tamilnadu

img

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர ஜீவா ஒப்புக் கொண்டார் - பி.ராமமூர்த்தி

1934ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டது. தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டமும் நிறுத்தப்பட்டது. அவ்வருடத்தில்தான் முதன்முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலக்குழு உறுப்பினரானேன். முத்துரெங்க முதலியார் மாநிலக் கமிட்டியின் தலைவர். அவ்வருட இறுதியில் பாட்னாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்கு நானும் ஒரு பிரதிநிதியாகச் சென்றிருந்தேன். இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் சம்பூர்ணானந்த், ஆச்சார்யா நரேந்திரதேவ், அச்சுதப்பட்டவர்த்தன், தினகர்மேத்தா, எம்.ஆர்.மசானி, யூசுப் மெஹ்ரலி முதலியோரின் முயற்சியால் காங்கிரஸ் மாநாட்டையொட்டி ஒரு தனி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானது. இதில் நானும் கலந்து கொண்டேன். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி நடவடிக்கை எதுவும் இல்லை. அதன்பின்தான் “தீவிர இளைஞர்கள் மாநாடு” ஒன்றை சென்னையில் நடத்தினோம்.

இம்மாநாட்டிற்கு, மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.நிம்கர் தலைமை வகித்தார். சுந்தரய்யா, மனிபென்காரா, எச்.டி.ராஜா, பி.எஸ்.ஆர்.முதலியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு முடிந்த சில நாட்களில் சென்னைக்கு வரவிருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளிக்கும் வரவேற்பில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்ற விஷயம் குறித்து மாநாட்டில் பலத்த விவாதம் நடைபெற்றது. சுந்தரய்யாவின் யோசனைப்படி, இவ்வரவேற்பில் கலந்து கொள்ளக்கூடாது என்று பி.எஸ்.ஆரும் இன்னும் சிலரும் வாதித்தனர். இதை நான் எதிர்த்தேன். பெருந்திரளான மக்கள் அதிலும் அரசியல் மனோபாவங்கொண்ட மக்கள் கூடும்பொழுது, இத்தகைய மக்களுடன் நெருங்கியிருந்தால்தான் அவர்கள் நமது கருத்துக்காதரவாகத் திரட்ட முடியுமென்று நான் கூறி வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டுமென்றேன். இறுதியில் என்னுடைய தீர்மானத்தை மாநாடு ஏற்றுக் கொண்டது. இம்மாநாடு முடிந்த பின் சுந்தரய்யா “ராமமூர்த்தி காங்கிரஸ்காரர், அவரிடம் எச்சரிக்கையாக இரு” என்று பி.எஸ்.ஆரை எச்சரித்திருக்கிறார். சில தினங்கள் கழித்து சென்னைக்கு வந்த ராஜேந்திர பிரசாத்துக்கு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அளிக்கப்பட்ட மிகப்பெரும் வரவேற்பில் நானும் கலந்து கொண்டேன்.

மீரட் மாநாடு

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு மீரட் நகரில் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். இம்மாநாட்டில் அஜய்கோஷ், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் மற்றும் பல தோழர்களைச் சந்தித்தேன். அஜய்கோஷ் மாறுபெயரிலிருந்தார். “மார்க்சிஸ்ட் இலக்கியங்களை உனக்கு அனுப்புகிறேன். படி” என்று அஜய் என்னிடம் கூறினார். மத்திய நிர்வாகக்குழுவிற்கு இ.எம்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்க நான் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பினேன்.

இச்சமயத்தில்தான் 1934ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டு முடிவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘பிராட்லி - தத் அறிக்கை’ இந்தியாவிற்கு வந்தது. பாசிசத்திற்கெதிராக ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி டிமிட்ரோவின் தத்துவ நிலையையும், காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக, அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென்ற வாங் மிங் தத்துவ நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது பிராட்லி - தத் அறிக்கை. இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட் குழுவிற்காக அனுப்பப்பட்ட இந்த அறிக்கை வந்து சேர்ந்தவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை உத்தி மாற்றப்பட்டது. ஆந்திராவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை அமைக்க சுந்தரய்யா வேலை செய்தார். சென்னையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் வேலை செய்ய பி.எஸ்.ஆர். ஒப்புக் கொண்டார்.  சென்னையில் பி.எஸ்.ஆரும் நானும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முனைந்தோம். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து பணியாற்றுவதை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஏற்றுக் கொண்டார். ஆனால் மசானியும் மற்றும் சிலரும் எதிர்த்தார்கள்.

