சென்னை, டிச. 22- ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வேகமாக பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இன்னமும் சுணக்கம் நிலவுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் முன்களப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக முதியவர்களுக்கே நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்பட்டது. பத்து மாதங்கள் ஆகியும் இன்னும் 50 விழுக்காட்டினர் கூட தமிழ்நாட்டில் முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு எட்டவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 84.42 விழுக்காட்டினர் முதல் டோஸ் மற்றும் 55.01 விழுக்காட்டினர் 2ஆவது டோஸ் செலுத்தியுள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் மாநில சராசரியை விட குறைவாகவே செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் 1,04,19,000 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதில் 61,53,206 பேர் அதாவது 59 விழுக்காட்டினர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். மேலும் 43,56,126 பேர் அதாவது 42 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி முழு பாதுகாப்பை எட்டியுள்ளனர். கடந்த 2 அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை தமிழ்நாட்டில் 34,878 பேர் கொரோனாவால் உயிரிழ்ந்திருந்தனர். இதில் 41 முதல் 60 வயதில் 35 விழுக்காடு இறப்புகளும், 21 முதல் 40 வயதில் 7 விழுக்காடு இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 34,878 பேர் இறந்துள்ளனர். இதில் 60 வயதுக்கு மேல் 20,067 பேர் (58 விழுக்காடு) இறந்துள்ளனர். ஒமைக்ரான் பரவும் இந்த நேரத்தில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகிறது என பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் சராசரியாக பொது மக்கள் தடுப்பூசி செலுத்தியிருக்கும் எண்ணிக்கையை விட முதியவர்கள் குறைந்த சதவீதத்திலேயே தடுப்பூசி செலுத்தியுளளனர்.
வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரானால் பலருக்கு ஒரே நேரத்தில் தொற்று ஏற்ப ட்டால் தீவிர பாதிப்பும் அதிகமானோருக்கு ஏற்படும் என்கிறார். முதியவர்கள் வெளியில் செல்லாததால் அவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்ற எண்ணம்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார். இந்த எண்ணத்தை தவிர்க்க வேண்டும், தடுப்பூசி செலுத்தியதால் தான் கொரோனா மரணங்களை நம்மால் தடுக்க முடிந்தது என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் கையில் இருக்கும் ஆயுதம் என்பதால் அதை தாமதிக்காமல் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்த போதிய விழிப்புணர்வு மற்றும் வசதிகள் ஏற்படுத்தியும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது சமூக பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.