tamilnadu

img

சிஐடியு மாநாட்டை நோக்கி புதுவை தியாகிகள் ஜோதி பயணம்

புதுச்சேரி, ஜன. 19-சென்னiயில் நடைபெறவுள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டுக்கான புதுவை ஜூலை 30 தியாகிகளின் நினைவு ஜோதி பயணம் துவக்கவிழா, புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவரங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன-19) நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார்.  சிஐடியு தமிழ் மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஜோதி பயணக்குழுத் தலைவருமான வி.குமார் பயணக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், தியாகிகள் நினைவு ஜோதி பயணம் ஜனவரி 19ஆம் தேதி துவக்குவதற்கு ஒரு வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியத் தொழிலாளி வர்க்கம் முதன் முதலில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இதே நாளில் 1982ல் நடத்தியது. அத்தகைய வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய தினத்தில் சிஐடியுவின் அகில இந்திய மாநாட்டுத் தியாகிகள் நினைவு பயணம் தொடங்கியுள்ளது. 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த தியாகிகளின் உரிமையை மத்திய மாநில அரசுகள் பறித்து வருகின்றன. 44 தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து தரப்பட்ட தொழிலாளர்களையும் ஓர் அணியில் திரட்டும் பணியில் சிஐடியு ஈடுபட்டுள்ளது என்றார்.
எஸ்.வாலன்டினா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் எஸ்.வாலன்டினா ஜோதி பயணக் குழுவை வாழ்த்திப் பேசுகையில், இந்திய நாட்டில் முதல் புரட்சியான கப்பற்படை எழுச்சியிலிருந்து சுதந்திரப் போராட்டம் முதல் இன்று வரை எண்ணற்ற போராட்டங்களில் செங்கொடி தியாகிகள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். எனவே செங்கொடி இயக்கத்தை புறந்தள்ளி மத்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் செயல்பட முடியாது. நாட்டில் 45கோடி பேருக்கு அதிகமானோர் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கான திட்டத்தை உருவாக்குவதற்கு மாறாக, ஒரு விழுக்காடே உள்ள உயர்ந்த செல்வந்தர்களுக்கான திட்டத்தை மத்திய பாஜக ஆட்சியாளர்கள் செயல்படுத்துகிறார்கள்.  எனவே தான் ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்தும், தியாகிகள் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்க சிஐடியு போராடி வருகிறது என்றார். சிஐடியு தமிழ் மாநில தலைவர் பி.கருப்பையன், சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி, விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் உலகநாதன், சிஐடியு கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, மாவட்ட தலைவர்கள் பழனிவேலு, குப்புசாமி, விஜயகுமார், செந்தில், வீராச்சாமி, முத்துகுமரன், மூர்த்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஜோதி பயணத்தை வாழ்த்திப் பேசினார்கள்.
ஜோதி பயணம்
புதுச்சேரி மூத்த தொழிற்சங்க தலைவர் தா.முருகன் புதுவை ஜூலை 30 தியாகிகளின் நினைவு ஜோதியை எடுத்துக்கொடுக்க, அதனை சிஐடியு பிரதேச செயலாளர் ஜி.சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.ஜோதி பயணத்திற்கு மலர்தூவி முழக்கமிட்டு வரவேற்புஅளிக்கப்பட்டது.

;