tamilnadu

img

யாருமே படிக்காத புத்தகம்! - அறிவுக்கடல்

‘இதுவரை யாரும் படிக்காத புத்தகம்...’ என்று கவிதைகளில் வருணிக்கக் கேட்டிருக்கலாம். ஆனால், யாருமே படிக்காத புத்தகம் ஒன்று உண்மையிலேயே இருக்கிறது...! அது அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் அரிய நூல்கள், கையெழுத்துப்படிகள் ஆகியவற்றுக்கான நூலகத்தில் உள்ளது. ஆனால், அதை யாரும் படித்ததில்லை! ஆம்! உண்மைதான்...! இதுவரை யாருமே படிக்கவில்லை, அதனால் அது என்ன நூல், என்ன எழுதப்பட்டுள்ளது என்ற எதுவும் தெரியவுமில்லை!

அதெப்படி யாரும் படிக்காமல் ஒரு நூல் இருக்க முடியும்? இருக்கிறதே...! அழகாக வரையப்பட்ட படங்கள், அச்சிட்டதைப் போன்ற திருத்தமான, வரிசை யான எழுத்துகள் ஆகியவற்றுடன் காகிதத்திற்கு முன் ஆவணங்கள் எழுதப் பயன்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களில்(பார்ச்மெண்ட்), 240 பக்கங்களுக்கு உள்ள அந்த நூலில் எழுதப்பட்டுள்ள மொழி என்னவென்று யாருக்குமே தெரியாததால், அதை யாருமே படிக்க  முடியவில்லை! எந்த மொழியானாலும், அதையோ, அதி லிருந்து உருவான பிற்கால மொழிகளையோ பேசு பவர்கள், படிப்பவர்கள் இருப்பார்களே? அப்படித்தான் தேடியிருக்கிறார்கள், ஆனால், உலகின் எந்த மொழி யுடனும் அது பொருந்தவில்லை. இன்னும் மேலே போய்,  சங்கேத மொழிகளைப் படிக்கும் க்ரிப்டோ அனாலிசிஸ் துறையின் விற்பன்னர்கள்கூட முயற்சித்து, படிக்க முடி யாமல் தோற்றுப் போய்விட்டார்கள். அப்படியான ஒன்று  எங்கிருந்து வந்தது? போலந்து நாட்டைச் சேர்ந்த புத்தகக் கடைக்கார ரான வில்ஃப்ரட் வாய்னீச் என்பவர்தான் இதை முதன்முத லில் பரவலாகப் பேசச் செய்தவர். அவர் 1912இல் இந்த நூலை வாங்கிய பின்தான் இதைப் பற்றி வெளியில் தெரிந்தது என்பதால், இந்த நூலே ‘வாய்னிச் மேனுஸ்க்ரிப்ட்(வாய்னிச் கையெழுத்துப்படி)’ என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, இதில் எழுதப்பட்டுள்ள மொழியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், இந்த நூலின் மொழியே ‘வாய்னிச்சீஸ்’ என்றுதான் இன்று வரை குறிப்பிடப்படுகிறது. ‘இந்தக் காரை வைச்சிருந்த  சொப்பன சுந்தரிய....’ என்று கேட்ட மாதிரி, வாய்னிச் வைத்திருந்த இந்த நூலை அதற்கு முன் யார் வைத்திருந்தார்கள்? இத்தாலியில் இயேசுவின் சமூகம் என்ற அமைப்பு, நிதிப் பற்றாக்குறை காரணமாக, அவர்கள் திரட்டி வைத்தி ருந்தவற்றை வாட்டிகன் நூலகத்திற்கு விற்றது. அப்போது, வாட்டிகன் நூலகம் வாங்க மறுத்துவிட்ட சுமார் 30 நூல்களை வாய்னிச் வாங்கினார். அதில் ஒன்றா கத்தான் இதுவும் அவரிடம் வந்தது. 

