இந்தியா முழுவதும் இருக்கும் கோவில்கள் அனைத்தையும் இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனும் அழுத்தமான பிரச்சாரத்தை இந்துத்துவ சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. 

இதை வலுவாக எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் கட்டாயமும் நமக்கு  இருக்கின்றது. அந்த எதிர்ப்பு அடர்த்தியான ஆதாரங்களோடும், தரவுகளோடும், வரலாற்றுப் பின்னணியோடும் இருந்தால் பேருதவியாக இருக்கும் என்பதற்கு ஏற்ப தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சாமி.நடராசன் “அறநிலையத்துறையும் மக்களும்” எனும் நூலை தொகுத்துள்ளார். பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இந்த நூல் வந்துள்ளது.  நூலுக்கு ஒரு ஆழமான அணிந்துரையை தோழர் பெ.சண்முகம் வழங்கியுள்ளார். அதுவே இந்த நூல் வருவதற்கான அடிப்படை தேவை.  ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் மேற்கோளோடு துவங்குகிறது. இந்து கோவில்களுக்கு எப்படியெல்லாம் சொத்துக்கள் சேர்ந்தன, எதை காரணம் காட்டி அம்மாதிரியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன , சித்தர்களின் பாடல்கள் சொல்லும் தத்துவம் என நீளும் அணிந்துரையின் முக்கிய சாராம்சமே முன்னெடுக்கப்படும் கோரிக்கைகள்,மதத்துக்கோ, கடவுளுக்கோ எதிரானது அல்ல, மாறாக அங்கு வாழும் மக்களின் வாழ்வுரிமை வாழ்வாதாரம் பற்றியது என கச்சிதமாக முடிக்கிறது.

வரலாறு முக்கியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்தியாவை ஆள்பவர்களோ வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்கள் . ஆக தொகுப்பின் 3ஆவது அத்தியாயமாக கோவில்கள், அதற்கு எப்படி சொத்துக்கள் சேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களை எடுத்து சொல்லியுள்ளார் தொகுப்பாசிரியர். நம்பிக்கையின் இருப்பிடமாக கோவில்களும், தங்களிடம் உபரியாக இருந்ததையும், மேலும் சில தன் சொத்துக்களையும் கொண்டு கோவில்களை மன்னர்கள் வளமாக்கினார்கள் என்பது துவங்கி, கோவில்களுக்கென வரி வசூலிப்பது, தானியங்களை பெறுவது என தொடர்ந்த விசயங்களெல்லாம் நூலில் உள்ளன.  கோவில்களின் நிர்வாகம் பண்டைய காலத்தில் எப்படி இருந்தது ,அதில் தனிநபர்களின் பங்களிப்பு, சோழர்களின் காலத்துக்கு பிறகு அது எவ்வாறு மாறியது என்பதெல்லாம் பதிவாகியுள்ளது. சோழர்களுக்குப் பிறகு நடந்த படையெடுப்புகள் மூலம் என்ன மாற்றம் நடந்தது என்பதும் தெரிய வருகிறது. அதன் பின்னர் சமகாலத்தில் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது பற்றிய தகவல்களும் உள்ளன. 

“தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, இந்து ஆன்றோர், மடம், ஆதீனங்களிடமே ஒப்படைக்க வேண்டும், கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனும் விசமத்தனமான கோரிக்கை இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே எழும் பிரச்சனை தான். அந்த கோரிக்கைக்கு பின்னால் உள்ள அரசியல் காரணங்கள், அதன் மூலம் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் உருவாக்க நினைக்கும் காரியங்கள் என சில அம்சங்கள் நமக்கு தெரிந்ததே. ஆனாலும்,அதில் உள்ள சூட்சுமங்களை மூன்றாம் அத்தியாயத்தில் தெளிவு பெற வைத்திருக்கிறார் ஆசிரியர்.  என்ன நோக்கத்திற்காக சங்பரிவார் அமைப்புகள் கோவில்களை குறி வைக்கின்றன, அதன் மூலம் அவர்கள் அடைய நினைக்கும் அரசியல் ஆதாயங்கள் என்ன என்பதை தோழர் நடராசன் நன்றாகவே விளக்கியுள்ளார். 

அறநிலையத்துறைக்கான சட்டங்கள், எப்படி உருவானது, அதன் பின்புலம், அப்படி உருவான சட்டங்களிலும் என்னென்ன நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதையும் இந்த நூல் பேசுகிறது. நமக்கு ஆச்சரியமளிக்கும் தகவல்களும் கூட இதில் அடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மடங்கள் , அதனால் நிர்வாகம் செய்யப்படும் அசையா சொத்துக்கள், கல்வி நிறுவனங்கள் என ஏராளம் உண்டு. அதில் சிலது நமக்கு தெரியும். ஏராளமான விவரங்கள் தெரியாது. அந்த இடைவெளியை இந்த நூலில் இட்டு நிரப்பியுள்ளார் தொகுப்பாசிரியர். சிலதெல்லாம் நமக்கு பெரிய மலைப்பாக உள்ளது. இவ்வளவா இருக்கு? என யோசிக்க வைக்கிறது. நமது கோரிக்கைகள்/முழக்கங்கள் எவ்வகையானது என்பதை இந்த நூல் அழகுற விளக்கிடுகிறது. 

1.    முதலில் கோவில்களிடமிருந்து மடங்களை பிரிக்க வேண்டும்.
2.    அடுத்து மடங்களிடமிருந்து நிலங்களை பிரிக்க வேண்டும் 
3.    மடங்களுக்கு சொந்தமான நிலத்தை உழுபவனுக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும்
4.    மடத்து மனையும் குடியிருப்பவனுக்கு சொந்தம் என்று அறிவிக்க வேண்டும்
5.    மடத்து வீட்டிற்கு வாடகை தந்தவனுக்கு வீடு சொந்தம் என்று அறிவிக்க வேண்டும் என நம் நோக்கம் தெளிவுபடுகிறது. 

நிலவுடைமைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் நீடித்து கொண்டிருக்கும் நமது மண்ணில், இந்த கோரிக்கையின் நியாயத்தை மக்கள் உணர்வார்கள். மடங்களின் நிலங்களை பயன்படுத்துவோரின் கோரிக்கைகள் என்ன? அதன் அடிப்படை நியாயங்கள், அர்த்தப்பாடுகள் என ஒரு முழு அத்தியாயம் விளக்குகிறது. இதைப் படிக்கும் பயனாளிகள் நல்ல விளக்கம் பெறுவார்கள். அதற்குப் பிறகு, உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பின் சார்பில் எழுதப்பட்ட கடிதங்கள் , அரசாணைகள்,நமது முன்முயற்சிகள் என தொகுப்பாக்கி வந்துள்ளது.  நாம் இதுவரை அணுகாத ஒரு புதிய பகுதி, அதன் பிரச்சனைகளும் ஒரு தனி விதம். அதை நயமுடன் கையாள்வதற்கும், இதுவும்  ஒரு அரசியல் பணியே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது இந்நூல் . அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து நம் பக்கம் கொண்டு வரவேண்டிய காலமிது. அதற்கு இந்நூல் நிச்சயமாக உதவும்.

;