சென்னை, டிச. 19- ‘அமர்த்து - துரத்து’ (ஹையர் அண்ட் பையர்) என்கிற கொடுமைக்கு முதலில் இலக்காவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் முனைவர் தீபா தெரிவித்தார். “பேசுவது பெண் உரிமை, பேணுவதோ பெண் அடிமை” என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு வேலை செய்திருந்தாலும் ‘சும்மா’ இருப்பதாகத்தான் பொதுவெளியில் பெரும்பாலான ஆண்களால் கூறப்படுகிறது. வீடு பணியிடமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வீட்டு வேலைக்கு மதிப்பு கணக்கீடு செய்யப்பட வேண்டும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியும் சீர் குலைந்துவிடும் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் பெண்கள் வேலைவாய்ப்பு விகிதம் 2005க்கு பிறகு குறைந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் உழைப்பு, பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வரும் சூழலில். இந்தியாவில் மட்டும் பெண் உழைப்பு வாய்ப்பு குறைந்தது எப்படி என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளியாகவே பெரும்பாலான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்களின் உழைப்பு வீடு சார்ந்து அதிகமாக இருப்பதால், அவற்றின் அங்கீகாரம் குறைந்தே காணப்படுகிறது. சமூக வெளியில் பெண்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. பல இன்னல்களுக்கு பிறகு பெண்கள் வேலைக்கு வரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பணி பாதுகாப்பு இன்மை என்பது பெண்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது. ‘அமர்த்து - துரத்து’ என்கிற இலக்கிற்கு முதலில் உள்ளாவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். பருவம் எய்தும் முன்பே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இங்கு இருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அது 10 வயதில் இருந்து 12ஆக உயர்த்தப்பட்டது.
1947இல்தான் பெண்களின் திருமண வயது 18ஆக மாற்றப்பட்டது. தற்போது அது 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டதை பலர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த வயது உயர்வு என்பது மேலும் சாதியக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணத்தை எப்படி எதிர்த்தோமோ, அதேபோல் சாதிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் இதுபோன்ற சில ஏற்பாடுகளையும் நாம் எதிர்க்க வேண்டும். வருங்கால வரலாற்றை எழுதுபவர்களாக பெண்கள் உருவாக வேண்டும். பெண்களுக்கான சமவாய்ப்பை உருவாக்க வேண்டும். குடும்பம், தொழிற்சங்கம், அரசியல், தத்துவம் உள்ளிட்ட அரசியல் செயல்பாடு முக்கியமாகக் கருதப்படுகிறது. பெண்கள் சங்கத்தில் இணைந்து போராடிய அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளதை கடந்தகால படிப்பினை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆகவே புதிய மாற்றங்கள் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.