tamilnadu

img

முப்பெரும் பணிகளில் எப்போதும் தோழர் கே.முத்தையா! - தி.வரதராசன்

பத்திரிகை ஆசிரியராக –- கலை இலக்கிய அமைப்பின் தலைவராக - இலக்கியப் படைப்பாளியாக -– நாடகாசிரியராக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக...இவ்வாறு பன்முகப் பொறுப்புக ளில் பணியாற்றியவர் தோழர் கே.முத்தையா. தாம் வாழ்ந்த காலம்வரையும் இந்தப் பணிகளைத் தவிர சொந்தப் பணி கள் என்று எதுவும் இல்லாதவர் - விரும்பாதவர். தோழர்கள் இவரைக் கனிந்த பிரியமுடன் அழைப்பது “தோழர் கே.எம்.” 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையா கிய “ஜனசக்தி”யிலிருந்து இவரது  பத்திரிகைப் பணி துவங்கு கிறது. தோழர் ஜீவா ஆசிரியராக இருந்த ஜனசக்தியில் 1952 முதல் 1962 வரை பத்தாண்டுக் காலம் தோழர் கே.எம். பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். 1964-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பின்னர் ‘தீக்கதிர்’ வாரப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்றார். இத்துடன் கட்சியின் இலக்கிய மாத இதழாகச் செம்மலர் ஆரம்பிக் கப்பட்டது. நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் முன் முயற்சியில் என்.சங்கரய்யா, எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.முத்தையா ஆகிய தலைவர்களின் ஆலோசனையோ டும் வழிகாட்டலோடும் துவக்கப்பட்டது. 1970 மே மாதம் செம்மலர் முதலாவது இதழ் வெளிவந்தது.  அரசியல் தலை வர்கள் இ.எம்..எஸ். நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, கல்வி அமைச்சர் இரா.நெடுஞ்செழியன், தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், பிரபல எழுத்தாளர் அகிலன் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் செம்மலர் வெளிவந்தது. இதன் முதலாவது ஆசிரியராக நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மலர் ஆசிரியராக கே.முத்தையா பொறுப்பேற்றார். தீக்கதிர் அரசியல் பத்திரிகையையும், செம்மலர் இலக்கிய இதழையும் ஒருசேரத் திறம்பட இயக்கிவந்தார் கே.எம்.

 1975-ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய வானில் இருளைக் கீறி வெளிப்பட்ட ஒளித்தாரகையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- சங்கம் (இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம்) உதயமானது. 1975-77 காலம் என்பது இந்திய தேசம் முழுவதும் எமர்ஜென்ஸி எனும் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட இருண்ட காலம். எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், பத்தி ரிகைச் சுதந்திரம், போராடும் உரிமை, பொதுவெளியில் கூட்டம் நடத்தும் உரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்த காலம். மிசா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. இத்தகைய இருண்ட காலத்தில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமானது. கடும் நெருக்கடிகளும் கைதுகளும் நிறைந்த அந்தக் காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் முதலாவது அமைப்பு மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என்கிற பதைப்பில் தோழர்கள் கே.எம்., அருணன் இருவரும் ஒவ்வொரு நாளும் சந்தித்து மாநாட்டுப் பணிகள் குறித்துத் திட்டமிடுவார்கள்.  

முதலாவது  பொதுச்செயலாளராக கே.எம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க  இந்த மாநாட்டை அருணன், ப.ரத்தினம். காஸ்யபன் ஆகியோர் தலைமையிலான மதுரை மாவட்டக்குழு பெருமுயற்சியுடன் வெற்றிகரமாக நடத்தித் தந்தது. 1975 ஜூலை 12,13 தேதிகளில் மதுரை தமுக்கம் கலையரங்கில் 110 பிரதிநிதிகளோடும், நாரண துரைக்கண்ணன் (தமிழ்நாடு), பி.கோவிந்தபிள்ளை (கேரளா), கோதாவரி பருலேக்கர் (மராட்டியம்) ஆகிய மாநி லங்களிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்களோடும் மாநாடு மிகச் சிறப்பாக-வெற்றிகரமாக நடைபெற்றது. தோழர் கே.முத்தையா மாநிலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரும், சிறந்த இலக்கிய விமர்ச கருமான தோழர் என்.சங்கரய்யா மாநாட்டை வாழ்த்திப் பேசினார். “கடந்த காலத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந்தது போல் இது அழிந்துவிடக் கூடாது என்றார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால், இதற்குத் தெளிவான கொள்கை அடிப்படை உண்டு.”என்று திடமான நம்பிக்கையு டன் வாழ்த்தினார் என்.சங்கரய்யா. கே.எம். எழுதிய “புதிய தலைமுறை” என்ற முழுநீள நாடகமும் மாநாட்டில் நிகழ்த்தப்பட்டது. அன்று அவர் ஒரு நல்ல நாடகாசிரியரா கவும் வெளிப்பட்டார். மதுரையில் மேடையேறிய அவரது மற்றொரு நாடகம் “செவ்வானம்”.

