tamilnadu

img

கம்யூனிசக் கொள்கையைப் பரப்ப இந்தியாவுக்கு வந்த பிலிப் ஸ்பிராட் - ப.முருகன்

இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களில் பிலிப் ஸ்பிராட்டும் ஒருவர். இவர் பெஞ்சமின் பிரான்சிஸ் பிராட்லியுடன் இணைந்து செயல்பட்டார். இவர்கள் இருவரும் மீரட் சதி வழக்கில் சிறை தண்டனை பெற்றனர். பிலிப் ஸ்பிராட் ஒரு எழுத்தாளர் மற்றும் அறிவு ஜீவி. அவர் சோவியத் நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரிட்டிஷ் பிரிவால் இந்தியாவில் கம்யூனிசத்தை பரப்புவதற்காக ஆரம்ப காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மெக்சிகோவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கிய எம்.என்.ராயுடன் இணைந்து செயல்பட்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப் பணிகளில் செயல்பட்ட பிலிப் ஸ்பிராட் அதன் நிறுவகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பிலிப் ஸ்பிராட் கேம்பர்வெல் என்ற நகரத்தில் 1902 செப்டம்பர் 26 அன்று பிறந்தார். அவரது தந்தை ஹெர்பெர்ட் ஸ்பிராட் பள்ளி ஆசிரியர். தாய் நோரா ஸ்பிராட். இந்த தம்பதியரின் 5 குழந்தைகளில் ஒருவர் பிலிப் ஸ்பிராட். இவரது மூத்த சகோதரர் டேவிட் ஸ்பிராட் முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படையில் பணியாற்றிய போது 1917ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இவரது தந்தை தீவிர கிறிஸ்தவர். ஆனால் பிலிப் ஸ்பிராட்டோ மதத்தை மறுப்பவராக இருந்தார். அவர் 17ஆவது வயதில் 19ஆம் நூற்றாண்டின் உடற்கூறு அறிவியலில் நல்ல ஞானம் பெற்றிருந்தார். அதன்பின்னர் உயிரியலை ஆர்வத்தோடு கற்றார். தினமும் தேவாலயம் சென்ற பிறகு மாலையில் அந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வார். அத்துடன் நூலகத்திற்குச் சென்று நிறைய நேரம் படிப்பதில் செலவழிப்பார்.  கல்லூரியில் சேர்ந்து கணக்குப் பாடத்தில் திறமையாக படித்ததால் கேம்ப்ரிட்ஜ் நகரின் டவுனிங் கல்லூரியில் 1921ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தின் உதவித்தொகையைப் பெற்றார். அத்துடன் அவர் இலக்கியம், தத்துவம், உளவியல், மானுடவியல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டு கற்றார். அவர் யூனியன் சொசைட்டி, பல்கலைக்கழக தொழிலாளர் மன்றம் ஆகியவற்றில் பங்கேற்று தனது நேரத்தை அதில் செலவழித்தார். அந்தக் காலத்தில் பிரிட்டனில் எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு அந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டது. அதில் ஜே.டி.பெர்னால், பிராங்க் பி. ராம்சே, வரலாற்றாசிரியர் ஆலன் ஹட், எழுத்தாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு அருகே இருந்த ரயில்வே ஸ்டேசனில் ஸ்பிராட், உல்ப் ராபர்ட்ஸ் ஆகியோர் ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’பத்திரிகையை  ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் விற்பனை செய்வதில் ஈடுபட்டனர். லண்டன் யுனிவர்சிட்டி லேபர் பார்ட்டியிலும் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில்தான் 24வது வயதில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் பிலிப் ஸ்பிராட் 1926ம் ஆண்டு ரஜினி பாமிதத்தின் மூத்த சகோதரர் கிளமென்ஸ் தத்தால் இந்தியாவுக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்படுவதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியா வந்தபின் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளிலும் குறிப்பாக தொழிலாளர் விவசாயி கட்சியின் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தினார் ஸ்பிராட்.  அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி, தொழிற்சங்கங்கள் இளைஞர் அமைப்புகளில் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