இந்த நூல் எழுதப்பட்டுள்ள விலங்குத் தோலினை  கார்பன் டேட்டிங்(கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு) முறையில் ஆய்வு செய்து, இது கி.பி.1404க்கும் 1438க்கும்  இடைப்பட்ட காலத்தியது என்று கண்டுபிடித்திருக்கி றார்கள். ஆனால் இதன் தொடக்க இரு நூற்றாண்டு வர லாறு யாருக்கும் தெரியவில்லை. 17ஆம் நூற்றாண்டில் தற்போதைய செக் நாட்டின் தலைநகரான பிரேக் நகரைச்  சேர்ந்த, பழம்பொருள் சேகரிப்பாளரான ஜார்ஜ் பரேஷ்  என்பவரிடம் இருந்தது என்பதுதான் இதைப் பற்றித் தெரி கிற முதல் தகவல். அவருக்கு இந்த நூல் எப்படிக்  கிடைத்தது என்பது அவருக்கே தெரியவில்லை. தனது  நூலகத்தில் பயனில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கிறதே என்று பார்த்தபோதுதான், அது  படிக்க முடியாத மொழி என்று அவருக்குத் தெரிந்தது.  அதனால், எகிப்தின் ஹைரோக்ளைஃப் எழுத்துகளை ஆய்வு செய்து, விளக்கமளித்த மொழியியல் விற்பன்ன ரான கிர்ச்சர் என்பவரிடம், இந்த மொழி பற்றி தெரியுமா  என்று கேட்டு, 1639இல் பரேஷ் எழுதிய கடிதம்தான் இதைத் தெரிவிக்கிறது. 

மொழி என்னவென்று தெரியவில்லை என்று கைவிரித்துவிட்ட அந்த கிர்ச்சர், நூலைத் தனக்குத் தரு மாறு கேட்க, பரேஷ் மறுத்துவிட்டார். ஆனால், அவரது  இறப்புக்குப்பின் இந்த நூல் ப்ரேக் நகரின் சார்லஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் தலைவரான மார்சி என்பவரால் கிர்ச்சருக்கே அனுப்பப்பட்டது என்பது  தனிக்கதை. அப்போது, கிர்ச்சரைத் தவிர வேறு யாரா லும் படிக்க முடியாது என்று குறிப்பட்டு மார்சி எழுதிய,  1665 ஆகஸ்ட் 19 தேதியிட்ட கடிதமும், வாய்னிச் இந்த நூலைப் பெறும்போது இதனுடன் இருந்தது. அடுத்த சுமார் 200 ஆண்டுகளுக்கு இந்த நூல் எங்கிருந்தது என்று தெரியவில்லை. போப் தலைமையிலான திருத் தந்தை நாடுகளை இத்தாலி அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் கைப்பற்றியபோது, 1866இல் இது இயேசுவின் சமூகம் அமைப்பை வந்தடைந்திருக்கிறது. அவர்களிடமிருந்து வாங்கிய வாய்னிச் 1930இல் இறந்தபின் அவர் மனைவியால் விற்கப்பட்டு, சில கைகள் மாறி, பழைமையான நூல்களை வாங்கி விற்பவர் ஒருவரை 1961இல் வந்தடைந்தது. அதை யாரிடமும் விற்க முடியாததால் அவர் யேல் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்துவிட்டார். தோலால் ஆன 240 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூலில் மேலும் பக்கங்கள் இருந்து காணாமற் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பக்கங்கள் ஒரே அளவில் இல்லாமல், பெரிய அளவிலான சில பக்கங்கள் மடித்தும் வைக்கப்பட்டுள்ளன. யேல் பல்க லைக்கழக டிஜிட்டல் நூலகத்தில் இந்த நூல் 2020இல்  பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைத்துப் பக்கங்களும்  இப்போது இணையம்வழியாகக் காணக்கிடைக்கின்றன.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகள் மக்கள் பேசிய ஏதோ ஒரு மொழியினுடையவை என்பது தொடங்கி, சங்கேத மொழி, அதற்கான குறியீடு, ஏதோ ஒரு சமூகத்தின் சட்டத் தொகுப்பு, தகவல் களஞ்சியம் என்றெல்லாம் கூட இன்றளவும் இந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. அப்படி எதுவுமே இல்லை, ‘வெற்றுப் புரளி’ என்றுகூட, அதாவது மற்ற வர்களைக் குழப்புவதற்காக யாரோ இப்படி இல்லாத மொழியில் எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றுகூடச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனாலும், இன்று வரை மனிதனால் படிக்கப்படாத ஒரு - ஒரே புத்தகமாக, மனிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதாக இந்த வாய்னிச் மேனுஸ்க்ரிப்ட் விளங்குகிறது!

;