tamilnadu

img

தாய்ப்பாலுக்கு விலை பேசலாமா? - எஸ்.சாம்பசிவன்

மூலதனம் போட்டவன் லாப நஷ்ட கணக்கு பார்க்கலாம். ஆனால்  ஒரு  அரசு மக்க ளுக்கான சேவைகளை செய்யும் போது லாபம், நஷ்டம் பார்ப்பது தாய்ப் பாலுக்கு விலை பேசுவது போன்றது. ஒரு முதலாளி போட்ட மூலதனத்திற்கு கணக்கு பார்ப்பது போல  அரசும் கணக்கு பார்ப்பதற்கு சில  வரையறை உண்டு.   அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. 

பிரிட்டிஷார் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷ மான பொதுத்துறையான ரயில்வே துறை கடந்த 65  ஆண்டுகளில் மிகப்பெரியளவில் வளர்ந்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் அமுத சுரபியாக  இருந்தும் வருகிறது. ஐமுகூ ஆட்சியில் லாபமீட்டிடும் ரயில்வே துறையை முன்னாள் ரயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டின் போது பாராட்டி பேசியதை மறந்திட முடியாது. அவர் பாராட்டி பேசி 5 வருடங்கள் தாண்டிய போது முழுவதும் நஷ்டமென்று பாஜக அரசு  எப்படி அறிவித்தது ஆச்சரியமே. சில சமயங்களில் நஷ்டம் வந்தாலும் அதில் கவனம் செலுத்தி சீர் செய்வதே அரசின் கடமை. 

50 ஆண்டுகளுக்கு முன்பே

கடந்த 2014 ல் பாஜக  அரசு ஆட்சிக்கு வந்தவு டனே லாப, நஷ்டம் பார்க்காமலே 100 %ரயில்வே தனியாருக்கு வழங்கப்படும் என்று  எப்படி  அறிவித்தார்?  அது தான் பாஜகவின் தனியார்மய கொள்கையாகும். 1971 ல் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில்  ஒரு பாஜக எம்பி ரயில்வேயில் தனியார்மயத்தை  அனுமதிக்க வேண்டும் என்று 50 வருடத்திற்கு முன்பே பட்ஜெட்டின் போது பேசினார்.  அதற்கு பிரதமர்  இந்திரா காந்தி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.   இப்போது  அதே பாஜக ஆட்சிக்கு வந்தி ருக்கும் போது ரயில்வேயை தனியார்மயமாக்கிட தீவிரமாக களமிறங்கி  உள்ளது. தனியார் மயமும், மத வெறியும் பாஜகவின் ரத்தத்தில், உணர்வில் ஊறிப் போன நாற்றமாகும். அதனால் தான் பிஎஸ்என்எல், விமான நிறுவனங்கள், நிலையங்கள், உருக்காலை, பாதுகாப்பு துறையில் உற்பத்தி என முக்கியமான பொதுத் துறைகளை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்கிறது. 

ரயில்வே துறை முழுக்க, முழுக்க மக்களின் சேவைத் துறை. மக்களின் பயன்பாட்டிற்கு  தேவையா னவற்றை அளிக்க வேண்டிய அரசு, சேவைகளுக்கு விலை பேசுகிறது.  அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அமலுக்கு வருகிறது. 1991 ல் காங்கிரஸ்  ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளினால் ஜனனமான தனியார்மயம் பாஜக ஆட்சியில் பீடுநடை போடுகிறது.  அரசு துறை களை தனியாருக்கு கொடுத்தே தீருவது  என்ற பிடி வாதத்தோடு பாஜக  அரசு நஷ்டம் இழப்பு  என்ற பொய்களை அளந்து விடுவதற்கு அளவேயில்லை. 

திட்டமிட்ட மறைப்பு

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐமுகூ ஆட்சியின் போது லாபம் தந்த ரயில்வே  திடீரென நஷ்டம்  என்று பாஜக சொல்வதற்கு  என்ன காரணம்? ரயில்வே யில் நஷ்டம்,  இழப்பு  என்று  அரசும், மந்திரிகளும் நாள் தவறாது ஒப்பாரி வைத்து மயானத்திற்கு கொண்டு போவதற்கு என்ன காரணம்?  அனைவரும் நம்பும் படியாக அவர்களது ஒப்பாரி ஜொலிக்கிறது. ஆனால் லாபத் திற்கான காரணங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. 

சிறப்பு வண்டிகளிலும், சூப்பர் பாஸ்ட், பிரிமியம், ராஜதானி ரயில்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் ஆண்டு வருமானம் பெருகி உள்ளது. வண்டிகளில் ஏசி பெட்டிகள் அதிகமாக  இணைக்கப்பட்டும், ஏசி வண்டிகள் மட்டுமே அதிக மாக  இயக்கப்படுவதாலும் ஆண்டு வருமானம் பெருகி உள்ளது. உதாரணமாக 3 ஏசி டயர்களில் 1041 கோடியும், ஏசி சேர் பெட்டிகளினால் 118 கோடி யும் லாபம் கிடைத்துள்ளது. சரக்கு வண்டிகளினால் 2800 கோடி வருமானம் வந்துள்ளது. ஆனால் பாசஞ்சர் கட்டணத்தில் 400 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  அதற்கு காரணம் கட்டணபதிவு சார்ஜ், அதிக கட்டண உயர்வு  என்பதாகும். இதை அரசு சரி செய்திருந்தால் சரிவை சரிக்கட்டி யிருக்கலாம்.