ஈரோட்டுப் பாதை

1926ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற சுயராஜ்யக் கட்சி மந்திரி சபை பதவியை ஏற்காததால், ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த முனுசாமி நாயுடு முதலமைச்சரானார். அவர் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவ மசோதா’ ஒன்றைக் கொண்டுவந்தார். அதன்படி, அரசாங்க வேலைகளில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிறார்கள் என்று கூறி அரசாங்க வேலைகளுக்கு ஆள் எடுப்பதில் 1 பிராமணர், 2 பிராமணரல்லாதவர்கள், 1 கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று கூறி ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். சுயராஜ்யக் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி அந்த மசோதாவை எதிர்த்தார். சத்தியமூர்த்தி இம்மசோதாவை எதிர்த்ததைக் கண்ட ஈவெரா கோபம் அடைந்தார். காங்கிரஸ் பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்தது. பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தத்தான் சுயராஜ்யம் கேட்கிறார்கள் என்று கூறி வகுப்புவாரி பிரதிநிதித்துவ மசோதாவை வரவேற்றார்.

அந்நேரத்திலேயே, பெரியார் ஈவெரா சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பிறகு கலப்புமணம், புரோகிதர் இல்லாத திருமணம், பெண் விடுதலை, சமூக சீர்திருத்தங்களை ஆரம்பித்து இறுதியில் நாஸ்திகப் பிரச்சாரம் செய்து வந்தார். 1930ம் ஆண்டு ஈவெராவும் எஸ்.ராமநாதனும் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார்கள். அங்கே, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சபூர்ஜி சக்லத்வாலாவைச் சந்தித்து ‘குடியரசு’ பத்திரிகையில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொடுத்தார். சக்லத்வாலாவின் கடிதத்துடன் அவ்விருவரும் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்றார்கள்.

சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலின் தலைமையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றமும், ஜாதி, மத, இன பாகுபாடற்ற ஒரு சோசலிஸ்ட் சமூக அமைப்பும் ஈவெராவை மிகவும் கவர்ந்திருந்தது. எனவே சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பியவுடன் பலமான சோசலிஸ்ட் பிரச்சாரத்தை நடத்த ஆரம்பித்தார். 1931ல் ஈரோட்டில் ஒரு மாநாடு கூட்டி “ஈரோட்டுப்பாதை” என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். கடவுள் மறுப்பு மாநாடு. ஜாதி ஒழிப்பு மாநாடு, லேவாதேவி ஒழிப்பு மாநாடு, ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு, முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு முதலிய பல மாநாடுகளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடத்தினார். இது ஏராளமான வாலிபர்களைக் கவர்ந்திழுத்தது. ஈவெராவின் சோசலிஸ்ட் பிரச்சாரத்தை விரும்பாத ஆங்கிலேய அரசு, இப்பிரச்சாரத்தை ஈவெரா நிறுத்த வேண்டுமென்று ஜஸ்டிஸ் கட்சியிலிருந்த ஈவெராவின் நண்பர்கள் மூலம் சொல்லி அனுப்பியது. இப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால், ஈவெராவும் மற்றும் பலரும் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று கூறியதால், ஈவெரா சோஷலிஸ்ட் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சாரம், நாஸ்திகப் பிரச்சாரம், பிராமணர் எதிர்ப்பு மாநாடு போன்றவற்றில் மட்டும் ஈடுபட்டார்.

ஜீவாவுடன் தொடர்பு

“ஈரோட்டுப் பாதை”யை ஈவெரா கைவிட்ட பின், அதிலிருந்த சில முக்கியமான தோழர்களான ப.ஜீவானந்தம், எஸ்.ராமநாதன் ஆகியோர் 1934ல் “சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி” என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, ஒரு மாநாட்டையும் நடத்தினார்கள். ஜீவாவுடன் அப்பொழுதுதான் நான் தொடர்புகொண்டு பல முறை விவாதங்கள் நடத்தி, அதன்பின் அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர ஒத்துக் கொண்டார். அவர்களுடைய இரண்டாவது மாநாட்டை 1935ம் ஆண்டு திருச்சியில் நடத்தினார்கள். இம்மாநாட்டிற்கு டாங்கேயை வரவழைத்திருந்தார்கள். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு தீர்மானம் ‘சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர வேண்டும்’ என்பதே. எனவே அந்தத் தீர்மானத்தின்படி ஜீவாவும், கே.முருகேசனும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். வெகுவிரைவிலேயே ஜீவா, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஆனார்.

 

;