கவிதையில் வடிவச் சர்ச்சை

1970-களில் தமிழில் புதுக்கவிதை ஒரு புதிய வீச்சோடு எழுந்த காலம். இளம் கவிஞர்கள் இதில் ஈர்க்கப்பட்டு புதுக் கவிதைகளை ஏராளமாக எழுதினர். அதனுடன் கூடவே இந்த வடிவம் குறித்து அன்று வாத-பிரதிவாதங்களும் ஆதர வும் எதிர்ப்பும் எழுந்தன. மரபுக் கவிதைகளுக்குப் போலவே புதிய வரவான புதுக்கவிதைகளுக்கும் செம்மலரில் இட மளித்தார் கே.எம். புதுக்கவிதை வடிவத்தை ஆதரித்தும் விமர்சித்தும் எழுதிய கட்டுரைகளையும் பிரசுரித்தார். இரு தரப்புக்கும் இடமளித்தார். வடிவம் எதுவாக இருந்தாலும் சிறந்த உள்ளடக்கமும், கவித்துவ அழகியலும் கொண்ட தாகக் கவிதை அமைந்திருக்க வேண்டும் என்றும், கவித்துவ முள்ள சிறந்த புதுக்கவிதைகள் படைப்பதற்கு இளங்கவி ஞர்கள் பழந்தமிழ்க் கவிதைகளைப் படித்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உற்சாகப்படுத்து வார்.

இதழியல் பேராசிரியர்போல்...

 புதிதாகத் தீக்கதிர் ஆசிரியர் குழுப் பணியில் சேர்ந்தி ருக்கும் தோழர்க்குப் பத்திரிகைக்கு எப்படி எழுதுவது என்பது பற்றி ஒரு பல்கலைக் கழக இதழியல் பேராசிரியர்போல் கற்றுத்தருவார். ஒரு செய்தியை எழுதுகிறபோது முதலில் டேட் லைன், பிறகு இண்ட்ரோ, தொடர்ந்து செய்தியின் விவ ரங்களை எழுத வேண்டும், செய்திக்குத் துணைத் தலைப்பு கள் இடவேண்டும் என்று சொல்லிக் கற்றுத் தருவார். ஆசிரி யர் குழு அறையில் பெரிய அளவில் உலக மேப் ஒன்று உள்ளது. ஆசிரியர் குழுத் தோழர்களுக்கு சோசலிச நாடுகள் உள்பட ஒவ்வொரு நாட்டின் தற்கால அரசியல் நிலவரம் பற்றியும், அந்நாட்டின் கடந்த கால வரலாறு பற்றி யும் நாட்டின் வரைபடத்தை ஒரு குச்சியால் தொட்டுக்காட்டி விளக்கிக் கூறுவார். 