இந்தக் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் பெஞ்சமின் பிராட்லியுடன் இணைந்து செயல்பட்டார். இந்தியாவின் பல நகரங்களில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், தொழிற்சங்க வாதிகள், காங்கிரஸ்காரர்கள் மற்றும் பலரது செயல்பாடுகளையும்  பிரிட்டிஷ் போலீசார் கண்காணித்து வந்தனர். ஆயினும் இந்தக் காலங்களில் தொழிலாளி விவசாயிகள் கட்சி நடவடிக்கைகளில் ஸ்பிராட் தீவிரமாகப் பணியாற்றினார். இந்தியாவில், கம்யூனிஸ்ட் கட்சியை வளரவிடாமல் செய்வதற்காக பிரிட்டிஷ் அரசு ஒரு சதி வழக்கைத் தொடர்ந்து இடையூறு செய்தது.  1927ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஸ்பிராட்டும் சேர்க்கப்பட்டார். அதற்கு அவரது வீட்டில் சட்டவிரோதமான கடிதங்கள் மற்றும் பிரசுரங்கள் இருந்ததாக காரணம் கூறப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியினை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாகக் கூறி 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டு காலம் நடந்தது. அதில் ஸ்பிராட்டுக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது பின்னர் மேல்முறையீட்டின்போது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தண்டனை முடிந்து 1934 அக்டோபர் ஸ்பிராட் விடுதலை ஆனார். அவரது சிறை அனுபவம் குறித்து அன்றைய மனநிலை குறித்தும் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மாடர்ன் ரெவ்யூ இதழில் 1937ல் கட்டுரை எழுதினார். 

1930ஆம் ஆண்டுகளில் துவக்கத்தில் ரஷ்யாவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வந்தார். இந்தக் காலத்தில் அவர் கம்யூனிசத்தின் மீது தனது நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் ஒத்துழையாமை இயக்கக் காலத்தின்போது மீண்டும் கைது செய்யப்பட்டார். பெல்காம் முகாம் சிறையில் 18 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார். அதற்குப் பின்னர் 1936 ஜுன் மாதத்தில் விடுதலையானார். மீரட் சதி வழக்கில் தண்டனைப் பெற்று சிறைவாசம் அனுபவித்தப் போது, ஸ்பிராட் இந்தி கற்றுக் கொண்டார். அப்போதுதான் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களைப் படித்தார். 1934ஆம் ஆண்டில் விடுதலைப் பெற்ற ஸ்பிராட் சென்னை வந்தார். அங்கு சிங்காரவேலரின் அண்ணன்  மகள் சீதா என்பவரை 1939ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். 1939ஆம் ஆண்டு சோவியத் நாடு ஹிட்லரின் படையெடுப்பிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காக பின்லாந்து நாட்டை தன் ஆளுகைக்கு உட்படுத்தியது. ஆயினும் ஹிட்லர் முறியடிக்கப்பட்ட பின்னர் பின்லாந்தை சுதந்திர நாடாகவே செயல்படச் செய்தது சோவியத் நாடு. ஆனால் ஸ்பிராட் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்தார். 

அதன்பின்னர் 1943ஆம் ஆண்டு எம்.என்.ராயின்  தீவிர ஜனநாயகக் கட்சியில் ஸ்பிராட் இணைந்து 1948ஆம் ஆண்டு வரை அதில் செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு புதிதாக உருவான இந்திய கலாச்சார சுதந்திர காங்கிரஸ் அமைப்பின் செயலாளராக செயல்பட்டார். அந்த அமைப்பின் பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதிவந்தார். 1952ஆம் ஆண்டு காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கூறினார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நேரு அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகளை விமர்சிப்பதில் தனித்து விளங்கினார்.  அதன்பின்னர் பெங்களூரில் நிரந்தரமாக குடியேறினார். அங்கு அமெரிக்க ஆதரவு பத்திரிகையான ‘மைஸ் இன்டியா’வின் முதன்மை ஆசிரியராக 1964ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.  கடைசியாக சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு ராஜாஜி நடத்திய ‘சுவராஜ்யா’ பத்திரிகையில் பணிபுரிந்தார். இந்தக் காலங்களில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான பிரசுரங்கள் கட்டுரைகளை எழுதினார். அத்துடன் பிரெஞ்ச், ஜெர்மனி, தமிழ், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 1971ஆம் ஆண்டு மார்ச்  8 அன்று காலமானார்.

;