tamilnadu

img

காந்தியமும்  கைத்தடியும்

நவகவி

ராஜ்கோட்; காந்தி பழம்பொருளகம்.
காந்தி நூல் நூற்ற கை ராட்டையில்
சிலந்தி நூல் நூற்றுக் கொண்டிருந்தது.

“காலாவதி ஆகி விட்டோமே” என கலங்கியபடி
மூலையில் காந்தியம் முடங்கிக் கிடந்தது.
கட்டிட மூலையில் சாய்ந்த நிலையில்
அனாதைப் பிள்ளை போல் அவரின் கைத்தடி.

சாய்த்து வைக்கப்பட்ட கைத்தடியா?
சாய்க்கப்பட்ட காந்தியமா?
எதன் சாய்மானம் அதிகம் என
எடை போட இயலவில்லை.

உச்சி முதல் அடிவரை
உப்பு பூத்திருந்தது கைத்தடி.
கடல் காற்று வீசாத டில்லியில்
கைத்தடி உப்பு பூத்தது எங்கனம்?

தண்டி யாத்திரையின் போது அவர்
தடியை நனைத்த கடல் நீர் உப்பு,
நவகாளி யாத்திரையின் போது அவர்
கண்கள் சொரிந்த கண்ணீர் உப்பு,

இரண்டில் ஒன்றாகவோ
இரண்டும் ஆகவோ 
இருக்கலாம் அந்த உப்பு.

காந்தியின் பொக்கை வாய் போலவே
காந்தியமும் பல் பிடுங்கப்பட்டு
களை இழந்து அங்கே காணப்படுகிறதோ?

காந்தியம் நினைத்தது:
“காட்சி சாலைக்கு வெளியே
முச்சந்தியில்
கம்பீரமாய் காந்தி சிலை.

காட்சிச்சாலைக்கு உள்ளே
மூலையில் 
மூளியாய் காந்தியம்!”

ஓரங்கட்டப்பட்ட
காந்தியமும் கைத்தடியும்
ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய்
உரையாடலாயின
கழிவிரக்கத்தோடு... கவலையோடு...
கைத்தடி பேசியது:
“அதோ சுவரில் இருக்கும்
அந்தப் பல்லி மட்டுமே
காந்தியமே நம் மேல் தற்போது
கவனம் செலுத்துகிறது.”

காந்தியம் பேசியது:
“ஊன்றுகோலே நீ சொல்வது
உண்மைதான்.
பழம்பொருளகத்துக்கு வரும் இந்த
பார்வையாளர்களைப் பார். இவர்கள்
விளையாட்டுப் பொருள்கள் என நம்மை
வேடிக்கை பார்க்கிறார்கள்.

கைத்தடி பேசியது:
கல்லாய்ச் சமைந்த ஆதி உயிரியை
காட்சிச்சாலையில் கவனிப்பது போல் தான்
காந்தியமே நம்மை
கவனிக்கிறார்கள் இவர்கள்.”

காந்தியம் பேசியது:
“உயிருடன் இருக்கும்போதே
ஓரங்கட்டப்பட்டு விட்டார் காந்தி.
காந்தி வளர்த்த சுதந்திரச் செடி
கனவான்களால்
கருவேப்பிலைச் செடி ஆக்கப்பட்டு
விடுதலை விருந்துக்கு மணம் ஊட்டிய பின்
வெளியே வீசி எறியப்பட்டு விட்டது.

கைத்தடி பேசியது:
“எஜமான்கள் காந்தியை செரித்து
ஏப்பம் விட்டு விட்டார்கள்.
காந்தியும் அதற்கு ஒரு காரணம் அல்லவா?

காந்தியின் கண்ணீர் பல சமயம்
சுதந்திர ஜ்வாலையில்
நெய்யாகச் சொரியாமல்
நீராகச் சொரிந்ததால்

உக்கிரமாக எரிய வேண்டியதீ
ஒடுங்கி அடங்கிஎரிந்தது.
காந்தியமே உன்னை
காரசாரமாக்கவில்லை காந்தி!

காந்தி உப்பெடுக்க ஏகினார்; 
ஆனால் காந்தியத்தை 
உப்புச்சப்பற்றதாய் ஆக்கினார்!”

காந்தியம் பேசியது:
“ஊன்று கோலே உண்மை சொன்னாய்.
மக்களை முன்பெல்லாம் ஈர்த்த நீ 
மகத்தான மந்திரக்கோல் தான். 

பகத்சிங்கின் துப்பாக்கிக் குழலாய் நீ
பரிணாமம் அடைந்து இருக்க வேண்டும்.
ஆனால் மூங்கில் தடியே
அன்னியர்கள் தங்களின்
ஆடல் பாடல்களில் அவ்வப்போது
புல்லாங்குழலாய் உன்னை 
புன்னகையுடன் உதடுகளில்
பொருத்திக் கொண்டார்கள்.”

