தஞ்சாவூர், அக்.9 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறையாத நிலையில், 17 விழுக்காட்டுக்கு மேல் ஈரப்பதம் இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் பல நாட்களாக நெல்மணிகள் தேங்கி கிடக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும், கடந்த செப்.1 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் 670 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 2.85 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும், விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பதற்காக கொண்டு வந்த நிலையில், நெல்லில் ஈரப்பதம் அதிகளவில் இருப்பதால் நெல்லை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மீண்டும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை உலர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, சங்கராகுளம், பூதலூர், ஆலக்குடி, ராராமுத்திரைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்மணிகளில் ஈரப்பதம் 17 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் நெல்மணிகளை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
இதுபோன்ற பிரச்சனையை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: “தற்போது ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லை கொள்முதல் செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. வரும் காலங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்மணிகளை கடந்த 10 நாட்களாக பாதுகாத்து காய வைக்க போராடி வருகிறோம். 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். மேலும், நெல்லை உலர்த்த போதுமான இடவசதி இல்லாத நிலையும் உள்ளது. அரசு ஏற்கனவே அறிவித்தபடி, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, விற்பனைக்காக நெல்மணிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு அவற்றை காயவைக்கவும், மழை, பனியில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும் தார்ப்பாய்களை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில், நெல்லை உலர்த்த போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும். விபத்துகளை காரணம் காட்டி, சாலைகளில் நெல்லை உலர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விடுகின்றனர். கடந்த ஆட்சியில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் வயல்களுக்கே வந்து கொள்முதல் செய்தனர். அந்த முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரம் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.