திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

முகநூலில் தேர்தலுக்கான விளம்பர செலவுகளில் பா.ஜ.க முதலிடம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக முகநூலில் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளில் அதிக செலவு செய்யும் கட்சியாக பா.ஜ.க உள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்களின் பரப்புரைகளுக்கான விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், முகநூல் நிறுவனத்தின் விளம்பர நூலக பிரிவு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் விளம்பரங்களுக்காக செலவு செய்தது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் அரசியல் கட்சிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 10 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க அரசு தனது விளம்பர செலவுக்காக மட்டுமே ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பணத்தை செலவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி பா.ஜ.க அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 4343 கோடி ரூபாயை செலவு செய்திருந்தது. பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டம் என அறிவிக்கப்பட்ட ’பேடி பாச்சோ பேடி பாத்தோ’ திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மொத்த நிதியில் 56 சதவிகித நிதியை விளம்பரத்திற்கு மட்டுமே மத்திய அரசு செலவு செய்ததும் ஆட்சியின் அவலநிலையை வெளிக்கொணர்ந்தது.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த பட்டியலிலும் வழக்கம்போல் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விளம்பரங்களுக்கு 2.23 கோடி செலவு செய்து முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பா.ஜ.கவின் பாரத் கி மான்கி பாத் என்ற பக்கத்தை சார்ந்தவர்கள் விளம்பரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்து அதிக செலவு செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


;