ஓய்வற்ற இயக்கம்

ஒவ்வொரு நாளும் இரவில் டெலிபிரின்டர் மூலம் ஆங்கிலத்தில் வால்வாலாக வரும் மாநில-தேசிய-சர்வதே சியச் செய்திகளைக் கிழித்து வகைவாரியாகத் தொகுத்து வைத்துப் பின்னடித்து மறுநாள் காலை 10 மணிக்கு நடை பெறும் ஆசிரியர் குழுக் கூட்டத்தின்போது அவற்றை மொழி பெயர்த்து எழுதுவதற்காக உரிய தோழர்களுக்குப் பிரித்துத் தருவார். அன்றாடம் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்த விஷயம் குறித்துத் தலையங்கம் எழுதுவார்; அல்லது மற்றத் தோழர்க்கு அந்தப் பொறுப்பைத் தருவார். ஒரு மிகச் சிறந்த பத்திரிகை ஆசிரியர்க்குரிய முழுப் பரிமாணத்தோடு செயல்பட்டார் கே.எம். தொடர்ந்து தீக்கதிருடன் செம்மலர்ப் பணி அல்லது எழுத்தாளர் சங்கப் பணி வந்துவிடும்...முப்பணிகளில் ஏதேனும் ஒரு பணி மாறிமாறி இடையின்றி இருந்துகொண்டே இருக்கும். இரவு 10 மணிக்கு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருப்பார் கே.எம். சுதந்திரப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கப்பலோட்டிய வ.உ.சிதம்ப ரனாரின் பேரன் ஆ.சண்முகசுந்தரம் ஆகியோர் கே.எம்.முடன் இணைந்து  ஆசிரியர் குழுவில் பணியாற்றினர். 

கே.எம். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தாம் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து ஓய்வுபெற்று சென்னையில் தமது இல்லத்தில் குடும்பத்தாருடன் இருந்த சமயம் சுயசரிதம் எழுத விரும்பினார். ஆனால் அது முடியாமலே போனது.  சுயசரிதம் வேலை நடக்கவில்லையென்றாலும் தோழர் கே.எம்.அவர்களின் வரலாற்றைப் பாராட்டத்தக்க விதத்தில் நூலாக எழுதிப் பதிவுசெய்துவிட்டார் வரலாற்றாசிரியர் தோழர் என்.ராமகிருஷ்ணன். 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் ச.செந்தில்நாதனின் முன்னுரையுடனும், எழுத்தாளர்  மேலாண்மை பொன்னுச்சாமியின் அணிந்துரையுடனும் “கே.முத்தையா: எழுத்துலகில் அரை நூற்றாண்டு”  என்ற வாழ்க்கை வரலாற்று  நூலை என்.ராமகிருஷ்ணன் எழுதி வெளியிட்டார்.  மற்றும் இவர் கே.எம்.மின் 69 ஆய்வுக் கட்டு ரைகளைத் தொகுத்து “தமிழ் இலக்கியம்: ஒரு பார்வை” என்ற தலைப்பில் பெரிய நூல் ஒன்றும், கே.எம்.முடன் பணி யாற்றிய தோழர்களிடம் பேட்டி கண்டு தொகுத்து ஒரு நூலும் வெளியிட்டிருக்கிறார். 

படைப்பு நூல்கள் பல

தோழர் கே.எம். எழுதிய நூல்கள் உலைக்களம், விளை நிலம் இரண்டும் நாவல்கள்; செவ்வானம், ஏரோட்டி மகள், புதிய தலைமுறைகள் இம்மூன்றும் நாடகங்கள்; தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம், இராமாயணம்-உண்மையும் புரட்டும், சிலப்பதிகாரம்-உண்மையும் புரட்டும் இந்த இரண்டும் ஆய்வு நூல்கள். மற்றும் கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்பது ஆங்கிலத்தி லிருந்து கே.எம். தமிழாக்கம் செய்த நூல். இவற்றுள் உலைக்களம், விளைநிலம் நாவல்களைப் பற்றி பேராசிரி யர் அருணன் தமது ‘பொங்குமாங்கடல்’ நூலில் இவ்வாறு சிறப்பித்துக் கூறியிருப்பார்: “கே.முத்தையா எழுதியுள்ள உலைக்களம் நாவலும், விளைநிலம் நாவலும் தமிழ் நாவல் வரலாற்றில் தனி இடம் பெறுகின்றன. 1948 முதல் 1962 வரை தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் போக்குக ளைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்களின் இலக்கிய வடிவங்கள் இவை என்பது ஆய்வாளர்களின் மதிப்பீடு.”

இன்றைய தினத்தில் அந்த உத்தமத் தலைவரின் நினைவை நாம் போற்றுவோம்!

இன்று (ஜூன் 10) தோழர் கே.முத்தையா நினைவு நாள் 

;