tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - எஸ்.ஏ.பெருமாள்

கவிஞர் கன்னிவாடி பச்சை நிலா

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வாழ்ந்த கவிஞர் பச்சை நிலா ஒரு அற்புதமான கவிஞர். அவரது இயற்பெயர் துரைராஜ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார். அவர் ஏராளமான பாடல்களை எழுதினார். யார் யாரோ அவரிடம் பாடல்களை வாங்கிப் போய் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் பெயர் மட்டும் வெளிவராது. குடத்திலிட்ட விளக்காகவே அவர் வாழ்ந்து மறைந்தார்.  பச்சை நிலா, அடிப்படையில் ஒரு விவசாயி, விவசாயிகளின் வாழ்க்கைத் துயரங்களைத் தனது பாடல்களில் வெளிப்படுத்தினார். கடலை சாகுபடி செய்யும் போது கம்பளிப் பூச்சி தாக்கினால் பெருத்த சேதமேற்படும். அதன் விளைவாக விவசாயியின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை ஒரு பாடலாக்கினார்.

“கடலச் செடியத் தின்னு புடுச்சு கம்பளிப் பூச்சியெல்லாம்- மக்களை (நம்மள) கடனுக்குள்ள மூழ்கடிக்குது சுரண்டும் கூட்டமெல்லாம் வெதக் கடலை வாங்குன வெலைக்கு வௌஞ்ச கடலை வெல கொறஞ்சது - நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்தா வேப்பங் காயாக் கசக்குது சதை எலும்புக்கும் இருந்த சொந்தம் சன்னஞ் சன்னமாக் குறையுது சாமியக் கும்பிட்டா தொல்லை தீருமுன்னு சனங்களெல்லாம் நெனச்சிருக்குது (கடலைச் செடி)” பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் பாடுபடும் விவசாயிகளுக்குப் பாசன வசதி கிடைப்பதில்லை. நூறு அடி ஆழம் வரை கிணறு தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் பாசனத்திற்குப் போதாது. விளைச்சல் பாதித்துவிட்டால் விவசாயி பாடு அதோகதிதான். கண்ணீர் கதைதான். அந்த விவசாயியின் துயரத்தை இந்தப் பாடலைவிட வேறெதுவும் கூறிட முடியாது. கவிஞர் பச்சை நிலா என்று பெயரிட்டுக் கொண்டாலும் அவர் உண்மையில் சிவப்பு நிலாதான். “முக்கா மொழம் நெல்லுப்பயிறு முப்பது கெசம் தண்ணிக்கிணறு நிக்கா மத்தான் தண்ணி எறச்சேன் நெல்லுப் பயிரும் கருகிப் போச்சு”

கவிஞர் பச்சை நிலா கிராமப்புற விவசாயிகள் படும் துயரங்கள், அதை மாற்றுவதற்கான வழிமுறைகள் பற்றித்தான் அதிகம் எழுதினார். வாழ்க்கையை நேரடியாக அனுபவித்து அந்த அனுபவங்களை வெளிப்படுத்தினார். தனது சக மனிதர்களின் வாழ்வை ஊடுருவிப் பார்த்தும் பாடல் எழுதினார். ஏழை மக்களின் வறுமை, துயரங்களை கேட்போர்க்கு கண்ணீர் வரும் வகையில் அவர் பாடல்களை எழுதினார்.  இந்த பாடல் ஒரு தாயும், மகளும் பாடுவது போல எழுதப்பட்டதாகும். வாழ்க்கை இந்த கிராமத்து அனாதரவான மனுஷிகளை என்னவாய் அலைக்கழிக்கிறது. பள்ளி மாணவியான அந்தச் சிறுமி கிழிந்த பாவாடை சட்டைக்குப் பதில் புதிது கேட்கிறாள். பள்ளியில் சகதோழிகள் அவளது கிழிந்த ஆடைகளைப் பார்த்துக் கேலி பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதாபத்துக்குரிய தனது தாயிடம் கோரிக்கை வைக்கிறாள். தாய் தனது துயரம் தோய்ந்த வாழ்க்கையை மகளுக்கு எடுத்துச் சொல்கிறாள். உடுமாற்றுச் சேலை கூட இல்லாமல் ஒட்டுப்போட்ட சேலையோடு அவள் வாழ்க்கையுடன் போராடுகிறாள். படித்தபின் வேலை கிடைக்காத துயரத்தில் தனது ஒரே மகன் தற்கொலை செய்ததையும், அவனைத் தொடர்ந்து தனது கணவனும் மரித்த கதையையும் கூறுகிறாள், சமூகச் சூழலையும் எடுத்துக்கூறி தனது மகளான அந்தச் சிறுமிக்கு வாழ்க்கை இதுதான் என்று கூறித் தனது கையறு நிலையைத் தெரிவிக்கிறார். இதோ அந்தப் பாடல்:

“அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே -என்னை பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே”  இந்த பாடலை கேட்போர் கூட்டத்திலிருந்து அழுகையும் கேவல் சத்தமும் வரும். பச்சை நிலா ஆளும் வர்க்கங்களைப் புலியாகவும், வாழ்வு சூறையாடப்பட்ட விவசாயியை எருது மாடாகவும் கூறி புலியை எதிர்த்துப் போராட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். இதோ அந்தப் பாடல்

“ஒத்தமாடு செத்துப் போச்சு ஒத்தமாடு வாங்கிவர பத்துப் பேர கேட்டுப் பாத்தேன் பணங் கிடைக்கலையே - இப்போ நெல்லுநாத்து வாங்கி நட பணங் கிடைக்கலையே (ஒத்த மாடு) பொழுது விடிஞ்சா தேடுன ஆளுக புத்தி சொல்ல வாராங்க பொருளக் காட்டி பணமுங் கேட்டா பொரணி பேசி போறாங்க” புலி வாழ வேண்டுமானால் மானைவிட வேகமாக ஓடியாக வேண்டும். மான் உயிர் வாழ வேண்டுமானால் புலியை விட வேகமாக ஓடியாக வேண்டும். வாழ்க்கைப் போராட்டம் இப்படியே தொடர்கிறது. புலிகள் வாழும் வரை காட்டில் மான்கள் அமைதியாய் வாழ முடியாது. சுரண்டல் தொடரும் வரை நாட்டில் மக்கள் இன்ப வாழ்க்கையை எட்டிக்கூடப் பார்க்க முடியாது. இதைக் கலைநயத்தோடு மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் கவிஞர் பச்சை நிலா.

தனது பாடல்களை கலைஞர்கள் பாடும் போது, மிகவும் உன்னிப்பாக அதை காது கொடுத்து கேட்பார். தான் எழுதியது மக்களுக்கு புரிகிறதா என்பதற்காக கூட்டத்திலிருப்போரையும் கவனிப்பார். என் போன்ற தோழர்கள் அவரோடு பேசுகிற போது சொல்லுகிற ஆலோசனையை புறம் தள்ள மாட்டார். உதாரணமாக, “உங்கள் பாடல்களில் வாழ்க்கை துயரங்களையும், வறுமையையும் திறம்பட எடுத்துச் சொல்கிறீர்கள். ஆனால் அதை மாற்றுவதற்கு வழி சொல்லாமல் செல்கிறீர்கள்” என்ற போது எந்தப் பாட்டச் சொல்ற என்று கேட்டார். உதாரணமாக கடலச் செடி பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. ஆனால் அதன் முடிவில் நம்முடைய கட்சி என்ன வழிகாட்டுகிறது என்று இருக்க வேண்டாமா என்று சொல்கிற போது அவர் உடனே எழுதிக்கோ என்று கூறிவிட்டு, 

“செங்கொடி தான் சீக்கிரத்தில  ஜெகமெல்லாமும் பறக்கனும்- தில்லி செங்கோட்டையில் நம்முடைய  ஜெண்டாதானே பறக்கனும் எழுபத்தைந்து குடும்பங்களின்  கொட்டம் அடக்கனும்- அவங்க எடுபிடிகள் கூட்டத்தையெல்லாம்  சிறையில் தள்ளி அடைக்கனும்”  -என்று சொல்லி முடித்தார். அவர் நிறைய பாடல்களை எழுதினார். கன்னிவாடியில் அவர் வீட்டுக்கு பல சினிமாக்காரர்கள் வந்து பாடலை பெற்று செல்வதாகச் சொல்வார். அவற்றை யார் பயன்படுத்தினார்கள் என்பதும் அவருக்கு நினைவில் இல்லை. அந்த மகத்தான கவிஞர் மறைந்துவிட்டார். அவரது பாடல்கள் தொகுக்கப்படாமலேயே உள்ளன. தலைசிறந்த கிராமப்புற கம்யூனிஸ்ட் கவிஞர் பச்சை நிலா.  

;