tamilnadu

img

புதுவையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி கொலை

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
புதுவை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது36). காங்கிரஸ் அமைச்சர் கந்தசாமிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் விழா ஏற்பாடுகளை சாம்பசிவம் செய்து வந்தார். மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுக்க இன்றுகாலை ஊர் பிரமுகர்களை திரட்டி விட்டு பின்னர் சாம்பசிவம் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.
கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் திடீரென சாம்பசிவம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்து விழுந்த சாம்பசிவத்தை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். 
இதில் சம்பவ இடத்திலேயே சாம்பசிவம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சாம்பசிவத்தை வெடிகுண்டு வீசி கொலை செய்த கும்பலை தேடி வருகிறார்கள்.
வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சாம்பசிவத்தின் மைத்துனரான வீரப்பன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று வெடிகுண்டு வீசி வெட்டிகொலை செய்யப்பட்டார். வீரப்பன் அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;