tamilnadu

img

என்பிஆர், என்ஆர்சி, சிஏஏஆகியவற்றிற்கு எதிராக கேரள அரசின் உறுதியான நடவடிக்கைக்கு பாராட்டு

என்பிஆர், என்ஆர்சி, சிஏஏஆகியவற்றிற்கு எதிராக கேரள அரசின் உறுதியான நடவடிக்கைக்கு  இந்திய தேசிய மக்கள் மன்றத்தின் குழுவினர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) பணிகளை முடித்து தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உருவாக்குவதே அரசின் திட்டம். இதை வெளிப்படையாக சொல்லாமல், மக்களுக்கான நல்வாழ்வு திட்டம் உருவாக்கவும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவுமே தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

திட்டங்கள் வகுத்திட அரசிற்கு வேண்டிய தகவல்களை புள்ளிவிவரங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிற்கு அளித்து வருகிறது. மக்களுக்கு நலத்திட்டங்கள் கொண்டு சேர்க்க "ஆதார்"  பயன்படுகிறது. இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறிய பிறகு தேசிய மக்கள் தொகை பதிவேடு 2020 அவசியமற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெறப்படும் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும். எவராலும் அத்தகவல்களை பார்வையிட முடியாது. நீதிமன்றம் கூட அதில் இருந்து விபரம் கோர முடியாது. இந்த உத்திரவாதம் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையில் இல்லை.  தனிமனித விபரங்கள் பொது வெளிக்கு செல்வது தனிமனித பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும். பத்தாண்டிற்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே 2020ல் நடைபெற வேண்டும்.  அதற்கு மாற்றாக 2020ல் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை மேற்கொள்வது அதில் இருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கத் தான் என்பது தெளிவாகிறது.
என்பிஆர் உருவாகிவிட்டால் அதில் இருந்தே என்.ஆர்.சிஉருவாக்கிக் கொள்ளலாம். என்பிஆர் 2020யில் பல்வேறு விபரங்களுடன் ஒவ்வொருவருடைய தாயின், தந்தையின் பிறப்பிடம் கேட்கப்படுகிறது. 
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுதலைக்குப் பிறகு ஏழு முறை நடந்துள்ளது. இதுவரை தாய், தந்தையின் பிறப்பிடம் கேட்கப்படவில்லை.
திடீரென 2020ல் தேசிய மக்கள் தொகை  பதிவிற்காக  இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய அவசியம் என்ன?  என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளது.தாயின், தந்தையின் பிறப்பு சான்று இல்லாதவர்கள் நிலை என்னவாகும் என்று ஐய்யமும் எழுந்துள்ளது‌. 
என்பிஆர் - என்ஆர்சி ஐய்யங்களுடன் சிஏஏ கூடுதல் பதட்டத்தை உருவாக்குகிறது.  அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், குறிப்பாக பிரிவு 14க்கு நேர் எதிராக குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அமைந்துள்ளது.  குறிப்பிடப்பட்ட சில நாடுகளில் இருந்து வரும் சில மதத்தினருக்கு மட்டும் இந்தியாவில் குடிமக்கள் ஆக அனுமதிக்கிறது இச்சட்டம். குறிப்பிடப்பட்ட அந்த நாடுகளில் இருந்து வந்த குறிப்பிட்ட மதத்தினர் தவிர மற்றவர்கள் இந்தியாவில் இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் நுழைந்தவர்கள் (illegal immigrants) என்று அறிவிக்கப்பட்டு வெளியேற்றப் படுவார்கள்.
என்பிஆர்- என்ஆர்சி -சிஏஏ ஆகிய மூன்றும் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பல ஐய்யங்களையும் உருவாக்கி உள்ளது. அதிகார பலத்தின் அடிப்படையில் செயல் படாமல் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிப்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்ய வேண்டிய செயல்.  மக்கள் ஆட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேரள மாநிலத்தில் அம்மாநில அரசு தேசிய மக்கள் தொகை பதிவு பணிகளை நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளது.
எதிர்கட்சியையும் இணைத்துக் கொண்டு போராடும்  மாநில அரசின் நடவடிக்கை குறிப்பாக முதலமைச்சர் பினராய் விஜயனின் அணுகுமுறை மக்களாட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பிய கேரள மக்களையும், மக்களின் குரலாக செயல்பட்ட மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயன் அவர்களையும்,  இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளாவில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல் அமைச்சருடன் சேர்ந்து பங்கேற்ற கேரள சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தாலாவையும் பாராட்டிட இந்திய தேசிய மக்கள் மன்றத்தின் பிரதிநிதி குழு (Delegation of Indian National Peoples'Forum) ஐ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமையில் திருவனந்தபுரம் சென்றிருந்தது.

31.12. 2019 அன்று கேரளா மாநில முதல் அமைச்சர் திரு. பினராய் விஜயன் அவர்களை திரு. ஐ. பி. கனகசுந்தரம்,  முனைவர் பி. இரத்தினசபாபதி, திரு. ச.சாகிர்ஹூசைன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா முழுவதும் மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்த முன்முயற்சி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனுவையும் அளித்தனர்.
அதில் மாநில முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்ட கேரள முதல் அமைச்சர் முன் முயற்சி எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.
மனுவை பெற்றுக் கொண்ட பினராய் விஜயன் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சி மாண்புகளையும் காத்திட கேரள மக்களும், கேரள அரசும் என்றும் முன்னணிப் படையாக திகழ்வார்கள் என்று உறுதியுடன் தெரிவித்தார். 

;