தகரும்  பொய்யுரைகள்

தென்னக ரயில்வேயில் 2019 நடப்பு  நிதி யாண்டில் 6 ஆயிரத்து 310 கோடியும், பயணிகள் மூலம் 3 ஆயிரத்து      7 கோடியும் வருமானம் வந்துள்ள தாகவும், 2.59% வருமானம் உயர்ந்துள்ளதாகவும் பொதுமேலாளர் குடியரசு தின விழாவின் போது பேசியிருக்கிறார். இது தவிர கட்டணங்களால் நேரடியாகவும்,மறைமுகமாகவும், மானியம் வெட்டு மூலமாகவும்  அதிக வருமானம் வருகிறது. எங்கே இழப்பு  நஷ்டம் வருகிறது.? இருந்தாலும் மந்திரியின் பொய்யுரைகளை பல  அதிகாரிகளின் மெய்யுரைகள் தகர்த்து விடுகின்றன. 

ரயில்வேயின் கட்டண உயர்வு, சரக்குக் கட்டண உயர்வு, முதல் வகுப்பு கட்டண உயர்வு.  இதனால் பயணிகளின் பயணங்கள் குறைந்து விட்டதால் நஷ்டம் அரசினால் செயற்கையாக உருவாக்கப்படு கிறது. இதற்கு  அரசின் கொள்ளையடிப்புக் கொள்கை யே காரணமாகும். பயணிகளின் பயணங்களை அரசே திட்டமிட்டு தடுக்கிறது. நஷ்டங்களை, இழப்பு களை அரசே உருவாக்கி பொய்ப் பிரச்சாரங்களின்   மூலம் ரயில்வேயை தனியாருக்கு கொடுத்திடும் திட்டத்தை வெற்றிகரமாக்க முயன்று வருகிறது பாஜக மோடி அரசு. 

தற்சமயம் 150 ரயில்களையும், 100    வழித்தடங்க ளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிடும் வேலை துரிதமாக நடந்து வருகிறது. இந்த தனியார் வண்டிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பது, சலுகைகளைப் பறிப்பது, ஊழியர்களின் பாஸை நிராகரிப்பது போன்ற சர்வாதிகார சுதந்திரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசு கொடுத்துள்ளது. 

பிஎஸ்என்எல் -ஐத் தொடர்ந்து...

தண்டவாளப் பாதை, மின் பாதைகளை போடாமலே கோச்சுகளை, இஞ்சின்களை வாங்காமலே, எந்த முதலீடும் இல்லாமலே அப்படியே ரயில்வே துறையை தனியாருக்கு கொடுத்து பல்லாயிரம் கோடிகளை தனியார் சுருட்டிச் செல்வதற்கு மோடி அரசு பாதை போட்டு கொடுக்கிறது. பிஎஸ்என்எல்  ஐ தொடர்ந்து  இப்போது ரயிலும் சிக்கியுள்ளது. 

நமக்கு சந்தேகமும்  ஒரு கேள்வியும்  எழுகிறது. நஷ்டம், இழப்பு என்று சொன்னால் எந்த முதலாளி யோ, கார்ப்பரேட்டுகளோ ரயில்வேயை வாங்கிட முன் வருவார்களா? நஷ்டம் என்று தெரிந்தே யாரா வது இழப்பை விலை கொடுத்து வாங்குவார்களா? லாபம்  இல்லாமல் யாரேனும் முதலீடு செய்வார் களா? லாபத்தை மறைத்து கடன், நஷ்டம்  என்று மந்திரம்  ஓதுகிறது மோடி அரசு. அப்படியே நஷ்டம் இருந்தாலும்  அதை சீர் செய்யாமல் அப்படியே தனி யாருக்கு  அள்ளிக் கொடுக்கும்  அதிகாரத்தை பாஜக  அரசுக்கு யார் கொடுத்தது. ?கடினமாக  உழைத்து மக்களால்  உருவாக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை, அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்ப தற்கு மோடி அரசுக்கு யார்  அதிகாரம் கொடுத்தது? 

லாபத்தில்  இயங்கி வந்த  பிஎஸ்என்எல் -லின் கழுத்தை நெரித்து நஷ்டமடையக் காரணமான வர்கள் யார்? ஏர் விமானங்கள் கடன் வலையில் சிக்கிட  காரணம் யார் ? தனியார் விமான சேவை களும், விமானங்களும், தனியார் தொலை தொடர்பு சாதனங்களும், செல் இணைப்புகளும் லாபத்தோடு இயங்கும் போது அரசு துறைகள் மட்டும் நஷ்டத் தோடு இயங்குவதற்கு  காரணம் யார்?  அனைத்துக் குமே அரசின் தனியார்மய கொள்கைகள் தான் காரணம். அரசு துறைகள் தனியார் கைகளில் போவ தற்கு தடையாக நாம் நமது போராட்டங்களை தீவி ரப்படுத்திட வேண்டும். நம்மால் முடியும். 

;