மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட செருகுடி, ஐவேலி, நெய்வாசல்,கீழ்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.பெயரளவிற்கு கூட அதிகாரிகள் வந்து பார்வையிட வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நெய்வாசல், செருகுடி பகுதியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் ஒட்டுமொத்தமாக நீரில் மூழ்கி முளைத்து விட்டதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட அப்பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத்தலைவர் என்.சந்திரமோகன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொத்தங் குடி கிளை உறுப்பினர்கள், விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.