சென்னை,டிச.3- தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து அரசாணையை வெளியிட்டுள்ள அரசு, இரண்டு பணியிடங்களையும் அமைத்துள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளிக்கும் வகையில், “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற திட்ட உதவிகளுடன், திருமண உதவித் தொகையாக ரூ.2000, மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 6000, இயற்கை மரணத்திற்கு 50,000, ஈமச் சடங்கிற்கு ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகையாக பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், தேர்ச்சி பெற்ற குழந்தைகளுக்கு (ஆண் மற்றும் பெண்) ரூ.1000, 12 ஆம் வகுப்பு மற்றும் முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,500 வழங்கப்படும். பட்டமேற்படிப்பு, விடுதியில் தங்கி படிப்பவர்கள், முறையான தொழில்நுட்ப பட்ட படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புக்கும் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழு பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தி துறை அமைச்சரை தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்படும். நிதி ஆதாரம் பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் 1 விழுக்காடு தொகை நலவாரியத்திற்கு வழங்க வேண்டும்.
பத்திரிகையாளர் நலவாரியத்திற்காக புதிதாக நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடத்தை உருவாக்கியுள்ளது. மேலும், திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே பத்திரிகையாளர் நலவாரிய பணிகளையும் மேற்கொள்வார்கள். குழு கலைப்பு நடைமுறையிலுள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக்குழு கலைக்கப்படுகிறது. பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக்குழு அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்ற அமைக்க உத்தேசித்துள்ள தமிழ்நாடு ஊடக மன்றத்தின் (பிரஸ் கவுன்சில்) கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.