tamilnadu

img

போராட்ட நாயகன் தோழர் ஆர்.உமாநாத்

பாட்டாளிகளின் படைத்தளபதி, தொழிலாளர்களின் உற்ற தோழர் ஆர்.உமாநாத்  அவர்களின் பிறந்தநாள் இன்று. மாநிலம் முழுவதும் இவ்வாண்டு முழுவதும் அவரைப்பற்றி படித்ததையும், பார்த்ததையும், கண்டதையும், கற்றதையும் அனுபவப்பாடமாக விழாக்களாக, கூட்டங்களாக கட்டுரைகளாக தோழர்கள் எழுதவும், பேசவும் கொண்டாடவும் இருக்கிறார்கள்.   கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக, ஊழியராக, ரகசிய தகவல்களை  கொண்டு செல்லும் கொரியராக, தலைமறைவாகவும், சிறைச்சாலையில் அடக்கு முறைகளை  சந்ததித்தவராகவும், போர்க்களத்தில் உழைப்பாளிகளின் உண்மையான போர்வாளாகவும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மற்ற நாட்களில் மக்கள் மன்றத்திலும் சண்டமாருதம் செய்பவராகவும், கட்சியின் அரசில் தலைமைக்குழு உறுப்பினராகவும் பல பரிமாணங்களுடன் வாழ்ந்தவர்.  நமக்கெல்லாம் பெரும் அனுபவச் சுரங்கமாக விளங்குபவர். அவர் சென்னையில் மாணவர் சங்கம்,  தொழிற்சங்கம் என்று பல கட்சி பணிகளில் ஈடுபட்ட காலத்தில் சரிபாதி நாட்கள் போராட்டக்களத்திலும், சிறைச்சாலைகளிலுமே கழிந்தன. கோவை பகுதி அவரை ஒரு தொழிற்சங்க தலைவராக்கி தத்தெடுத்துக் கொண்டது. “என்னை வர்க்க ஞானஸ்தானம் கொடுத்து வளர்த்தது கோவை மண்தான்” என்று தோழர் உமாநாத்தே அடிக்கடி கூறுவார். 

1948இல் கட்சி தடைசெய்யப்பட்டபோது தலைமறைவானார். பொன்மலை  பாப்பாவை பார்த்தார், 1952இல் சர்க்கரை செட்டியார், எம்.கல்யாணசுந்தரம், தந்தை பெரியார் ,கே.அனந்தநம்பியார் ஆகியோர் தலைமையில் உமாநாத்திற்கும் பாப்பாவிற்கும் திருமணம் நடந்தது. அதுமுதற்கொண்டு திருச்சி மண்ணில் தொழிலாளர் வர்க்கத்திற்கு தலைமகனானார். எங்கள் மண்ணின்  மருமகனும் ஆனார்.  1952 முதல் ஒன்றுபட்ட திருச்சி, கோவை, தஞ்சை மாவட்டப் பகுதிகளில் அவராற்றிய பங்கு மகத்தானது. கீழத்தஞ்சையில் விவசாயிகளின் பேரெழுச்சி  நடைபெற்ற சமயத்தில்  திருச்சியில் தொழிலாளர்களின் போர்முனை தோழர் உமாநாத்தால் உருவாக்கப்பட்டு ஆலைகளில் புயல் வீசத் தொடங்கியது. 

புதுக்கோட்டை காவிரி மில் போராட்டம், நமணசமுத்திரம் மகா கணபதி மில் போராட்டம், இனாம் விவசாயிகளின் நிலம் மீட்பு போராட்டம் என்று புதுக்கோட்டை முழுவதும் போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தோழர் ஆர்.உமாநாத் போராட்டக்களத்தில் மிளிர்ந்தார். மணிக்கணக்கில், நாள் கணக்கில், வாரக்கணக்கில் என்று பட்டினி போராட்டங்கள் அப்போதைய அரசை அசைத்தது. ஊரெங்கும் உமாநாத் பேச்சு என்றானது.  திருச்சியில் 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற பீடித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம், கரூர் -புகளூர்  மற்றும் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை போராட்டம், கரூர் மில்ஸ் போராட்டம் என்று அனைத்து ஆலை வாயில்களிலும் நடந்த போராட்டங்களில் தோழர் உமாநாத்தின் கலகக்குரல் முதலாளிகளின் ஈரக்குலையை  நடுநடுங்க வைத்தது.  கல்லக்குடியில் டால்மியா சிமெண்ட் கம்பெனியின் சுரண்டலை எதிர்த்து தோழர். பி.ராமச்சந்திரனை தொடர்ந்து தோழர். உமாநாத் நடத்திய 28 நாள் பட்டினிப்போராட்டம் அப்போதைய முதல்வர் அண்ணாவையே நேரடியாக தலையிட வைத்த போராட்டம் ஆகும்,  இப்படி மாவட்டம் முழுவதும் தோழர் உமாநாத்தின் செங்கொடிப் பயணம் தொழிலாளர்களுக்கு உரமாக இருந்தது.  தொழிலாளர்களுக்கும். பொதுமக்களுக்கும் ஆபத்து நேர்ந்தால் நேரடியாக களத்திற்கே சென்றவர் உமாநாத் அவர்கள். அதனால் தான் அவரை புதுக்கோட்டை மக்களும், நாகை மக்களும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தங்களின் களநாயகனாகவும், தளநாயகனாகவும் தேர்ந்தெடுத்து அனுப்பினர்.  

திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறை எஸ்.பி. தாக்கப்பட்டதாக பொய் வழக்கு போடப்பட்ட 80 தொழிலாளர்களுக்காகவும், அவர்கள் மீதான பொய் வழக்கு மற்றும் தாக்குதலை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அரணாக  ஆலை வாயிலுக்கே சென்று ஊக்கமளித்தவர் தோழர் உமாநாத் . லால்குடி - செம்பியங்குடியில் நடந்த கூலி போராட்டம் , வேப்பந்தட்டை கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, துவரங்குறிச்சி இந்து - முஸ்லீம் இடையே நடந்த மீன்பிடி தகராறை தீர்த்து வைத்தது, நாகை - திருவாரூர் மாவட்டத் தலைநகர் பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடம் பேசி, லாவகமாக கையாண்ட விதம்,  தோழர். டி.கே.ரங்கராஜன் தலைமையிலான திருச்சி சிம்கோ மீட்டர் போராட்டத்தை சட்டமன்றத்தில் விவாதித்து நாடறிய செய்து முடித்தது என்று அடுக்கடுக்காக அவருடைய சாகசங்களையும், பங்களிப்புகளையும் ஊர் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைபாடுகளையும் தாங்கள் யாருக்காக செயல்படுகிறோம் என்பதையும் வெளிப்படுத்தி கொண்டே இருப்பாராம். மரண தண்டனை சம்மந்தப்பட்ட அவரின் முதல் உரை, அமெரிக்காவின் உளவுத்துறை சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற விவாதங்களும் அவரை மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாக பறை சாற்றியது. சட்டமன்றத்திலோ உள்ளூர் பிரச்சனைகளை  ஆதாரத்துடன் பேச அவரை மிஞ்ச ஆளேஇல்லை. லால்குடியில் (செம்பியக்குடியில்) தொழிலாளர்களின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி ஆதிக்க சக்திகள் வன்முறையை தூண்டவிருந்ததை ஆதாராத்துடன் பேசி அரைமணி நேரத்தில் ஆதிக்க சக்திகளை விரட்டியடித்தவர் உமாநாத்.  நாகையில்  வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  சந்திக்க முதல்வர் வருவதற்கு முன்பாகவே வெள்ள நீரை கிழித்து கொண்டு இருசக்கர வாகனத்திலேயே திருச்சியிலிருந்து சென்ற சாகசக்காரர். 

தனக்கென்று தனி வாகனம் இல்லாததால் அவ்வப்போது அரசாங்கத்தின் அரிசி லாரியில் ஏறிச்சென்று மக்களை சந்தித்து குறைகளை  கேட்டறிந்தவர். கூட்டங்களுக்குச் செல்லும்போது அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காமல் தானே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிச்செல்வார்.  10 நிமிட பேச்சுக்காக பல மணி நேரம் படித்தும் குறிப்பெடுத்தும்  தயாராவார். அவரது பேச்சுகளில் குட்டிக் கதைகள், கிண்டல்கள், கேலிப் பேச்சுகளும் இருக்கும். கோபம் கூட இருக்கும் , குழந்தைத்தனச் சிரிப்பும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிசப் பதாகை ஜொலிக்கும். இவரின் சாகசங்களையும், போராட்டப் பங்களிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். தான் நடத்திய போராட்டங்களில்  குடும்பத்தையே இணைத்தவர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் என்று இருந்தும் திருச்சி உறையூரில் வாடகை வீட்டிலேயே இறுதிக்காலம் வரை வாழ்ந்து காட்டிய குடும்பம் இவரது குடும்பம் . 

1950 களில் தமிழ் பேசத்தெரியாத, சரியாக எழுதத் தெரியாத இவர்தான்  பிற்காலத்தில் தமிழகத்தின் தலைச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார். சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாவதற்கு ஆதரவு கொடுத்தது. இலங்கைப் பிரச்சனை உள்ளிட்ட  தேசியப்பிரச்சனகளில் நமது கட்சியின் நிலைபாட்டை கட்சி அணிகளுக்கு புரியும் வகையில்  அவர் கொடுத்த சிந்தாந்த விளக்க உரைகள் இன்றும் அனைவர் நெஞ்சிலும் நிற்கும்.  நேர்மையான அரசியல் வாழ்க்கை, எளிமையான வாழ்வியல் முறை , உருக்கு போன்ற கொள்கைப் பிடிப்பு , பாட்டாளிகள் மீது பரிவும் பாசமும், முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனம், சட்டமன்றத்தில் உரிமை முழக்கம், தொழிலாளர்களின்  போர்க்களத்தில் களநாயகன்  என மொத்தத்தில் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாய் தோழர் உமாநாத் திகழ்ந்தார்.  கர்நாடக மாநிலத்தில் பிறந்து காவிரிக் கரையில் தடம் பதித்து சென்னை,  புதுக்கோட்டை, நாகை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் வர்க்கப் போராட்டங்களில் முத்திரைபதித்து  தலைநகர் தில்லியிலும் களமாடிய தன்னிகரில்லா தலைவர் ஆர். உமாநாத் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.

;