10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும்போராட்டம்
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வருகிற டிசம்பர் 10ஆம் தேதி போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். டிச 10 தேதி அன்று இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்கள் 12 மணியிலிருந்து 10 நிமிடம் வாகனங்களை நிறுத்துங்கள் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வாகன ஓட்டிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக வாகனங்கள் 10 நிமிடம் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி மிக மோசமான பாதிப்புகளை தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி மாதம் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்திட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.
செங்கல்பட்டு, டிச. 5- அரசு போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தமிழக அரசு நடத்தாமல் தள்ளிப்போடுவது சரியல்ல என்றும் உடனடியாக பேச்சு நடத்தவேண்டும் என்றும் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில சம்மேளன கூட்டம் செங்கல்பட்டில் ஞாயிறு அன்று (டிசம்பர் 05) சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா?
கே.ஆறுமுக நயினார், உதவித் தலைவர்கள் எம்.சந்திரன், அன்பழகன், பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக அரசு சென்றுவிட்டது. தற்போது வந்துள்ள அரசு ஒப்பந்தம் போடப்படும் என அறிவித்தார்கள் தேர்தல் வாக்குறுதியில் இது உள்ளது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆன பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பேசப்படுவதில்லை. அரசு உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராடிய கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் கோபத்திலும் வேதனையில் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தை சிறப்பாக நடத்துவோம் என அரசு கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கான உருப்படியான நடவடிக்கை ஏதும் அரசிடம் இல்லை. அவர்கள் ஒரு குழு போட்டார்கள் அந்த குழு அளித்துள்ள விரிவான அறிக்கையில் பல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன ஆனால் அதையும் செய்ய சரியான நடவடிக்கை அரசிடம் இல்லை. பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரம் குறைந்துள்ளது.
பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பேருந்துகளை பராமரிப்பதற்கான போதிய ஊழியர்கள் இல்லை. உதிரிப் பாகங்கள் இல்லை. கடந்த காலங்களில் ஒரு பேருந்து ஆறு வருடம் அல்லது 7 லட்சம் கிலொ மீட்டர் ஓட்ட வேண்டும் என இருந்தது. அரசு தற்போது ஆறு வருடத்தை 9 வருடமாகவும், 7 லட்சத்தை 12 லட்சம் கிலொமீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் இந்த பழைய பேருந்துகளை சிரமப்பட்டு ஓட்டுகின்றனர். இதனால் உதிரிப்பாகம், பராமரிப்பின் தேவை அதிகரிக்கின்றன. ,தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசிடம் இல்லை. இதனால் பொது போக்குவரத்தில் பல பிரச்சனைகள் உள்ளது. பேட்டா பிரச்சினையில் மட்டும் 27 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களிடமிருந்து எல்ஐசி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்காமல் பேருந்துகளை இயக்க பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூக காரணங்களுக்காக பயன்படுத்தும் பேருந்துகள் என்பதால் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டும் இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்யா விட்டால் தொழிலாளர்களுக்கு அரசுக்குமான பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு சவுந்தரராசன் கூறினார்.