பழம்பொருளகத்துள் அப்போது
கவிஞன் ஒருவன் காயங்களுடன்
புயலின் புத்திரன்போல் நுழைந்தான்.

மசூதியை இடித்த கடப்பாரை
அவன் மார்பிலும்
வயிற்றுச் சிசுவை பிதுக்கி எடுத்த சூலம் 
அவன் மனதிலும்
ஆறாத வடுக்களை ஆக்கியிருந்தன.

அவன் ஒரு உண்மையான ராம பக்தன் .
“காந்தியமே கைத்தடியே நீங்கள்
காலாவதி ஆகி விடவில்லை.
மகாத்மாவின் மதநல்லிணக்க 
மாமழைநீர் இன்னும் கூட
கானல்நீர் ஆகிவிடவில்லை.
தாகித்தவர்களுக்கு தண்ணீராய்
உம்மை எடுத்தேக ஓடி வந்துள்ளேன்.
உரைக்கிறேன் கேளுங்கள்.

ஈஸ்வர அல்லா தேரே நாம் என
அண்ணல் காந்தி அகத்தில் துதித்த
அல்லாவுக்கு மட்டும் அல்லாமல்
அரிராமனுக்கும் இப்போது ஆபத்து.
ரத்த உறவற்ற குகனையும்
ரட்சித்தது சகோதரனாய் ராம நேசம்.
ராமன் பெயராலேயே அந்த
ராம பாசம் சிதைக்கப்படுகிறது.

ராம லட்சுமணராய் இணைந்திருக்கும்
அரியையும் அல்லாவையும்
பங்காளிச் சண்டை எனும்
படுகுழியில் தள்ளுகிறார்கள்.

பாரத தேசத்துப் பாமரர்
ஒவ்வொருவரின் உள்ளிருக்கும்
ராமன்களை இப்போது
கோட்சேக்கள் குறி பார்க்கிறார்கள்.

காமராஜ்ஜியமாய் ராமராஜ்ஜியம்
கவுரவம் இழந்து கதறுகிறது.
பாலியல் பலாத்காரத்துக்காக
சீதைகள் சிறை பிடிக்கப் படுகிறார்கள்.
ராவணனை நம்பலாம் ;இந்த
ரவுடிகளை நம்ப இயலாது.

காந்தியின் இருதயத்தை துளைத்த குண்டு
அவருக்குள் இருந்த ராமனையும்
அப்போதே குற்றுயிர் ஆக்கியது.

அது மட்டுமா மீண்டும் அவனை
ஆரண்ய வாசத்துக்கு 
அனுப்பிவிட்டு அவனுக்கு
கோயில் கட்டுவதாய் கூறிக்கொண்டு
கல்லறை கட்டுகிறார்கள்.
காகுத்தன் பேணிய சகோரத்துவம்
கழுவேற்றப்படுகிறது.

ராம தேசம் ரண தேசமாய் ஆனது.
ரணமான தேசம் பிணமாக மாறுமுன்
காந்தியம்தான் எம்மை காப்பாற்ற வேண்டும்.

ஏனெனில் அன்று
கத்திகள் நாற்றுகளாய் நடப்பட்ட 
கலவர பூமியில்
காந்தியின் கால் சுவடுகளே
புண்ணுக்கு ஒத்தடமாய்
புறப்பட்டு வந்தன.

மகாத்மாவின் அந்த
மழலை பொக்கை வாய் தான்
மதவெறியின் கோரைப் பல்லை
மழுங்கடித்தது.

காந்தியமே கைத்தடியே
களம் நோக்கி உம்மை
மீண்டும் எடுத்தேக
புறப்பட்டு வந்தேன்” என்றான் கவிஞன்.

சுய இரக்கத்தில் இருந்த இரண்டும்
சொல் இதைக் கேட்டன துயரம் நீங்கின!
அப்பாவிகள் மீது அம்பு செலுத்த
ராமபாணமே களவாடப்பட்டு
ராமன் இப்போது நிராயுத பாணியாய்
கையறு நிலையில் இருப்பது கண்டு
கடும் கோபம் கொண்டன.

கார் வண்ணனுக்கு உதவியாய்
களம் காண வீறுகொண்ட காந்தியம்
அகிம்சையை கொஞ்சம் அடக்கி வாசித்தது!
உடனடியாக கவிஞனின் 
தோளில் போய் தொற்றிக்கொண்டது!
காந்தியின்
மேனிபோல் மெலிந்திருந்த கைத்தடி
பூண் கட்டிய உலக்கை போல பூரித்தது!
கவிஞனின் கைக்குத் தாவியது!

ஆர்எஸ்எஸ் தடியை விட
அதிக வலுவாய் அதிக சினமாய்
காந்தியின் கைத்தடி
படுகளம் நோக்கி பயணப்பட்டது!

;