tamilnadu

img

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத அத்தியாயம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தளகர்த்தர்களாக திகழ்ந்து, தொழிற்சங்கங்களை வழிநடத்தி, தொழிலாளர் வர்க்கத்தை விடுதலைப் போராட்டத்தில் பிரம்மாண்டமான பேரியக்கமாக ஈடுபடச் செய்து, பூரண சுயராஜ்ஜியம் என்ற முழக்கத்தை முதன்முதலில் முழங்கச் செய்து, கம்யூனிச இயக்கத்தை முன்னேறச் செய்த அடிப்படையான இயக்கம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இக்கட்சி துவங்கியதன் 50ஆம் ஆண்டு விழா, 1985ல் கொண்டாடப்பட்டது. அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த ஏடான “மார்க்சிஸ்ட்” (ஆங்கிலம்) ஏட்டில் 1985 அக்டோபர் - டிசம்பர் இதழில், கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. இக்கட்டுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு அம்சத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அது எப்படி பங்காற்றியது பற்றியும் விளக்குகிறார் இஎம்எஸ். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம் என்பது 1934 மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஒரு துவக்கநிலை கலந்தாலோசனை சந்திப்பில் உதயமானது என்று சொல்ல முடியும். அந்த சந்திப்பில் ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவின் கன்வீனராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் பம்பாயில் (தற்போது மும்பை) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; தேசிய தலைமையும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை நான் பெருமையாகக் கருதுகிறேன். காங்கிரஸ்காரர்களை சற்று முன்னோக்கி நகர்த்தி அவர்களில் பலரை முற்போக்குவாதிகளாக இந்த அமைப்பிற்குள்ளேயே மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை உள்ளபடியே பெருமிதத்துடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ்காரர்களை அப்படி மாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததன் மூலம் 1930களில் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான வழியும் பிறந்தது. அத்தகைய ஒரு மகத்தான சோசலிச இயக்கத்தின் அரை நூற்றாண்டு முடிகிற தருவாயில் இதை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டி எழுதுவதில் உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்து செயல்படுமாறு எனக்கு பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணியை உளப்பூர்வமாக ஏற்று செயல்பட்டேன். ஏராளமான இனிய மற்றும் கசப்பான சம்பவங்கள் தொடர்பான நினைவலைகள் இன்றும் என்னை நெகிழச் செய்கின்றன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் நடத்திய அத்தகைய போராட்டங்கள்தான் என்னை, காந்தி-நேரு சித்தாந்தத்திலிருந்து மார்க்சிய சித்தாந்தத்திற்கு கொண்டு வந்தது. சில நண்பர்கள் கூடச் சொன்னார்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமானதன் 50வது ஆண்டான 1984ஐ, இந்திய சோசலிச இயக்கம் உதயமானதன் பொன்விழா ஆண்டாக கொண்டாடுமாறு! ஆனால் அத்தகையப் பார்வையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய சோசலிச இயக்கத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்தது என்ற போதிலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம்தான் இந்திய சோசலிச இயக்கத்தின் உதயம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய சோசலிச இயக்கமானது அதற்கு முந்தைய காலத்திலிருந்தே துவங்கிவிட்டது.  சோசலிச இயக்கத்தின் முன்னோடிகள் இந்தியாவில் சோசலிசச் சிந்தனைகள் உருவானதும் பரப்பப்பட்டதும் 1912ஆம் ஆண்டிலிருந்தே துவங்கிவிட்டது. அந்த காலக்கட்டத்தில் சில மாத இடைவெளிக்குள் இந்தியிலும் மலையாளத்திலும் காரல்மார்க்சின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுவிட்டது. இந்தியில் காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூலை மாபெரும் புரட்சியாளரான லாலா ஹர்தயாள் எழுதினார். மலையாளத்தில் ராமகிருஷ்ண பிள்ளை எழுதினார். 

அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 1908ல் இந்தியாவின் முதல் தொழிலாளி வர்க்க அரசியல் வேலைநிறுத்தம் நடைபெற்றுவிட்டது. பம்பாய் தொழிலாளி வர்க்கம், மகாராஷ்டிராவிலிருந்து இந்தியாவின் மாபெரும் தலைவராக உயர்ந்த கம்பீரமிக்க தேசியத் தலைவரான பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்து பிரம்மாண்டமான அரசியல் வேலைநிறுத்தத்தை நடத்தியது. இந்தியாவில் ஒரு அமைப்பு ரீதியான சோசலிச இயக்கம் உதயமாவதற்கு இந்த இரண்டு முன் நிகழ்வுகளும் அடிப்படை காரணங்களாக அமைந்தன. ஒன்று, அரசியல் ரீதியான உணர்வு பெறாத தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி; மற்றொன்று மார்க்சியம் தொடர்பான அறிமுகம் கிடைக்கப்பெற்று அதைப் பிரச்சாரம் செய்யும் முனைப்பு. இந்த இரண்டும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உருவாகிவிட்டது.  முதலாம் உலகப்போர் முடிந்த உடனே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான புரட்சிகர எழுச்சிகள் நடந்தன. இந்த எழுச்சிகள், போர்க்குணமிக்க தேசிய விடுதலை இயக்கத்தை அடுத்தடுத்து முன்னோக்கிக் கொண்டு சென்றது. இந்திய விடுதலைஇயக்க வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும் போராடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கங்களும், மகாத்மா காந்தியால் தலைமை தாங்கப்பட்ட கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுக்கத் தொடங்கினர். தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தன. மாநகரங்களில் முழு அடைப்பு நடந்தது. பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் இருந்தன. உழைக்கும் மக்களின் அனைத்துத் தரப்பினரும் இவற்றில் அணிதிரண்டனர். இதுவே அந்தக் காலக்கட்டத்தில் நமது தேசத்தின் அரசியல் வாழ்வின் அன்றாட காட்சிகளாக இருந்தன. இந்தப் போராட்டங்கள், போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க செயல்பாட்டு வடிவமான வேலைநிறுத்தம் என்ற வடிவத்திற்கு உறுதியான முறையில் மாறின. வேலைநிறுத்தங்களை செயல்படுத்துவதற்கான அமைப்புகள் உருவாகின. தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்த கமிட்டிகள் அமைக்கப்பட்டன. சங்கங்கள் உருவான பின்னணியில், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரது சிந்தனைகளை மக்களிடையே குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினரிடையே பிரச்சாரம் செய்வதற்கான இன்னும் திட்டவட்டமான - முறையான ஏற்பாடுகள் உருவாகின.

(தொடரும்)

;