tamilnadu

img

‘இரும்பு மனிதரை’ சுக்கு நூறாக்கியவர்கள்!

உலகத்திலேயே அதிக உறுப்பினர் களை கொண்ட விவசாய சங்கம் இருக்கிறதென்றால் அது அகில இந்திய விவசாயிகள் சங்கம் தான் என பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன், இன்னும் 10 ஆண்டுகளை கடந்தால் 100 ஆண்டு விழாவை கொண்டாடக்கூடிய சங்கம் இந்தியாவில் இருக்கிறதென்று சொன்னால் அது அகில இந்திய விவசாயிகள் சங்கம் தான்.நீண்ட வரலாறு படைத்த  சங்கம் இது.  நாகை மண்ணில் இருக்கிறவர்களையும், வீர வெண்மணியில் இருப்பவர்களையும் கேட்டுப் பாருங்கள், நிலப்பிரபுகளின் கொடுமைகள் எப்படி இருந்தது என்று; விவசாயிகளையும், விவசாய தொழி லாளர்களையும் எப்படி நடத்தினார்கள் என்று. நாடு விடுதலை பெற்ற பிறகும் விவசாயி களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் விடுதலை கிடையாது;  பட்டாளிகளாக இருக்கிற கிராமப்புற மக்களுக்கு விடுதலை கிடையாது; நிலப்பிரபுக்களும்,ஜமீன்களும் அடக்கி ஆண்ட கொடுமைகள் நடந்தது. பல பேர் உங்கள் சாதனை என்ன? என்று  கேட்கின்றனர்.  நான் அவர்களுக்கு சொல்கிறேன். இடுப்புக்கு கீழே இருந்த துண்டை தோளிலே போட வைத்ததும்,  முழங்காலுக்கு மேலே இருந்த புடவையை கணுக்காலுக்கு இறங்க வைத்ததுமான அந்த சாதனைகளை படைத்தது இந்த செங்கொடி இயக்கம்  தான்.

எல்லாவற்றையும் உழைத்து பண்ணை யாளர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் அளந்து கொடுத்துவிட்டு வெறும் கருக்காயை மட்டும் அள்ளிச் சாப்பிட்ட, அப்படிப்பட்ட கூட்டமாக இருந்த மண்ணிலே இன்றைக்கு  நிலப்பிரபுக்களும், பண்ணை யார்களும் நம்மை பார்த்து  முடிந்தவரை குத்தகையைக் கொடுங்கள் என்ற நிலைமையை உருவாக்கி இருக்கிறோமே  இது யாருடைய சாதனை?  தமிழகத்தில் செங்கொடி இயக்கம் ஆட்சியில் இல்லை; எதிர்க்கட்சி பொறுப்பில்  கூட இல்லை; ஆனால் ஆட்சி செய்பவர் களை விடவும் இந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்று தந்திருக்கிறோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். 

இரும்பு மனிதரை சுக்குநூறாக...

மோடி இரும்பு மனிதராம், அண்ணாமலை சொல்கிறார். நீங்கள் இரும்பு மனிதராக இருங்கள்; கிராமப்புறத்தில் இருக்கிற விவசாயிகளெல்லாம் திரண்டெழுந்து தில்லியிலே உங்களை அதிர வைத்தார்கள். இரும்பு மனிதரை சுக்குநூறாக்கிய பெருமை  இந்த விவசாய இயக்கத்திற்கு உண்டு. எந்த வாயால் வேளாண் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிவித்தீர்களோ அதே வாயாலேயே  அந்த 3 சட்டங்களையும் வாபஸ் வாங்க வைத்திருக்கிற அந்த மகத்தான சக்தி எங்களிடம் இருக்கிறது.  தில்லியில் விவசாயிகள் நடத்தியது மோடிக்கு எதிராக நடத்திய போராட்டம் அல்ல; போட்டி அரசாங்கத்தையே விவசாயிகள் நடத்தியிருக்கிறோம். 

இந்திய நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துக்கொண்டே  வருகின்றனர். மின்சார உரிமையை பறிக்கிற மின்சார திருத்த மசோதா வரப்போகிறது, ஆலைகளில் தொழி லாளர்கள் போராடிப்பெற்ற உரிமை களெல்லாம் பறித்துவிட்டார்கள், விவசாயி களின் சலுகைகளெல்லாம் பறித்துவிட் டார்கள், காப்பீடுத்திட்டத்தையே ஒழித்து விட்டார்கள், குறைந்தபட்ச விலை நிர்ணயம் கிடையாது. வடமாநிலங்களில் பாஜக ஆளுகிற மாநிலத்தில் கொள்முதலை ஒழித்து விட்டதன் விளைவாக கோதுமைக்கு மக்கள் தவிக்கும் நிலை உருவாகிவிட்டது.நியாயவிலைக்கடைகளில் அரிசி,கோதுமை கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து விட்டனர். பருத்தியை முதலாளிகள் பதுக்கியதால் நூல் விலை ஏறிவிட்டது. தமிழகத்தில் 3 ஆயிரத்து 500 நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டன.  நூறு நாள் வேலைத்திட்டத்தை சிதைத்து படிப்படியாக அதற்கு ஒதுக்கக் கூடிய நிதியை குறைத்துவிட்டார்கள். 70  ஆண்டுக்காலத்தில் உருவாக்கிய மக்கள்  சொத்துக்களான எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றார்கள். இவை  அனைத்தையும் முறியடிக்க போராட்டங் களை மேலும் வலுவாக்குவோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு சனி யன்று மாலை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற செங்கொடிப் பேரணியுடன் பேரெழுச்சியுடன் நாகப்பட்டினத்தில் துவங்கியது. 

பேரணியை தொடர்ந்து தோழர்.கோ.வீரய்யன் நினைவுத்திடலில் (அவுரித்திடல்) சங்கத்தின் மாநிலத்தலைவர் வி.சுப்ரமணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் எம்.என்.அம்பிகாபதி வரவேற்றுப் பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், சிபிஎம் மாநில செயலாளருமான கே.பாலகிருஷ்ணன்,மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

சங்கத்தின் அகில இந்திய இணை செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத் , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை,  சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர்கள் பி.டில்லிபாபு,  சாமி.நடராஜன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முகமது அலி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.   

நிறைவாக மாவட்ட பொருளாளர் எஸ்.பாண்டியன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

;