tamilnadu

img

மூலப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22- மூலப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில்சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று (டிச. 20) ஆர்ப்பாட்டம் பொதுச் செயலாளர் வி.நித்தியானந்தம் தலை மையில் நடைபெற்றது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயமும், சிறு குறுந் தொழில்கள் இயங்கினால்தான் தேசம் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு உருவாகும், பொருளாதாரம் உயரும். தமிழகத்தில் பதிவு செய்த, பதிவு செய்யாத 15 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். நாடு முழுவதும் 75 லட்சம் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 15 கோடி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாட்டில் உற்பத்தியாக கூடிய பொருட்களில் 48 விழுக்காடு சிறு குறுந் தொழில் நிறுவனங்களில்தான் தயாராகின்றன. மூலப் பொருட்களின் விலை உயர்வு, இரும்புத்தாது,

நிலக்கரி விலை, மின்சாரக்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகியவற்றை சார்ந்ததாக உள்ளது. இந்தியாவில் முன்பு இரும்பு முதல் ஈயம் வரை மற்றும் உலோக மூலப் பொருட்களின் விலையை அரசு அமைத்த கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்த முறையை தற்போதுள்ள ஒன்றிய மோடி அரசு மாற்றி விட்டது. லண்டனில் உள்ள மூலப்பொருட்கள் விற்பனை மையம் அறிவிக்கும் விலை அடிப்படையில், இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களும், சந்தைகளும் தினசரி விலை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்தியாவில் நிலக்கரி விலை, சர்வதேச நிலக்கரி விலை சார்ந்ததாக நிர்ணயிக்கப்படுகிறது.

மூலப்பொருட்களின் கட்டுப்பாடில்லாத விலை உயர்வால் சிறு குறுந் தொழில்கள் அழியும் நிலை உருவாகியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான கடன் திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளும் முழு அளவில் பயன் தரப்போவதில்லை. மக்களிடம் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் , பணவீக்கமும், பொருட்களின் விலை உயர்வும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. எனவே பொருளாதார ரீதியில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை ஒன்றிய அரசு நிர்ணயிக்க சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த மாற்றம் மட்டுமே குறுந்தொழில்களை, சிறு தொழில்களை, நடுத்தர தொழில்களை காப்பாற்ற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

;