புதுக்கோட்டை, மே 26- பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வுப் பணியில் முதல்கட்டமாக செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனால், தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்வு நடத்த வேண்டுமென தொல்லியல் ஆய் வாளர் கரு.இராஜேந்திரன் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்து இருந்தார். வழக்கினை வழக்கறிஞர் கணபதி சுப்ர மணியம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நடத்தினார். இதையடுத்து பொற்பனைக்கோட்டை யில் அகழ்வாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் முதல் கட்ட அகழ்வாய்வை நடத்தினார். தொடர்ந்து விரிவான அளவில் ஆய்வு களை மேற்கொள்ளும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அகழ்வாய்வு இயக்குநராக தொல்லியல் அலுவலர் தங்கதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல் கட்டுமானம்
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தனது அலு வலக முகநூல் பக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 07 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் கட்டுமானம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் தெரிவிக்கையில், பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள், பல்வேறு வகையிலான மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது செங்கல் கட்டு மானம் வெளிப்பட்டு இருப்பதாக தொல்லி யல் துறை அமைச்சர் தகவல் தெரி வித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும். மேலும் ஆய்வு தொடரும்போது தமிழகத்திற்கும், இந்திய வரலாற்றுக்கும், புதிய வெளிச்சத்தை இந்த அகழ்வாய்வு தரும் என்று நம்புகிறோம் என்றார்.