அறந்தாங்கி, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாமி(வி)லேண்ட் மார்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.வெங்கடாசலபதிக்கு பொருளாதார உச்சி மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் சமீபத்தில் சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி, தென்ஆப்பிரிக்கா குவாசுலு நிதி அமைச்சர், ரவி பிள்ளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதுச்சேரி மாநில அரசின் வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் மூர்த்தி, நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறையை சேர்ந்த தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உலக அளவில் உள்ள தொழில் மற்றும் முதலீடு குறித்து பல்துறை அறிஞர்கள் உரையாற்றினர். மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 சாதனையாளர்களுக்கு ‘உலகத்தமிழர் மாமணி விருதினை’ வழங்கி கவுரவித்தார். இதில் குவைத்தில் தொழில் புரிந்து வரும் அறந்தாங்கி சாமி (வி) லேண்ட் மார்க்ஸ் நிர்வாக இயக்குனர் பி.வெங்கடாசலபதிக்கு (சாமி (பி) வெங்கட்) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை வளர்ச்சி கழக நிறுவனம் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார நிறுவன அமைப்பாளர் முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் இந்த மாநாட்டினை நடத்தினர். விருது பெற்ற அறந்தாங்கி தொழில் அதிபர் சாமி(பி)வெங்கட்டிற்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.