tamilnadu

img

3 ஆயிரம் ஆண்டு பழமையான பெருங்கற்கால நெடுங்கற்கள் கண்டுபிடிப்பு

கடமலைக்குண்டு, அக்.7- மயிலாடும்பாறை அருகே  3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நெடுங்கற்கள், கற்குவை, கல்வட்டம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் பழங்கால நினைவுச் சின்னங்களை கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறார். வெள்ளிக் கிழமை காலையில் மயிலாடும்பாறை அருகே மலையடிவாரத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங் கற்கால நெடுங்கற்கள், கற்குவை, கல்வட்டம் ஆகியவற்றை கண்டு பிடித்துள்ளார். இதுகுறித்து ஆய்வாள ரும் ஆசிரியருமான செல்வம் கூறிய தாவது: இடைக்காலப் பாண்டியர்கள் ஆட்சியில், தேனி மாவட்டம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு பிரிவுதான் வரிசைநாடு. பல ஊர்களை உள்ளடக்கிய வளமான நாடாக வரிசை நாடு இருந்திருக்கிறது. வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மயிலாடும்பாறை வரிசை நாட்டின் முக்கிய நகரமாக இருந்திருக்கிறது. இடைக்காலத்தில் இந்த ஊர் ஒரோமில் என அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை வாய்ந்த ஊரான மயிலாடும்பாறை அருகே தான் தற்பொழுது பள்ளி முதுகலை ஆசிரியர் ரஞ்சித்துடன் இணைந்து பெருங்கற்கால நினைவு சின்னங்களை கண்டுபிடித்து உள்ளோம். மயிலாடும்பாறை வனத்துறை அலுவலகத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள் ளது அந்த பழங்கால மக்களின் வாழ் விடப் பகுதி. அங்கு 10க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் குறிப்பிட்ட இடைவெளி யில் ஊன்றப்பட்டுள்ளது. நெடுங் கற்கள் பெரும்பாலும் மேற்கு திசை  நோக்கியே சாய்வாக நடப்பட்டுள்ளன.

இது சூரிய வழிபாட்டின் வெளிப் பாடாகவும் திசைகள் குறித்த அவர் களின் மதிப்பீட்டையும் வானிலை கணி க்கும் அறிவையும் உணர்த்துவதாக உள்ளது. கிழக்குப்பக்கம் நடப் பட்டுள்ள ஒரு நெடுங்கல் மற்ற நெடுங்கற்களை விட அகலமாகவும் உயரமாகவும் உள்ளது. அதன் அடிப்  பகுதியின் அகலம் மூன்றரை அடியும் உயரம் ஆறரை அடியாகவும் உள்ளது.  இந்த நெடுங்கல்லை சுற்றி கல்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டு களுக்கு முன் அந்தப் பகுதியில் வாழ்ந்த  மக்கள் இறந்த இனக்குழு தலைவனை அடக்கம் செய்து அங்கு ஒழுங்கற்ற கற்களை அடுக்கி கல்வட்டங்கள் உருவாக்கி, குத்துக்கல் அமைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர் என் பதை அறிந்துகொள்ள முடிகிறது. பெருங்கற்கால மக்களின் குடியிருப்பு கள் ஓரிடத்திலும், இடுகாடு சற்றுத் தள்ளியும் அமைக்கும் பண்பாடு கொண்டவர்கள். எனவே இந்த நெடுங் கற்கள் அமைந்துள்ள பகுதிக்கு கிழக்குப் பக்கம் வாழ்வியல் பகுதியாக இருந்திருக்க வேண்டும். இதே பகுதியில் குதிரைக்கட்டிபுடவு என்ற இடத்தில் புதிய கற்காலத்தை சேர்ந்த  பாறை ஓவியங்கள் உள்ளன. மூல  வைகை பகுதி பல ஆயிரம் ஆண்டுகள்  மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்த பகுதி என்பதற்கான சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழக தொல்லி யல் துறை முறையான ஆய்வு மேற்கொண்டால் உலக வரலாறு வைகை நதியை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.