தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான தரவுத்தளமாகச் செயல்படும் என்பதால் அதனை அனைவரும் எதிர்த்திட வேண்டும் என்று எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தில்லியில் உள்ள தில்லிப் பல்கலைக் கழகத்தின் வடக்கு வளாகத்தில் புதன் கிழமையன்று எதிர்ப்புக் கிளர்ச்சி ஆர்ப்பாட்டம்/பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றியபோது, அருந்ததி ராய் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
“தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு அளிக்கப்படும் விவரங்கள், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான தரவுத்தளமாகச் செயல்படும். எனவே, மக்கள் தேசியக் மக்கள்தொகைக்கு தவறான பெயர்களையும் முகவரிகளையும் அளித்திட வேண்டும்.தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கு எதிரானது. இப்போது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் பெயரில் விவரங்களைச் சேகரிப்பதற்காக வீட்டிற்கு வரும் ஊழியர்கள், தாங்கள் பெற்றிடும் விவரங்களை தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கும் பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே அவர்கள் உங்கள் பெயர்களையும் முகவரியையும் கோரினால் வித்தியாசமான பெயரையும், முகவரியையும் கூறுங்கள். உதாரணமாக, 7, ரேஸ் கோர்ஸ் சாலை என்று கூறுங்கள் (இது பிரதமரின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது). இவ்வாறு பல்வேறு வடிவங்களில் நாம் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தன்னுடைய அரசாங்கம் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்தும், நாட்டில் சிறை முகாம்கள் அமைப்பது குறித்தும் எதுவும் சொல்லவில்லை என்று பொய்களை அள்ளிவீசியிருக்கிறார். இது வடிகட்டிய பொய்கள் என்று அவருக்குத் தெரியும் என்றாலும், நாட்டிலுள்ள பல ஊடகங்கள் அவரது பொய்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராயிருப்பதால் அவர் அவ்வாறு அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்.” இவ்வாறு அருந்ததிராய் பேசினார். கிளர்ச்சியாளர்கள் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையை உரத்துப் படித்துக் காண்பித்து, இதனை மாற்றுவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம் என்று கூறினார்கள். மேலும் மாணவர்கள், பாஜக அரசாங்கத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்ப முடியாது என்றும் முழக்கமிட்டார்கள். மேலும் மாணவர்கள் அமைதியாக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்தும் முழக்கமிட்டார்கள்.
இக்கிளர்ச்சிப் போராட்டத்திற்கு குடியுரிமைத் திருத்தச்சட்டம்/ தேசியக் குடியுரிமைப் பதிவேட்டு ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கான கூட்டுக்குழு அறைகூவல் விடுத்திருந்தது.மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமையன்று தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை மேம்படுத்துவதற்காக 3,941.35 கோடி ரூபாய் ஒதுக்கிடு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு முன்பு 2010இல் ஒவ்வொரு வீடாகச் சென்று 2011ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கிற்காக விவரங்கள் தொகுக்கப்பட்டது. பின்னர் இது 2015இல் மேம்படுத்தப்பட்டது.
(ந.நி)